பக்கம் எண் :

சூதுபோர்ச் சருக்கம் 294

பத்தில், கங்குலில் - அவ்விராப்பொழுதில், தடம் கண் துயின்ற பின் -
பெரியகண்களை மூடிக்கொண்டு நித்திரைசெய்த பின்பு,- பொங்கு உலை படும்
பொன் தசும்பு என-எரிகின்ற உலைக்களத்திற் பொருந்தியவொரு
பொற்குடம்போல, செம் குலம் கதிர் திகிரி தோன்ற - சிவந்த தொகுதியாகிய
கிரணங்களையுடைய சூரியன் உதயமாக, (எ - று.)- 'தூயவன்
கண்படையுணர்ந்து' என, அடுத்த கவியோடு  தொடரும்.

     திகிரி - சக்கரம்: அதுபோலவே வட்டவடிவமுடைய சூரியனுக்கு
உவமையாகுபெயர்.  சூரியனுக்குப் பொற்குடமும், அவனைச் சுற்றி விளங்குங்
கிரணங்கட்கு அப்பொற்குடத்தின் சுற்றுப்பக்கமெல்லாம் எரியும் உலைக்கனலும்
ஒப்பா மென அறிக; தற்குறிப்பேற்றவணி.  மண்டபம் மேகமண்டலத்திலும்
உயர்ந்திருத்தலால், மேகங்கள் சூழ்ந்து செல்லவேண்டியதாயிற்று.
மங்குல்சுற்றுமா மண்டபம் - தொடர்புயர்வுநவிற்சியணி; மேகத்திற்கும்
மண்டபத்திற்கும் தொடர்பு இல்லாதிருக்கவும் சம்பந்தங் கற்பித்துக் கூறியமை
காண்க.                                                  (301)

149.- தருமபுத்திரன்தம்பியருடன் காலைக்கடன்கழித்து
இனிதிருத்தல்.

பாயன் மன்னுகண் படையுணர்ந்துளந்
தூய வன்பொலஞ் சுடர்பணிந்தபின்
சாயை யன்னதன் றம்பிமாரொடுஞ்
சீய மென்னவே திகழ வைகினான்.

     (இ -ள்.) உளம் தூயவன்-பரிசுத்தமான மனத்தையுடையவனாகிய
தருமபுத்திரன்,-பாயல் மன்னு கண்படை உணர்ந்து-படுக்கையிற் பொருந்திய
நித்திரை தெளிந்து எழுந்து, பொலம் சுடர் பணிந்த பின்-அழகிய கிரணங்களை
யுடையவனான சூரியனை நமஸ்கரித்தபின்பு, [காலைக்கடன்கழித்த பின்பு],-
சாயைஅன்ன தன் தம்பிமாரொடும் - (விடாது தொடர்கின்ற) நிழலையொத்த
(வீமன் முதலிய) தம்பிமார் நால்வருடனும், சீயம் என்ன - சிங்கம்போல, திகழ
வைகினான்-(தனது) பெருமிதந் தோன்ற (விதுரனது மாளிகையில்)
தங்கியிருந்தான்; (எ - று.)

     கண்படை - கண்படுதல்: தூங்குதல்.  பொலஞ் சுடர் - பண்புத்தொகைப்
புறத்துப்பிறந்த அன்மொழித்தொகை: அடையடுத்த ஆகுபெயருமாம்.  விடாது
தொடர்தலில் வீமன் முதலியோர்க்குச் சாயை உவமை.  சாயை - சாயா என்ற
வடசொல் ஆவீறு ஐயாயிற்று.  சீயம் - ஸிம்ஹம் என்ற வடசொல்லின் சிதைவு.
                                                        (302)

150.-தருமபுத்திரனதுகொடைச்சிறப்பு.

முனிவ ரர்க்கெலா முதன்மை யாகவே
தனத னிற்பெருந் தானமுய்த்திடும்
பனுவல் வித்தகப் பாவலர்க்கெலாங்
கனமெ னத்தருங் கனகமாரியே.