(இ-ள்.) (அப்பொழுது தருமபுத்திரன்),-முனிவரர்க்கு எலாம் - சிறந்த பிராமணர்கட்கெல்லாம், முதன்மை ஆக - மிகவுஞ்சிறப்பாக, தனதனின்- குபேரனைப்போல, பெரு தானம் உய்த்திடும் - மிக்க தானங்களைச் செய்வானாயினான்; (அன்றியும்), பனுவல் வித்தகம்பாவலர்க்கு எலாம்- நூல்களில் தேர்ந்த அறிவையுடைய கவிபாடுதலில்வல்ல புலவர்கட்கெல்லாம், கனகம் மாரி - பொன் மழையை, கனம் என தரும்-மேகம் போலப் பொழிவானுமாயினான்; செல்வமிகுதிபற்றிக் குபேரனும், கைம்மாறுகருதாது கொடுத்தல் பற்றி மேகமும், தருமபுத்திரனுக்கு உவமை. குபேரன் ஈகைக்குணமுடையானென்பதை, அவனுக்கு வழங்கும் 'தநதன் [பொருளைக் கொடுப்பவன்]' என்ற அவன்பெயரே வற்புறுத்தும்; "தநதேந ஸமஸ் த்யாகே" "த்யாகேச தநதோயதா" என்றார் ஸ்ரீவால்மீகி பகவானும். 'கநம்' என்ற வடமொழிப்பொதுப்பெயர் - சிறப்பாக இங்கே பொன்மழைபொழியுந் தன்மையதான 'புட் கலாவர்த்தம்' என்ற மேகத்தைக் குறிக்கு மென்னலாம். உய்த்திடும், தரும்-செய்யுமென்முற்றுக்கள் ஆண்பாலுக்கு வந்தன. (303) 151.-இதுவும் அது. கண்டு கண்டுதன் கழல்வ ணங்குமா மண்ட லேசரு மாலைமன்னரும் கொண்டு வாழ்வுறக் குரகதங்குடை தண்டு சாமரந் தந்திநல்குமே. |
(இ -ள்.) (பின்னும் அத்தருமபுத்திரன்), கண்டு கண்டு தன் கழல் வணங்கும் - (ஆதரத்தோடு) பலமுறை கண்டு தனது பாதங்களை வணங்குகிற, மா மண்டல ஈசரும் - பெரிய மண்டலாதிபதிகளும், மாலை மன்னரும் - மலர்மாலையணிந்த குறுநில மன்னர்களும், கொண்டு வாழ்வு உற - பெற்றுவாழும்படி, (அவர்கட்கு), குரகதம் - குதிரைகளையும், குடை - குடைகளையும், தண்டு - பல்லக்குகளையும், சாமரம் - சாமரங்களையும், தந்தி - யானைகளையும், நல்கும் - கொடுப்பானாயினான்; (எ - று.) மண்டலேசர் - குணசந்திபெற்ற வடமொழித்தொடர்: இவர், நாற்பது கிராமத்தை யாள்பவர். தண்டு-த்வஜதண்டமும், கதாயுதமுமாம். சாமரம்- சமரமென்னும் மானின் வால்மயிரினாற் செய்யப்பட்டதோர் இராசசின்னம். தந்தீ - தந்தத்தையுடையது; வடமொழித் தத்திதாந்தநாமம். (304) 152.-கவிக்கூற்று. பூந்தண் மாமலர்ப் பூவைகொங்கைதோய் ஏந்து தோளினா னிவணிருந்துழிப் பாந்த ளங்கொடிப் பார்மகீபனைச் சேர்ந்த மன்னர்தஞ்செயல்வி ளம்புவாம். |
(இ -ள்.) பூ தண் மா மலர் பூவை - அழகிய குளிர்ந்த சிறந்த தாமரை மலரில் வசிக்கின்ற இலக்குமிபோன்ற திரௌபதியினது, |