கர்ணனும், மாசு இல்தந்தை - குற்றமற்ற தந்தையாகிய திருதராட்டிரனும், தந்தை - (அத்திருதராட்டிரனுக்குத்) தந்தை முறையாகின்ற வீடுமனும், கொடு மரம் கை விதுரனும்-வில்தொழிலில் தேர்ந்த கையையுடைய விதுரனும், துரோணனும்-, வான் உலாவுபுகழ் படைத்த மைந்தனும் - தேவலோகத்தளவும் பரவிய கீர்த்தியைப் பெற்றவனும் (அத்துரோணனது) புதல்வனுமாகிய அசுவத்தாமனும், ஏனையோரும்-(கிருபன்முதலிய) மற்றையோரும், வந்து-, கூடி - ஒன்று சேர்ந்து, இனிது இருந்த எல்லை - இன்பமாக வீற்றிருந்தபொழுதில்,-(எ-று.)- 'கொற்றவன் பணிக்க அணுகினான்' என, அடுத்தகவியோடு தொடர்ந்து முடியும். ஆசு இல் தந்தை யென்றும் பிரிக்கலாம்; பொருள் இதுவே, கொடு மரம் - வளைவான மரமென, வில்லுக்கு ஒருபெயர். துரோணன் - பரத்வாஜ முனிவரது குமாரன்: கிருபாசாரிய ருடன்பிறந்தவளான கிருபியின் கணவன்; அசுவத்தாமனது தந்தை; சகல சாஸ்திரங்களையும் தன்பிதாவினிடம் கற்றுப் படைத்தொழிலைப் பரசுராமரிடத்து ஏழுநாளிற் பயின்றவன்; துரியோதனாதியர்க்கும் பாண்டவர்க்கும் அஸ்திரசாஸ்திரங்களைக் கற்பித்த ஆசிரியன். வைதிக விரதாநுஷ்டாநஞ் செய்துகொண்டிருக்கையில் தேவர்களாலேவி யனுப்பப்பட்ட மேநகையின் கட்டழகைக் கண்டு காதல் கொண்ட பரத்துவாச முனிவனது விருப்பத்தால் ஒரு துரோணகும்பத்திற் பிறந்தமை பற்றி, இவனுக்குத் துரோணனென்று பெயர். துரோணகும்பம் - பதக்களவு கொண்ட பாத்திரம்; பதக்கு - இரண்டு மரக்கால். இதுமுதல் முப்பத்தேழு கவிகள் - பெரும்பாலும் ஈற்றுச் சீரொன்று விளச்சீரும், மற்றையாறும் மாச்சீர்களுமாக வந்த கழிநெடிலடி நான்கு கொண்ட எழுசீராசிரிய விருத்தங்கள்;இனி, ஈற்றுச்சீரொன்று விளச்சீரும், மற்றைமூன்றும் காய்ச்சீருமாக வந்த அளவடி நான்குகொண்ட கலிவிருத்தங்களாகக் கொள்ளினும் இழுக்காது. (306) 154.-துரியோதனன் கட்டளையிட,பிராதிகாமி பாண்டவரையழைக்க ஏகுதல். மண்ட பத்தி னழகு காண மன்ன ரைவர்தம்மைநீ கொண்டி மைப்பின் வருக வென்றுகொற்ற வன்ப ணிக்கவே வண்டு சுற்று மாலை மார்பன்வண்பி ராதி காமிவான் அண்டர் கற்ப மெனவி ருந்தவரசர் தம்மை யணுகினான். |
(இ -ள்.) 'மண்டபத்தின் அழகு காண - (புதிதாகக்கட்டிய) மண்டபத்தினது அழகியகாட்சியைக் காணுமாறு, மன்னர் ஐவர் தம்மை - அரசர்களான பாண்டவ ரைவரையும், நீ-, கொண்டு இமைப்பின் வருக - அழைத்துக்கொண்டு கணப்பொழுதில் வருவாயாக,' என்று-, கொற்றவன் பணிக்க - துரியோதனராசன் (பிராதிகாமிக்குக்) கட்டளையிட,-வண்டு சுற்று மாலை மார்பன் வள்பிராதிகாமி - வண்டுகள் சூழ்ந்து மொய்க்கப்பெற்ற மலர் |