சீய மன்ன துணைவ ரோடு சென்று புக்குநன்றியில் பேயி ருந்த தெனவி ருந்த பீடிலானை யெய்தினான். |
(இ -ள்.) (அதுகேட்டு),-புரை இலா மனத்தினான் - குற்றமற்ற மனத்தையுடையவனாகிய தருமபுத்திரன்,- ராயசூயபன்னிதன்னை - (தான்) செய்த இராசசூயயாகத்திற் பத்தினியாயிருந்த திரௌபதியை நோக்கி, 'எந்தை இல்லில் - எனது தகப்பனாகிய திருதராட்டிரனது அரண்மனையில், யாயொடும் - தாயாகிய காந்தாரியினிடத்தில், போய் இருந்து வருக-,' என்று - என்று கட்டளையிட்டு, சீயம் அன்ன துணைவரோடு - சிங்கத்தையொத்த [வீரத்தன்மையிற் சிறந்த] தம்பிமார்களுடனே, சென்று புக்கு - (துரியோதனனது சபையிற்) சென்று புகுந்து, நன்றி இல் பேய் இருந்தது என இருந்த பீடு இலானை - நன்மை சிறிதுமில்லாத பேய் இருந்தாற்போன்று இருந்த பெருந்தன்மையில்லாதவனாகிய துரியோதனனை, எய்தினான் - அடைந்தான்; (எ - று.) அறிவின்றிப் பிறர்க்குத் தீமைசெய்யத் துணிந்ததனால், துரியோதனனுக்குப் பேயை உவமை கூறினார். ராயசூயபன்னி தன்னை, சென்றுபுக்கு நன்றியில், இருந்ததெனவிருந்த - பிராசமென்னுஞ் சொல்லணி. ராஜஸூயபத்நீ - வடசொற்றொடர்: வடமொழி, முதலில் இகரம் பெறாது நின்றது; சிந்தாமணியில் "ராசமாபுரி," "ரவிகுல திலகன்" என்றவை போல. யாயொடும் - உருபுமயக்கம். தருமனைக்கூறியது, தம்பியர் நால்வர்க்கும் உபலக்ஷணம்: மேல்வருமிடங்களிலும் தக்கபடி இவ்வாறு கொள்க. (309) 157.-தருமன் பெரியோர்களைவணங்கி ஆசனத்தில் வீற்றிருத்தல். மன்னி ருந்த பேர வைக்கண் வந்துமுந்தை வரிசையான் முன்னி ருந்த தாதை வம்சமுதல்வன் ஞான விதுரனென்று இன்னி ருந்த தலைவர் தாளிறைஞ்சி முன்ன ரிட்டதோர் மின்னி ருந்த வாச னத்தின்மீதி ருந்து வினவினான். |
(இ -ள்.) (தருமபுத்திரன்),- மன் இருந்த பேர் அவைக்கண் வந்து - துரியோதனராசனிருந்த பெரிய சபையினிடத்தில் வந்து சேர்ந்து, முந்தை வரிசையால்-பழமையான முறைமைப்படியே,- முன் இருந்த - பிரதானமாக வீற்றிருந்த, தாதை - பெரிய தகப்பனாகிய திருதராட்டிரனும், வம்சம் முதல்வன்-(தான் பிறந்த) குலத்திற் பெரியோனாகிய வீடுமனும், ஞானம் விதுரன் - அறிவிற் சிறந்த விதுரனும், என்று இன்ன இருந்த தலைவர் - என்று இவ்வகையான அச்சபையிலிருந்த பெரியோர்களது, தாள் - பாதங்களை, இறைஞ்சி - வணங்கி, முன்னர் இட்டது ஓர் மின் இருந்த ஆசனத்தின் மீது - முன்னே போகட்டிருந்ததாகிய ஒளிவிளங்குகின்ற ஒரு ஆசனத்தின்மேல், இருந்து - வீற்றிருந்து, வினவினான் - வியந்து சொல்வானாயினான்; (எ - று.)- அதனை அடுத்த கவியிற் காண்க. |