காண்டவ வனத்தில் எரியால் இறவாது தப்பி யுய்ந்தவர்-தக்ஷகன் மகனான அசுவசேனனும், மந்தபால முனிவனருளால் தோன்றிய நான்கு பறவைக் குஞ்சுகளும், அருச்சுனனால் அபயமளிக்கப் பெற்றுக் கண்ணபிரானருள் பெற்ற மயனுமேயன்றி வேறில்லை. 1. - தெய்வ வணக்கம் - கிருஷ்ணஸ்துதி. பாண்டவர்கள் புரிந்ததவப் பயனாகியவதரித்துப் பகைத்து மேன்மேன், மூண்டவினை முழுவதுவு முனைதோறு முரண்முருக்கிமுகில்பு காமற், காண்டவமுங் கனல்வயிற்றுக் கனறணிய நுகருவித்துக் காக்கு மாறே, பூண்டருளெம் பெருமானைப்போற்றுவாரெழுபிறப்பு மாற்றுவாரே. |
இது - காப்புச் செய்யுள். இதனால், தாம் பாடத் தொடங்கிய சருக்கம் இடையூறில்லாமல் இனிது முடியும்பொருட்டு உயர்ந்தோர் வழக்கத்தின்படியே கவி கடவுள் வணக்கங் கூறுகின்றார். ஆயின், இந்நூலின் தொடக்கத்திற் கடவுள் வணக்கங் கூறியது போதாதோ! சருக்கந்தோறும் பெரும்பாலும் தனியே கடவுள் வணக்கங் கூறுவானேனென்னின் நூல் ஒன்றேயாயினும் சருக்கங்கள் பொருளால் வேறுபடுதலாலும், நூலின் முதலிடை கடைகளிற் கடவுள்வாழ்த்துக் கூறுதல் மிகவும் மங்கலமாதலாலும், கல்விக்குப் பயன் கடவுளை வணங்குதலே யாதலாலும், இவ்வாறு கூறினரென்க. (இதன்பொருள்.) பாண்டவர்கள் புரிந்த தவம் பயன் ஆகி அவதரித்து - பாண்டுமகாராசனது குமாரர்களான ஐவரும் (முற்பிறப்பிற்) செய்த தவத்தினது பயனேயாகி யுதித்து, - பகைத்து மேல் மேல் மூண்ட வினை முழுவதுஉம் - (அப் பஞ்ச பாண்டவர்கட்குப் பங்காளிகளான துரியோதனாதியர்கள்) பகைமைகொண்டு மேன்மேலும் முயன்றுசெய்த வஞ்சகச் செயல் முழுவதையும், முனைதோறும் முரண் முருக்கி - (அந்தந்தச் செயல் செய்யும்) இடந்தோறும் வலியழியச் செய்து, - முகில் புகாமல் - (மழை பெய்து தணிக்கவந்த) மேகங்கள் அணுகாதபடி (அம்பு தொடுத்து விலக்கி), காண்டவம்உம் - காண்டவ வனத்தையும், கனல் வயிறு கனல் தணிய நுகருவித்து - அக்கினிதேவனுடைய வயிற்றிலுள்ள பசித்தீ அடங்கும்படி அவனுண்ணச் செய்து, காக்கும் ஆறே பூண்டருள் - (எல்லாவுயிர்களையுங்) காக்கும் வகையையே மேற்கொண்டருளிய, எம்பெருமானை - எமது தலைவனான கண்ணபிரானை, போற்றுவார் - துதிப்பவர்கள், - எழுபிறப்பும் மாற்றுவார் - ஏழு வகைப்பட்ட பிறப்புக்களையும் நீக்குபவராவர்; (என்றவாறு)-ஈற்று ஏகாரம் - தேற்றம். வேண்டிய பயன்களை வேண்டியவாறே பெறுவிக்கின்ற தவம் போல, கண்ணபிரான் பாண்டவர்கட்கு வேண்டிய பயன்களை அருள்செய்ததனால், 'பாண்டவர்கள் புரிந்த தவப் பயனாகி அவதரித்து' என்றார். "பொங்கழற்சிந்தைச் சுயோதனன் கங்கைப் புனல் விளையாட்டிடைப் புதைத்த, வெங்கழுமுனையில் விழாம |