பெரியோர்களைக் கண்டால் வணங்குதல் தொன்றுதொட்டு வரும் மரபாதலால், அவ்வாறே, தருமபுத்திரனும், திருதராட்டிரன் முதலிய பெரியோரைவணங்கின னென்க. 'இன்னிருந்த'-பெயரெச்சத்தின் அகரவீறு - தொகுத்தல். 'இன்ன தலைவர்' 'இருந்த தலைவர்' எனத் தனித்தனி இயையும். இனி, இன்இருந்த-இனிமையாக வீற்றிருந்த எனினுமாம்; இனிமையென்ற பண்புப்பெயர்ஈறுபோய் இடை இகரமுங் கெட்டு, 'இன்' என நின்றதென்க; 'இன்னிசை'என்றவிடத்துப்போல. 'வினைப்பகுதி வேண்டிய பொருளை விளைக்கும்" என்பது இலக்கண நூலாரது கொள்கையாதலால், வினவுதல் - இங்கு, வியந்துகூறுத லென்னும் பொருளைத் தந்தது. (310) 158.-துரியோதனன் கட்டியமண்டபத்தைத் தருமன் வியந்து கூறல். இந்த மண்ட பஞ்ச மைந்த வினிமைதன்னை யென்சொல்வேன் முந்தை மண்ட பங்க ளுக்குமுதன்மை யான தேவரூர் அந்த மண்ட பத்து மில்லையதனை யன்றி மண்ணின்மேல் எந்த மண்ட பத்து மில்லையிதனி னுள்ள வெழிலரோ. |
இதுவும், அடுத்த கவியும் - ஒரு தொடர். (இ -ள்.) இந்த மண்டபம் சமைந்த இனிமை தன்னை என்சொல்வேன் - இந்த மண்டபங் கட்டப்பட்ட அழகை [அழகாக அமைந்துள்ளதை]க் குறித்து எவ்வாறு புகழ்வேன் (யான்)? இதனின் உள்ள எழில் - இம்மண்டபத்திலுள்ள அழகு,-முந்தை மண்டபங்களுக்கும் முதன்மை ஆன-பழைய எல்லாச் சபாமண்டபங்களுள்ளுஞ் சிறந்ததாகிய, தேவர் ஊர் அந்தமண்டபத்தும் - தேவலோகத்திலுள்ள அந்தச் (சுதன்மையென்னுஞ்) சபாமண்டபத்திலும், இல்லை-; அதனை அன்றி - அந்தத் தேவலோகத்து மண்டபத்தையே யல்லாமல், மண்ணின்மேல் எந்த மண்டபத்தும் - இப் பூவுலகத்திலுள்ள எந்த மண்டபங்களிலும், இல்லை-;(எ - று.)-அரோ-ஈற்றசை. தேவலோகத்துச் சுதன்மையினும், இவ்வுலகத்து எல்லா மண்டபங்களினும் இம்மண்டபமே சிறந்ததென, துரியோதனன் நூதனமாகக் கட்டிய சபையைத் தருமன் வியந்தன னென்க. இனிமை - கண்ணுக்கு இனிமை: அதாவது-அழகு. தேவலோகத்துச் சுதன்மை தோன்றிய பின்பே மற்றையிடங்களிற் சபாமண்டபங்கள் தோன்றின வென்பான், அதற்கு 'முந்தை மண்டபங்களுக்கு முதன்மையான' என்று அடைமொழி கொடுத்தனனென்னலுமாம். முதலடியிற் கூறிய விஷயத்தை மற்றை மூன்றடிகளும் சாதித்து நிற்றலால், தொடர்நிலைச்செய்யுட்குறியணி. அந்த - உலகறிசுட்டு. (311) 159.-தம்பியர் நால்வரும்அங்கு வீற்றிருத்தல். எனவி யந்து தரும ராச னினிதியம்ப யாளிவெஞ் சினவி லங்க லென்னு மாறு சேரவந்த விளைஞரும் |
|