மனுவி ளங்கு முறைமை யான்வணங்கி மன்னர் மன்னன்முன் தனத னங்கி ருப்ப தன்னதவிசின் மீது வைகினார். |
(இ -ள்.) என-என்று, தருமராசன்-தருமபுத்திரன், வியந்து இனிது இயம்ப-(அம் மண்டபத்தைக் குறித்து) வியந்து இனிமையாகக் கூறுகையில்,- யாளி வெம்சினம் விலங்கல் என்னும் ஆறு - யாளியென்னுங் கொடுங்கோபத்தையுடைய மிருகத்தை உவமை சொல்லும்படி, சேரவந்த - தருமபுத்திரனோடு வந்த, இளைஞரும் -(அத்தருமனது) தம்பிமாராகிய வீமன் முதலிய நால்வரும், மனு விளங்கு முறைமையான் வணங்கி-மநுதரும சாஸ்திரத்திற் கூறியுள்ள முறைமைப்படியே (அச்சபையில் வீற்றிருந்த திருதராட்டிரன் முதலிய பெரியோரை) வணங்கி, மன்னர் மன்னன் முன் - அரசர்க்கரசனான துரியோதனனது எதிரில், தனதன் இருப்பது அன்ன தவிசின்மீது - குபேரனது ஆசனத்தையொத்த ஆசனங்களின்மேல், வைகினார் - வீற்றிருந்தார்கள்; (எ - று.) தருமராசன் - யமன்: இங்கு, தந்தையின் பெயர் மைந்தனுக்கு வழங்கியது; மைந்தனுக்கும் அப்பெயர் ஏற்கும். யாளி - கோபத்திலும், பராக்கிரமத்திலும், பெருமிதத்திலும் வீமன் முதலியோர்க்கு உவமை. விலங்கல் - குறுக்காக உடம்பு அமையப்பெற்றது எனக் காரணப்பெயர்: 'திர்யக்' என்னும் வடமொழியின் பொருள் கொண்டது. மனு - மநுவென்பவனாற் செய்யப்பட்ட நூலுக்குக் கருத்தாவாகுபெயர். இருப்பது - ஒன்றன்பால் வினையாலணையும் பெயர்; இரண்டாம் வேற்றுமைத்தொகை. அங்கு-அசை; குபேரனுக்கு உரிய அளகாபுரியில் என்னவுமாம். (312) 160.-துரியோதனன் அச்சபையில்வீற்றிருந்த சிறப்பு. புரைகொள் பாவ மேநி றைந்து புண்ணியங்கு றைந்துநீள் நரகி னூழி காலம் வாழ்திநாகர் வாழ்வி னுள்ளதும் தரணி மீது பெறுக வென்று தந்ததொக்கும் வானுளோர் அரவ வேறு யர்த்த வீர னன்றிருந்த பெருமையே. |
(இ -ள்.) அரவம் ஏறு உயர்த்த வீரன் அன்று இருந்த பெருமை - சிறந்த அரவக்கொடியை உயர எடுத்த வீரனாகிய துரியோதனன் அப்பொழுது (அச்சபையில்) வீற்றிருந்த சிறப்பு,- '(உன்னிடத்தில்), புரைகொள் பாவமே நிறைந்து - குற்றத்தைக் கொண்ட தீவினையே மேலிட, புண்ணியம் குறைந்து - நல்வினை குறைந்துவிட்டதனால், நீள் நரகின் ஊழி காலம் வாழ்தி-துன்பம் மிகுந்துள்ள நரகத்தில் (நீ) நெடுங்காலம் வசித்துத் துன்பமடையப் போகிறாய்: (ஆதலால், சிறிது காலமாவது), நாகர் வாழ்வின்உள்ளதும் தரணிமீது பெறுக - தேவலோகத்திலுள்ள இன்பத்தையும் இப் பூமியிலேயே பெற்றுவாழ்வாயாக,' என்று-, வான் உளோர்-தேவர்கள், தந்தது - (தங்களது உலகத்திலுள்ள சிறப்பைத் துரியோதனனுக்குக்) கொடுத்ததை, ஒக்கும்-; (எ - று.) |