தேவர்கள் இனித்துரியோதனன் அடையப்போகின்ற கொடுநரகத்திற்கு மனமிரங்கி, 'சிறிதுகாலமாவது இவன் தேவலோகத்து இன்பத்தை இப்பூமியிலேயே அடைவானாக' என்று அவனுக்கு அவ்வின்பத்தை அருளோடு கொடுத்தாற்போலுமென, இயற்கையில் துரியோதனன் மிக்கமேன்மையோடு வீற்றிருந்த சிறப்பை வருணித்தவாறு; தற்குறிப்பேற்றவணி: இதனால், துரியோதனனது அப்போதைய சிறப்பு, தேவலோகச் சிறப்பை யொத்திருந்த தென்க. 'ஒக்கும்' என்பது - தற்குறிப்பேற்றவுருபாய் வந்தது. 'பாவமே நிறைந்து புண்ணியங் குறைந்து' என மாறுபட்ட சொற்கள் வந்தது தொடைமுரண். கம் - சுகம்; அதற்கு எதிர் - அகம், துக்கம்: அதில்லாதது - நாகம்: அதில் வாழ்பவர் - நாகர் எனத் தேவர்க்குக் காரணக்குறி. நரகு - நரகம் என்ற வடசொல்லின் விகாரம். வாழ்தி - முன்னிலையொருமையெதிர் காலமுற்று: இ - காலங்காட்டும்விகுதி, த் - எழுத்துப்பேறு. தந்தவன் பெயர். (313) 161.-துரியோதனன் தருமனைச்சூதாடத் தூண்டுதல். மாய மொன்று மெண்ண லாமனத்தின் மிக்க மாமனும் நீயு மின்று சூது கொண்டுநிகழ்வி லாச மயர்விரோ ஆய வென்றி யைய னில்லி லமுதமன்ன போனகம் போய ருந்து மளவு மிங்கி ருந்துபோது போகவே. |
(இ - ள்.) (துரியோதனன் தருமனை நோக்கி),-'ஆய வென்றி ஐயன் இல்லில் - பொருந்திய வெற்றியையுடைய (நமது) தந்தையின் மாளிகையில், போய்-, அமுதம் அன்ன போனகம் அருந்தும் அளவும்-தேவாமிருதத்தை யொத்த இனியவுணவை உண்ணப்போகின்ற வரையிலும், இங்கு இருந்து - இச்சபையிலிருந்து, போது போக - காலம் இனிது கழியுமாறு,-மாயம் ஒன்றும் எண்ணலா மனத்தின் மிக்க மாமனும் - வஞ்சனை சிறிதும் எண்ணாத மனத்தையுடைமையால் மேம்பட்டவனும் (எனது) மாமனுமாகிய சகுனியும், நீயும்-, இன்று - இப்பொழுது, சூதுகொண்டு நிகழ் விலாசம் அயர்விரோ-சூதாடு கருவியைக் கொண்டு செய்கிற விளையாட்டை [சூதாட்டத்தை] ஆடுகிறீர்களா?' (எ - று.)-'என்று வினாவினன்' என எழுவாயோடு வினையும் வருவித்து முடிக்க. இச்செய்யுள் தருமனைநோக்கித் துரியோதனன் கூறிய வார்த்தையென்பது, மேல் 163-ஆஞ் செய்யுளில், தருமன் "தாதுகொண்டு தேனிரங்கு தாமமார்ப" என்று விளிப்பதனாற் புலனாகும். துரியோதனன், சகுனியைக்கொண்டு தருமனை வஞ்சிக்கவேண்டுமென்று கருதுகின்றானாதலால், அச்சகுனியின்மேல் தருமன் சிறிதும் ஐயங்கொள்ளாதிருக்க வேண்டுமென்று அவனை 'மாயமொன்று மெண்ணலா மனத்தின் மிக்கமாமன்' எனப்புனைந்து கூறினன். விலாசம்=விலாஸம்: விநோதமென்பது பொருள். அயர்விர் - 'அயர்' என்னும் பகுதியினடியாப் பிறந்த முன்னிலைப்பன்மை எதிர்காலவினைமுற்று. ஓகாரம் - வினா. (314) |