162, 163.-இவ்விரண்டுகவிகளும்- தருமன் சூதாட உடன்படாமை தெரிவிப்பன. மீதெ டுத்த வஞ்ச ராகி வெகுளிசெய்தல் பிறர்பெருங் கோதெ டுத்து ரைத்த னண்புகொண்டயிர்த்தல் கொடியவெஞ் சூதெ டுத்து விழைத லுற்ற சூள்பிழைத்த லின்னவே தீதெ டுத்த நூலின் முன்பு தீயவென்று செப்பினார். வாது கொண்டு காதல் கூரு மாமனோடு வஞ்சனைச் சூது கொண்டு பொருத ழிந்துதோல்வி யெய்த வேண்டுமோ தாது கொண்டு தேனி ரங்கு தாமமார்ப நெஞ்சினீர் ஏது கொண்ட ததுநு மக்க ளிப்பனிம்ப ரென்னவே. |
(இ - ள்.) (அதுகேட்டுத் தருமபுத்திரன்), (163) 'தாது கொண்டு தேன் இரங்கு தாமம் மார்ப - மகரந்தப்பொடிகளைப் பூசிக்கொண்டு வண்டுகள் ஒலிக்கின்ற (நந்தியாவட்டப்) பூமாலையையணிந்த மார்பையுடைய துரியோதனனே!-(162) மீது எடுத்த வஞ்சர் ஆகி வெகுளி செய்தல் - அதிகமாகப் பொருந்திய வஞ்சனையை யுடையவர்களாய்க் கோபங்கொள்ளுதலும், பிறர் பெருங்கோது எடுத்து உரைத்தல்-பிறரது பெருங்குற்றங்களை எடுத்துத் தூற்றுதலும், நண்பு கொண்டு அயிர்த்தல் - (ஒருவரை முதலில்) நட்புக்கொண்டு பிறகு சந்தேகித்தலும், கொடிய வெம் சூது எடுத்து விழைதல் - மிகக்கொடிய சூதாடுதலை மேலாகக்கொண்டு விரும்புதலும், உற்ற சூள் பிழைத்தல் - சொன்ன உறுதிமொழி தவறுதலும், இன்ன - (ஆகிய) இச்செயல்களை, முன்பு-முற்காலத்திலேயே, தீது எடுத்த நூலில்-பாவங்களை யெடுத்துக் கூறுகின்ற தருமசாஸ்திரங்களில், தீய என்று செப்பினார் - தீமையானவையென்று சொன்னார்கள், (பெரியோர்; அவ்வாறு கூறியிருக்கவும்), -(163) காதல் கூரும் மாமனோடு - (உன்னிடத்தில்) அன்புமிக்க மாமனான சகுனியுடனே, வஞ்சனை சூது கொண்டு வாதுகொண்டு பொருது - வஞ்சனைக்கிடமான சூதாட்டத்தினால் (நான்) மாறுபட்டுப் போர்செய்து, அழிந்து - (பொருள்களையெல்லாம்) இழந்து, தோல்வி எய்த வேண்டுமோ - தோல்வியை யடையவேண்டுமென்பது (உனது) கருத்தோ? நீர் - நீங்கள், நெஞ்சில் - (உங்கள்) மனத்தில், ஏதுகொண்டது - எப்பொருளைப் பெறவேண்டுமென்று கருதுகின்றீர்களோ, அது - அப்பொருளை, நுமக்கு - உங்கட்கு, இம்பர் - இப்பொழுதே [இவ்விடத்திலேயே], அளிப்பன் - கொடுப்பேன்.' என்ன - என்றுகூற, (எ - று.) - 'மன்னனுரையுணர்ந்து' என அடுத்த கவியோடு தொடரும். (162) சூதாட்டத்தைத் தீதென்று இகழ்ந்து சொல்லத்தொடங்கிய தருமபுத்திரன் அதற்கு இனமாயுள்ள மற்றைச் சில குற்றமான செயல்களையும் உடன் கூறினான்; இது - ஒப்புமைக்கூட்டவணி. கொடியவெம் - ஒருபொருட்பன்மொழி. சூள்-சபதம். இன்ன - பலவின்பாற்பெயர்; ஏ - இசைநிறை. |