(163) வாது - வாதம். மோதுபோரில் வீரவாதம் நிகழ்வதுபோலச் சூதுபோரிற் பொய்ம்மையினால் வாக்குவாதம் நிகழுமென்க. சகுனி வஞ்சனைக்கிடமான சூதாட்டத்தில் மிகவும் வல்லவனாதல்பற்றி அவனோடு, சூதாடித் தீயவழியால் இழவாமல் வேண்டுமென்று கேட்ட பொருள்களை மனப்பூர்வமாகக் கொடுத்து இழத்தலே நன்று என்று தருமன் தனக்குச் சூதாடுங்கருத்து இல்லாமையை நன்கு வெளியிட்டன னென்க. தன்னை எவ்வாற்றாலாயினும் பொருளையிழந்து கெடுமாறு செய்வதே துரியோதனாதியரது கருத்து என்பதை, 'நெஞ்சில் நீர் ஏதுகொண்டது' என்ற வினாவினால் விளக்கினான், கீழ்த் தன்னை நோக்கிச் சூதாடுமாறு தூண்டியவன் துரியோதனனே யாதலால் தருமன் முதன்முதல் அவனை விளிப்பான் 'தாமமார்ப' என்று ஒருமையாகவும், சகுனி முதலிய மற்றையோர்க்கும் தன்னைப் பொருளிழப்பிக்கவேணுமென்ற கருத்து உள்ளதென்பதை அறிந்தவனாதலின் அவர்களையுங் கூட்டி, 'நீர்,' 'நுமக்கு' எனப் பன்மையாகவுங் கூறினான். 'வாதுகொண்டு காதல்கூரும் மாமனோடு' என்பதற்கு - (என்மீது மனத்தில்) விரோதங்கொண்டு (வெளிக்கு) அன்பு மிக்குள்ளவன்போல நடிக்கிற சகுனியுடனே என்றும் பொருளுரைக்கலாம். 'காதல் கூரும் மாமனோடு வாது கொண்டு பொருது' என்ற தொடரில், நெருங்கிய உறவினர்களிடத்தில் மனவொற்றுமைப்பட்டு நண்புகொண்டிருத்தல் தகுதியேயன்றி ஒற்றுமைகெட்டு மாறுபட்டுச் சூதாடுதல் தகுதியன்று என்ற கருத்தும் தோன்றும். கூரும் - 'கூர்' என்ற உரிச்சொற்பகுதியினடியாப்பிறந்த பெயரெச்சம். அளிப்பன் - தன்மையொருமை வினைமுற்று; அன் - விகுதி. (315) 164.-இதுமுதல் நான்கு கவிகள் -சகுனியின் வார்த்தை. ஒப்பி லாத வேள்வி மன்ன னுரையுணர்ந்து சகுனியும் தப்பி லாத கவறு ருண்ட தாயமெங்கு மொக்குமால் வைப்பி லாண்மை யன்றி வேறுவஞ்ச மில்லை யுண்டெனச் செப்பி லார்கொ லிவனை யாடவருக வென்று செப்புவார். |
ஐந்து கவிகள்-ஒரு தொடர். (இ - ள்.) ஒப்பு இலாத வேள்வி மன்னன் உரை உணர்ந்து - (தனக்கு) ஒப்பாக (ஒருவரையும்) பெறாத இராசசூயயாகஞ்செய்து முடித்தவனான தருமபுத்திரனது வார்த்தையைக் கேட்டறிந்து,- சருனியும்-, (சபையோரை நோக்கிக் கூறுவான்):- தப்பு இலாத கவறு உருண்ட தாயம் - தவறுகட்குச் சிறிதும் இடமில்லாத சூதாடுகருவி [பாச்சிகை] உருண்டதனால் வருந் தாயம், எங்கும் ஒக்கும் - இருதிறத்தார்க்கும் ஒத்ததே; வைப்பில் - (காய்களை) வைப்பதில், ஆண்மை அன்றி - அறிவின் திறமுண்டல்லாமல், (சூதாட்டத்திலே), வேறு வஞ்சம் இல்லை - மாறுபாடான கபடம் சிறிதும் இல்லையே! (அப்படியிருக்க), உண்டு என செப்பில் - (சூதாட்டத்தில் வஞ்சனை) உண்டு என்று (தருமபுத்திரன்) கூறினால், இவனை ஆட வருக என்று ஆர் செப்புவார் - இவனை |