வெல்லின் - நீ உருட்டியாடிய கவற்றிற் சயித்தால், அதன் இரட்டி தருகுவன் - நீ பந்தயமாகவைத்த பொருளினும் இருமடங்கான பொருளை (உனக்கு)க் கொடுப்பேன்; ஆன் எறிந்த கொலைஞர் போல - பசுவைக்கொன்ற கொலைப்பாதகரைப் போல, அஞ்சல் - அஞ்சவேண்டா, ஆட வருதி - சூதாடுதற்கு (உடன்பட்டு) வருவாயாக; (எ - று.) தான் தோற்றால் இழக்கவேண்டிய பொருள் சிறிதும், வென்றாற் பெறவேண்டிய பொருள் பெரிதுமானால் தருமன் இதன் பொருட்டுச் சூதாடவிரும்பி வரக்கூடுமென்று, சகுனி, இவ்வாறு மோசஞ்செய்ய ஆசை காட்டின னென்க. சகுனி, சூதாட்டத்திற் குற்றமில்லையென்று தருமனுக்குவிளக்கி அவனை வருமாறு வற்புறுத்தற்பொருட்டு, 'ஆனெறிந்த கொலைஞர்போல அஞ்சல்' எனக் கூறினான். ஆனெறிந்தகொலை - கோஹத்தி எனப்படும்: அவர்கட்குப் பெரும்பாதகமும் கடுந்தண்டனையும் தருமசாஸ்திரங்களில் விதிக்கப்பட்டிருத்தல் காண்க. தருமனஞ்சுதற்கு மிடிய ரஞ்சுதலையும் ஆனெறிந்த கொலைஞரஞ்சுதலையும் ஒப்புமைகூறினால் அவ்வளவில் தருமன் அச்சமொழிவனென்பது, சகுனியின் உட்கோள்: மாலை மலர்களிலுள்ள தேனின்மிகுதி, மூன்றாமடியில் நன்கு விளங்கிற்று. இசைவு - தொழிலாகுபெயர். இரட்டி - இரண்டு என்பது, மென்றொடர் வன்றொடராகி இகரவிகுதிபெற்ற பெயர். 'தருகுவன்' என்றதன்மையொருமை வினைமுற்றில், கு - வேண்டாவழிச்சாரியை. 'தேன்' என்ற சொல் பலமுறைவந்தது - சொற்பின் வருநிலையணி. மூன்றாமடியில், பொருளினால் வந்த முரண்தொடை காண்க. அஞ்சல் - எதிர்மறையேவலொருமைமுற்று.(320) 168.-அருச்சுனனும் மனம்வருந்தும்படி தருமனை நோக்கிக் கர்ணன் சில கூறத்தொடங்குதல். என்று மாம னுற்று ரைப்ப விவைதமக்கவ் வவையில்வேறு ஒன்று மாறு ரைத்தி டாது திட்டிரன்னி ருக்கவும் வென்று மாற டர்க்கும் வாகைவிசய னும்வெ குண்டுளங் கன்று மாறு ரைத்த னன்கொல்கன்ன னென்னும் மன்னனே. |
(இ -ள்.) என்று - இவ்வாறாக, மாமன் - (துரியோதனனது) மாமனாகிய சகுனி, உற்று உரைப்ப - (தருமனும் துரியோதனனும் பேசுகையில் நடுவே) வந்துசொல்ல, இவை தமக்கு - இவ்வார்த்தைகட்கெல்லாம், அ அவையில் - அந்தச் சபையிலே, உதிட்டிரன் - தருமபுத்திரன், மாறு வேறு ஒன்றும் உரைத்திடாது - மாறாக வேறொருவார்த்தையையும் கூறாமல், இருக்கவும் - சும்மா இருந்துவிடவும்,-கன்னன் என்னும் மன்னன் - கர்ணனென்னும் அரசன், வென்று மாறு அடர்க்கும் வாகை விசயனும் வெகுண்டு உளம் கன்றும் ஆறு - வெற்றிகொண்டு பகைவர்களை வலியடக்குகிற வெற்றிமாலை யணிந்த அருச்சுனனும் கோபங்கொண்டு மனம்வெதும்பும்படி, உரைத்தனன் - (சில |