முதலில் தோற்றவர்கள் அடுத்த ஆட்டங்களில் வெல்வோமென்று எண்ணுதலும், முதலில் வென்றவர்கள் இனிப் பின்னும் வெல்லலாமென்று கருதுதலும், சூதாட்டங்களில் இயல்பு. இரண்டாமடி, சகுனியின் சூதாடுந் திறமையை விளக்கும். உள் - உள்ளிடம்; அகத்துறுப்பு: அந்தக்கரணம். மன் அருள் வெருவரும் களிற்றினானும் என்று கொண்டு, மிக்க அருளையும் (பகைவர்) அஞ்சுகின்ற யானைச்சேனையையுமுடைய தருமனும் என்றுமாம்.(329) | 177. | வைத்த வார மவனெ டுக்க மாயவன்கொ டுத்தநன் மெய்த்த வாத தேர்கு றித்துமீள வும்ப ரப்பினான் மொய்த்த வாச மாலைமார்பின் முடிம கீபன் மகிழ்தரப் பொய்த்த வாடல் வல்ல மீளிபொருது வென்றி புனையவே. |
நான்கு கவிகள் - ஒருதொடர். (இ -ள்.) வைத்த ஆரம் அவன் எடுக்க - (தருமபுத்திரன் பந்தயமாக) வைத்த முக்தாஹாரத்தை அந்தச் சகுனியானவன் வென்று கைப்பற்றிக்கொள்ள, - (தருமபுத்திரன்), மாயவன் கொடுத்த நல் மெய்த்த வாதம் தேர் குறித்து - கிருஷ்ணபகவான் (தமக்குக்) கொடுத்திருந்த சிறந்த உருவங்கொண்ட காற்றுப்போன்ற தேரைப் பந்தயமாகவைத்து, மீளவும் பரப்பினான் - பின்பும் ஆடுமாறு (காய்களைப்) பரப்பிவைத்தான்; பொய்த்த ஆடல் வல்ல மீளி - வஞ்சனைக்கு இடமான சூதாட்டத்தில் மிக்கதேர்ச்சியுள்ள வீரனாகிய சகுனி, மொய்த்த வாசம் மாலை மார்பின் முடி மகீபன் மகிழ்தர - (வண்டுகள்) மொய்க்கப்பெற்ற வாசனையையுடைய (நஞ்சாவட்டைப்பூ) மாலையை யணிந்த மார்பையுடையவனும் கிரீடாதிபதியுமான துரியோதன ராஜன் மனங்களிக்கும்படி, பொருது வென்றி புனைய-சூதாடி வெற்றியையுடைய (தேரைக் கைப்பற்ற), - (எ - று.) - 'மாறுசெப்பி' என அடுத்த கவியோடு தொடரும். திரௌபதியைப் பாண்டவர்கள் மணஞ்செய்து கொண்ட பின்னர்க் கண்ணன் அவர்கட்குத் தேர்முதலியவற்றை வெகுமானமாக அனுப்பினனென வியாசபாரதம் கூறும். அர்ச்சுனன் சுபத்திரையை மணந்து கொண்ட பொழுது ஸ்த்ரீதனமாகத் தேர் முதலியவற்றைக் கொடுத்ததாகவும் அப்பாரதத்திற் கூறப்பட்டுள்ளது. தேர் மிகவிரைந்து செல்லுந் தன்மைய தாதலால், அதற்குக் கட்புலனாகும் வடிவத்தைக்கொண்ட காற்றை உவமை கூறினார்; இல்பொருளுவமை. வாதம்-வடசொல். நிலைமொழி வடமொழியாதலின், 'வாததேர்' என வருமொழிமுதல் வலி இயல்பாயிற்று: "இடையுரி வடசொலினியம்பிய கொளாதவும்,. . . . . நெறியே". சந்தம் நோக்கியது எனினுமாம். இனி, மெய் தவாததேர் எனப்பிரித்து, உருக்குலைதலில்லாத தேர் என்றும் பொருள் கூறலாம். (330) |