பக்கம் எண் :

சூதுபோர்ச் சருக்கம் 315

178.

தேர்கொ டுத்த பின்னுமாறு செப்பி யுள்ள தேர்மதக்
கார்கொ டுத்து மெண்ணிலாத கவன மாக்கொடுத்துமப்
பார்கொ டுத்து மரசு கூர்பதங்கொ டுத்து முரியதம்
மூர்கொ டுத்து மதனி னுள்ளமொழிவு றாம லோடவே.

    (இ - ள்.) (தருமபுத்திரன்), தேர்கொடுத்த பின்னும் - அந்த இரதத்தைத்
தோற்றபின்பும், மாறு செப்பி-வெவ்வேறுபந்தயஞ் சொல்லி, உள்ள - மற்றும்
தன்னிடத்திலுள்ள, தேர்-தேர்களையும், மதம் கார்-மதநீர்சொரிகிற
மேகம்போன்ற யானைகளையும், கொடுத்தும் - தோற்று இழந்தும், எண் இலாத
கவனம் மா கொடுத்தும் - கணக்கில்லாதனவான வேகத்தையுடைய
குதிரைகளைத்தோற்றும், அ பார் கொடுத்தும் - (தனக்குத் தாயபாகமாகக்
கிடைத்த) அந்தத் தேசத்தைத் தோற்றிழந்தும், அரசு கூர் பதம் கொடுத்தும் -
(தான்) அரசாளுகிற அரசவுரிமையைத் தோற்றிழந்தும், தம் உரிய ஊர்
கொடுத்தும் - உரிமையுள்ள தமது இந்திரப்பிரத்த நகரத்தைத் தோற்றிழந்தும்,
அதனின் உள்ளம் ஒழிவுறாமல் ஓட - அந்தச் சூதாட்டத்தில் (தனது) மனம்
ஆசைவிடாமல் தொடர,-(எ -று.)-'அளிக்க' என அடுத்த கவியோடு தொடரும்.

     மதக்கார் - அடையடுத்த உவமையாகுபெயர்.  கவனம்=கமநம்; வடசொல்
'மா' என்ற பொதுப்பெயர்-'கவனம்' என்ற அடைமொழியால், சிறப்பாகக்
குதிரையை யுணர்த்திற்று.                                 (331)

179.

வெங்கி ராத வனமெ ரித்தவிசய னுக்கு விஞ்சையன்
அங்கி ராம கிழ்ந்தளித்த வாடன் மாவு மளகநீள்
பொங்கி ராம ணஞ்சி றந்தபோக மாதர் பலருமன்று
இங்கி ராந ரேச னுற்ற விசைவி னால ளிக்கவே.

     (இ - ள்.) (பின்னும்), வெம் கிராத வனம் எரித்தவிசயனுக்கு - கொடிய
வேடர்கள் சஞ்சரித்தற்கு உரிய காண்டவவனத்தை (அக்கினி பகவானைக்
கொண்டு) எரிந்தழியச்செய்த அருச்சுனனுக்கு, விஞ்சையன் -
(சித்திரரதனென்னும்) கந்தர்வராசன், அங்கு இரா மகிழ்ந்து அளித்த-அங்கே
[கங்கைக்கரையிலே] (திரௌபதி சுயம்வரத்துக்காகப் பாண்டவர் சென்றபோது)
இராப்பொழுதில் மகிழ்ச்சிகொண்டு கொடுத்த, ஆடல் மாவும்-வலிமையுள்ள
(ஐந்நூறு) குதிரைகளையும்,-பொங்கு இரா மணம்சிறந்த நீள் அளகம் போக
மாதர் பலரும்-மிக்க இருள்போற் கருநிறமான வாசனை சிறந்த நீண்ட
கூந்தலையுடைய இன்பத்திற்கு உரிய பல மகளிரையும்,- இங்கு மன்று-
இந்தச்சபையிலே, இரா-இருந்து கொண்டு, நரேசன்-யுதிஷ்டிரராசன், உற்ற
இசைவினால் அளிக்க-மிக்கமனப்பூர்த்தியோடு பந்தயமாகவைத்து இழந்துவிட,-
(எ - று.) 'குருகு லேசன் மொழிய' என அடுத்த கவியோடு தொடர்ந்து
முடியும்.  'இங்கு' - அசை; இப்பொழுது எனினுமாம்.

     கிராதவனமென்றது, வேடர்முதலிய துஷ்டர்கள் மிகுதியாக வசித்திருந்த
காண்டவவனத்தை.  அருச்சுனன்அக்கினியைக்