கொண்டு காண்டவவனத்தையெரித்த கதை:- இந்திரப்பிரத்த நகரத்தைச் சார்ந்ததொரு பூஞ்சோலையிற் கிருஷ்ணார்ச்சுனர்கள் உல்லாசமாக வசித்திருக்கையில் ஒருநாள் அக்கினிபகவான் அந்தண வடிவங் கொண்டுவந்து 'எனக்கு மிகப்பசிக்கின்றது: உணவிடுக' என்றுவேண்ட, அவ்விருவரும் 'நீ வேண்டியபடி உணவிடுவோம்' என்று வாக்குதத்தஞ்செய்ய, உடனே தீக்கடவுள் நிஜரூபங்கொண்டு 'இந்திரனது காவற்காடாய் எவர்க்கும் அழிக்கவொண்ணாதபடி நிலவுலகத்திலிருக்கிற காண்டவவனத்தை அதிலுள்ள சராசரங்களுடனே எனக்குவிருந்திடவேண்டும்' என்ன, அவர்கள் அங்கே புக்கு ஒதுங்கியிருக்கின்ற அசுரர்கள் முதலிய துஷ்டர்களை யழித்தருள வேண்டுமென்னும் நோக்கத்தால் இசைந்து 'நீ இதனைப் புசி' என்றவுடனே, அக்கினிதேவன் அருச்சுனனுக்கு நான்கு வெள்ளைக் குதிரைகள் பூட்டிய தேரையும், வானரத்துவசத்தையும், காண்டீவவில்லையும், இரண்டு அக்ஷயதூணீரங்களையும் கொடுத்துக் காண்டவவனத்திற் பற்றியெரிகையில், அவ்வனத்தினின்று தப்பியோடுகிற பிராணிகளை அருச்சுனன் அம்பெய்து கொன்று அத்தழலில் விழுத்திவர, காண்டவவனம் தீப்பற்றியெரிகிற செய்தியை யுணர்ந்த தேவேந்திரன் அத்தீயை யவிக்கும்படி பலமேகங்களை யேவ, அம்மேகங்கள் வந்துபொழிந்த சோனைமாரியில் ஒரு துளியும் தீயின்மேல் விழுந்திடாவண்ணம் அருச்சுனன் சரக் கூடங்கட்டித் தடுத்துவிட, இந்திரன் பின்னும் தேவசேனையுடனே வந்து போர்செய்யவும் அருச்சுனன் அவர்களையும் வெல்லவே, அக்கினி பகவான் அவ்வன முழுவதையும் எரித்துத் திருப்தியடைந்து கிருஷ்ணார்ச்சுனர்களை வாழ்த்திச் சென்றன னென்பதாம். விஞ்சையன் விசயனுக்கு ஆடன்மா வளித்த கதை:- பாண்டவர்கள் வேத்திரகீயத்தில் வசித்திருந்தபோது திரௌபதியின் சுயம்வரத்தைக் கேள்வியுற்று அங்குநின்றும் பிரயாணப்பட்டுச்செல்லுகையில் அர்த்தராத்திரியிலே கங்கையைச் சார்ந்து அதன் துறையிலிறங்குமளவில், அங்குப் பலமகளிருடனே ஜலக்கிரீடை செய்து கொண்டிருந்த சித்திரரதனென்னும் மறுபெயரையுடைய அங்காரபர்ணனென்னும் கந்தருவ ராசன், இவர்கள் வருகை தான் ஏகாந்தமாகச் செய்துகொண்டிருக்கிற புனல்விளையாட்டுக்குத் தடையாதலை நோக்கிச் சினங்கொண்டவனாய், இவர்களை 'இங்கு வரலாகாது' என்று தடுத்து வீரவாதங்கூறி மாயப்போர் தொடங்க, அப்போரில் முன்நின்ற அருச்சுனன் ஆக்நேயாஸ்திரத்தால் அவன் மாயைகளை ஒழித்ததோடு அவனது தேரையும் கரியாக்கி அவனது அம்புகளையும் உடல்வலிமையையும் ஒடுங்கச்செய்து அவனைத் தலைமயிர் பற்றி யிழுத்துவந்து தருமபுத்திரனது பாதத்தில் விட, கருணைக் கடலான தருமபுத்திரன் அவன் மனைவியான கும்பீநசியின் வேண்டுகோளினால் அருள்கொண்டு அவனைவிடுக்க, அவன் இவர்களைப் பாண்டவரென்று அறிந்தவனாய்த் தன்பிழையைப் பொறுக்கும்படி வேண்டிச் சரணமடைந்து அபயமளிக்கப்பெற்ற பின்பு நட்புப்பூண்டு அருச்சுனனிடத்திலிருந்து ஆக்நேயாஸ்திரத்தை உபதேசம் பெற்று அதற்கு ஈடாகத் தானறிந்த |