பக்கம் எண் :

சூதுபோர்ச் சருக்கம் 317

மாயவித்தையை அருச்சுனனுக்குக் கற்றுக்கொடுத்ததுமன்றி ஒவ்வொருவர்க்கும்
நூறு நூறு குதிரையாக உத்தமவிலக்கணமுடைய சிறந்த ஐந்நூறு குதிரைகளைப்
பெற்றுக்கொள்ளும்படி வேண்ட, 'வேண்டும்பொழுது பெற்றுக்கொள்ளுகிறோம்;
உனக்கு மங்கள முண்டாகுக' என்று சொல்லி அருச்சுனன் அக்குதிரைகளை
அச்சித்திரரதனிடத்திலேயே விட்டிருந்தன னென்பதாம்.  இவ்விஞ்சையன்
பெயரை 'சித்திராங்கதன்' எனக் கொள்ளுதல் தகுதியன்று; திரௌபதி
மாலையிட்ட சருக்கத்தில் அவனை 'சித்திரத்தேரோன்' என்றதையும்
வடநூல்களையும் உற்றுநோக்குக.  அவ்வாறு அவ்வித்தியாதரனிடத்திலிருந்த
குதிரைகளை இப்பொழுது தருமன் பந்தயமாக வைத்தனனென அறிக. 

    விஞ்சையன்-மாலிகாஞ்சநம் முதலிய மாயவித்தைகளை யுடையவன்.
ஆடல் = அடல்: நீட்டல்.  இனி ஆடல்மா - கூத்தாடிக்கொண்டு
செல்லுந்தன்மையுள்ள குதிரையெனினுமாம்; அன்றியும், உத்தம
விலக்கணமுடைய சிறந்தகுதிரை 'ஆடன்மா' எனப்படும்.  மா -
பால்பகாவஃறிணைப்பெயர்.  மூன்றாமடியில், 'இரா' என்றது, இருளுக்கு
இலக்கணை.  நான்காமடியில், 'இரா' - செய்யா என்னும் வாய்பாட்டு
உடன்பாட்டு இறந்தகாலவினையெச்சம்.  மூன்றாமடியினீற்றில், அன்று என்று
எடுத்து, அப்பொழுது எனினுமாம்.

180.-தங்களையேபந்தயப் பொருளாக வைத்து ஆடுமாறு
தருமனைக் கேட்கும்படி துரியோதனன் சகுனியைத்
தூண்டுதல்.

யாவை யுங்கொ டுத்தி ருப்பவிளைஞ ரோடு மெய்த்தவக்
கோவை யுங்கு றிக்க வென்றுகுருகு லேசன் மொழியவே
ஈவை யுங்கு றித்து வெற்றியெய்த வெய்த விவர்கடம்
வீவை யுங்கு றித்து வென்றிமேன்மை யான்வி ளம்புவான்.

     (இ - ள்.) யாவையும் கொடுத்து இருப்ப - (இவ்வாறு தருமபுத்திரன்
எல்லாப்பொருள்களையும்  தோற்றிருக்கையில், 'இளைஞரோடும் - தம்பிமார்
நால்வருடனே, மெய் தவம் கோவையும் - சத்திய விரதத்தையுடைய
தருமராசனாகிய தன்னையும், குறிக்க - பந்தயமாக வைக்கும்படி சொல்வாயாக,'
என்று-, குருகுல ஈசன் - குருகுலத்திற் பிறந்த தலைவனாகிய துரியோதனன்,
மொழிய - (சகுனியிடத்திற்) சொல்ல,-வென்றி மேன்மையான்-வெற்றியினால்
மேம்பட்டவனாகிய அச்சகுனி, இவர்கள் தம்வீவையும் குறித்து -
இப்பாண்டவர்களது நாசத்தையும் உத்தேசித்து, ஈவையும் குறித்து வெற்றி எய்த
எய்த - (துரியோதனன் குறித்த) இப்பந்தயப் பொருள்களையும் குறித்து
மேன்மேல் வெற்றிபெறுமாறு, விளம்புவான் - (தருமபுத்திரனை நோக்கிச்)
சொல்வானாயினான்; (எ - று.)-அதனை, அடுத்த கவியின் முன்னிரண்டடிகளிற்
காண்க.

     சகுனி தருமபுத்திரனது பொருள்களையெல்லாம் வென்றதும், துரியோதனன்,
'இனிச் சூதாட்டத்தை நிறுத்திவிடக்கூடும்',