னானான் என உரைப்பினும் அமையும்; மேல் உம் குறிப்பு என்னை - இன்னமும் உங்கள் உத்தேசமென்ன? என்றபடி. பல சமயங்களில் வீமன் முதலியோர் தமது சாமர்த்தியங்களை வீரவாதமாக எடுத்துக் கூறுந் தன்மைய ராதலால், அவர்கள் 'வன்புரைத்த தம்பிமார்' எனப்பட்டார்; என்றது, 'நுணலுந் தன்வாயாற் கெடும்' என்றபடி, தங்கள் செருக்கு மொழியாலே இவ்வாறு அவர்கள் அழிந்தனரென்ற குறிப்பு. 'கைபிழைக்க' என்பதில், கை- தமிழுபசர்க்கம்; கைத்திறமையாலாடும் ஆட்டத்தில் அத்திறமின்றித் தோற்ற என்றவாறுமாம். பொருகென - தொகுத்தல். (334) 182.-திரௌபதியைப் பந்தயம் வைக்கும்படி சகுனி கூறுதல். மெய்வ ருந்தி றத்தி னும்மைவெல்லு மாறு வேறலால் ஐவ ருந்தி ருந்த வெங்க ளடிமையின்ன ராயினீர் மைவ ருந்த டங்கண் வேள்விமாது தன்னை யொட்டிநீ கைவ ருங்க வற்றி னின்னமெறிக வென்று கழறினான். |
(இ - ள்.) (பின்னும் சகுனி தருமபுத்திரனை நோக்கி), 'மெய்வரும் திறத்தின் நும்மை - உண்மையிலே பழகுந்தன்மையுள்ள உங்களை, வெல்லும் ஆறு - வெல்லவேண்டியபடியாக முறைமையாகவே], வேறலால் - (நாங்கள்) சயித்துவிட்டதனால், ஐவரும் நீங்கள் ஐந்துபேரும், திருந்த எங்கள் அடிமையின்னர் ஆயினீர் - நன்றாக எங்களுக்கு அடிமைகளாய் விட்டீர்கள்; மை வரும் தட கண் வேள்வி மாது தன்னை ஒட்டி - மை தீட்டிய பெரிய கண்களையுடைய யாகபத்தினியாகிய திரௌபதியைப் பந்தயமாக வைத்து, நீ-, கைவரும் கவற்றின் இன்னம் எறிக - நன்றாகக் கைதேர்ந்த பாச்சிகையினால் இன்னமும் ஆடுவாயாக,' என்று கழறினான் - என்று கூறினான்; (எ - று.) கீழ்ப் பாண்டவர் தங்களையே பந்தயம் வைத்துச் சூதாடுமாறு தூண்டியது போலவே, மிச்சமாய்நின்ற திரௌபதியையும் பந்தயம் வைத்துச் சூதாடுமாறு சகுனி தருமனைத் தூண்டின னென்க. இச் செய்யுள் சகுனியின் வார்த்தையென்பதை, மேல் 187 - ஆஞ் செய்யுளில் 'சகுனிசொல்லை' என வருவதனாலுமுணர்க. சூதாடுதற்குப் பந்தயப்பொருள் வைக்குமாறு சகுனியே கேட்பதாக வியாச பாரதத்திலும் வருகின்றது: இதுபற்றியே, கீழ் 180 - ஆஞ் செய்யுளில், துரியோதனன் தானே கேளாமல் பாண்டவர்கள் தங்களையே பணையமாக வைக்குமாறு தருமனைக் கேட்கச் சகுனிக்குக் குறிப்பித்ததாகக் கூறியுள்ளார். இச்சூதுபோர்வென்றியை வென்றியன்றென மறுக்கமாட்டி ரென்றற்கு 'மெய்வருந் திறத்தினும்மை வெல்லுமாறு வேறலால்' என்றான். 'மெய்வரும் திறத்தின்' என்பதற்கு - உண்மையான வழியிலேயே [சிறிதும் வஞ்சனையில்லாமலே] என்றும் கூறலாம்; அப்பொழுது, 'வேறலால்' என்பதனோடு இயையும். இகழ்ச்சிதோன்றவும், ரோஷமுண்டாகுமாறும், ஆசை தூண்ட முகஸ்துதியாகவும், 'கைவருங் கவற்றினின்னமெறிக' என்றான். கழறுதல் - வன்மையாகக் கூறுதல். |