பக்கம் எண் :

சூதுபோர்ச் சருக்கம் 320

ஐவரும் ஆயினீர் - முன்னிலையிற் படர்க்கைவந்த இடவழுவமைதி. 'ஐவரும்'
என்றிருப்பின், வழாநிலையாம். அடிமையின்னர்-அடிமையினர்: னகரமெய் -
விரித்தல்; இன் - சாரியை.                                   (335)

183.-இது முதல் நான்கு கவிகள் - குளகம்; அதுகேட்டுவிதுரன்
மனம் பொறாமல் திருதராட்டிரனிடத்துச் சிலகூறுதல்.

அன்ன போதி லருள்வி தூர னந்த னைப்பு கன்றெழா
நின்ன போத மன்றி வேறு நிருபர் தாநி னைப்பரோ
இன்ன போது மோந மக்கி யற்கை யன்றி தென்றுநீ
சொன்ன போது நேய மைந்தர் சொன்ன சொன் மறுப்பரோ,

     (இ-ள்.) அன்ன போதில் - (அவ்வாறு சகுனி கூறிய) அச்சமயத்தில்,
அருள் விதூரன் - அருளையுடையவனாகிய விதுரன்,-அந்தனை புகன்று எழா
- குருடனான திருதராஷ்டிரனைப் பழிக்கும் படி எழுந்து, (அவனைநோக்கி), -
நின் அபோதம் அன்றி - உனது அறிவின்மையால் (இவ்வாறான முறைகேடு
நடக்கின்றதே) அல்லாமல், வேறு நிருபர் - (அறிவுள்ள) மற்றையரசர்கள்,
நினைப்பரோ - (இவ்வாறான அக்கிரமச் செயலை) நினைத்தலேனுஞ்
செய்வார்களோ? (இவ்வாறான செயலை நினைக்கவும் மாட்டார்கள் என்றபடி);
இன்ன நமக்கு போதுமோ - இத்தன்மையான செயல்கள் (குருகுலத்தாரான)
நமக்கு அடுக்குமோ? இது இயற்கை அன்று என்று-' இது (நமக்குச்) சிறிதும்
தக்க தன்று' என்று, நீசொன்னபோது-நீ (உன் மக்கட்கு) அறிவுகூறினால்
அப்பொழுது, நேயம் மைந்தர்-(உன்னிடத்து) அன்புள்ள உனது மக்கள்
(துரியோதனாதியர்), சொன்னசொல் மறுப்பரோ- (நீ) சொன்னசொல்லைத்
தடுத்து மாறு செய்வார்களோ? (எ-று,) - தாம்-அசை.. இச்செய்யுளிலுள்ள
'விதூரன் என்ற எழுவாய், மேல் 186-ஆஞ்செய்யுளில் வரும் 'பேசினான்'
என்ற முற்றைக் கொண்டு முடியும்.

     இதுவரையில் மனம்பொறுத்திருந்த விதுரன், மகாபதிவிரதையும்
பாண்டவர்க்கேயுரிய பத்தினியும் பட்டமகிஷியாய் அந்தப்புரத்திலே யிருக்குந்
தன்மையளுமான திரௌபதியையும் பந்தயம் வைக்குமாறு சொன்னசொல்
தன்மனத்தை வருத்தவே, நிஷ்டுரமாக இவ்வாறு கூறத்தொடங்குவானாயினான்.
இவ்வளவு அக்கிரமச்செயல்கள் நடக்கவும் திருதராட்டிரன் மாறுகூறாமல்
வாளாவிருந்தன னாதலால், தருமன் சூதாடுதற்கு முதற்காரணமாயிருந்த
அத்திருதராட்டிரனையே விதுரன் பழித்துக்கூறத்தொடங்கினானென அறிக.
இப்பொழுது விதுரன் பாண்டவர்க்கு நேர்ந்த துன்பத்திற்கு
மனமிரங்கிக்கூறுகின்றானாதலால், அவனை 'அருள் விதூரன்' என்றார்.
அந்தன் - வடசொல். புகன்று = புகல எச்சத்திரிபு. எழா - 'செய்யா' எள்னும்
வாய்பாட்டு உடன்பாட்டு இறந்தகால வினையெச்சம். ந+போதம் = அபோதம் :
வடசொல். இன்ன - பலவின்பாற்குறிப்பு வினையாலணையும் பெயர்.
விதூரன் - நீட்டல் விகாரம்.                                  (336)