பக்கம் எண் :

சூதுபோர்ச் சருக்கம் 322

தமையனது புதல்வர்கள் [துரியோதனாதியர்] (வஞ்சத்தினால்) வலியத்துன்பஞ்
செய்து வருத்துவார்களோ? [இவ்வாறு வருத்துவது முன்பு எங்குங்கண்டதில்லை
யென்றபடி]; அன்பு இறந்தது ஏனும் - (உனது தம்பியின் குமாரர்களிடத்து
உனக்கு) அன்பு நீங்கிற்றாயினும், நீதி அழிய-நியாயம் தவறும்படி, நீ
நடத்தினால் - (நியாயவழியில் நடக்கவேண்டிய) நீயே (இவ்வாறு முறைகேடாக)
நடத்தினால், மண்ணில்-இவ்வுலகத்தில், இன்னும் எண் இல் காலம்-இனிமேல்
அளவில்லாத பலகாலங்களிலே, என் பிறந்து முடியும்- (இன்னும்) என்னென்ன
தீங்குகள் தாம் உண்டாகுமோ! (எ - று.)

    பாண்டவரிடத்து அன்புகொண்டு இப்பொழுதுநேரும் அக்கிரமச்செய்கையை
விலக்கவேண்டுமென்று (கீழ்க்கவியில்) திருதராட்டிரனுக்குக்கூறிய விதுரன்,
இச்செய்யுளால், அவர்களிடத்து அன்பில்லாவிடினும் நீதிமுறையையாவது
பார்க்கவேண்டுமெனக் கூறுகின்றன னென அறிக.  'நீதிமுறை தவறாது
நடக்கவேண்டிய உன்னாலேயே இவ்வளவு காலத்திற்குள்ளாகவே இவ்வகைப்
பெருந்தீங்குகள் உண்டாகுமானால், பல கற்பகாலங்கழியவேண்டிய
இவ்வுலகத்தில் இனி என்ன தீங்குதான் உண்டாகமாட்டாது!' எனத்
திருதராஷ்டிரனது கொடுமையை அவனுக்கு எடுத்துக் காட்டியவாறு. தருமம்
இரண்டு கால்களையூன்றிநிற்கிற இந்தத் துவாபரயுகத்திலேயேநீ இவ்வாறு
நீதியழியநடத்தினால் இனி வருங் கலிகாலத்தில் என்னதான் நிகழுமோ
வென்றவாறுமாம்.  இனி, ஈற்றடிக்கு - இவ்வாறு நீ நடத்துவதனால்
உலகமழியுமளவும் உனக்கு அழியாத மிக்க அபகீர்த்தி யுண்டாகி
நிலைநிற்குமெனக் கருத்துக் கூறலுமாம்.  'பின்பிறந்த,' 'முன் பிறந்த' என்பவை -
இயற்கை யடைமொழிகள்; இனம்விலக்க வந்தனவல்ல.                 (338)

186.மரும மிஞ்ச விவனை வென்றவஞ்ச மன்றி மற்றிவன்
தரும வஞ்சி தனையி யைந்துபொருது மென்கைதருமமோ
கரும மன்று னக்கு நாச காலம்வந்த தாகலிற்
பெரும தஞ்ச மின்றி நெஞ்சுபேரு மென்று பேசினான்.

     (இ -ள்.) பெரும - பெருமையுடையவனே! மருமம் மிஞ்ச - நெஞ்சிலே
(பகைமை) அதிகப்பட, இவனை வென்றவஞ்சம் அன்றி - இத்தருமபுத்திரனைச்
சயித்த மோசத்தோடு நில்லாமல், இவன் தருமவஞ்சிதனை இயைந்து பொருதும்
என்கை-இவனது தரும பத்தினியையும் (பந்தயமாக) உடன்பட்டுச் சூதாடுவோம்
என்று சொல்லுதல், தருமமோ - நீதியாகுமோ? கருமம் அன்று - (இது)
செய்யத்தக்க காரியமன்று; உனக்கு நாசகாலம் வந்தது ஆகலின் - உனக்குக்
கேடுகாலம்கிட்டிவிட்டதனால், தஞ்சம் இன்றி நெஞ்சு பேரும் -
பெருந்தன்மையில்லாமல் (உனது) மனம் மாறுபடுகின்றது, என்று-, பேசினான்-
பேசிமுடித்தான்; (எ - று.)

    துரியோதனாதியர் செய்வனவெல்லாம் திருதராஷ்டிரனது உடன்பாடு
பெற்றே யாதலால், விதுரன் திருதராஷ்டிரனையே அக்கிரமஞ்செய்பவனாக
இங்குக் கூறுகின்றான்;  "முற்பகல் கண்