| டான் பிறன்கேடு தன்கேடு, பிற்பகற் கண்டுவிடும்' என்றபடி திருதராட்டிரனைச் சார்ந்தவர்கள் பாண்டவர்கட்குச் செய்யுந் தீமைகளெல்லாம் உடனே செய்பவர்கட்குத் தீமையாய் முடியும் என்பது விதுரனது உட்கோள். "விதியே மதியாய்விடும்" "கேடு வரும் பின்னே மதிகெட்டுவரும் முன்னே", "விநாஸகாலே விபரீத புத்தி:" என்பன - இச்செய்யுளின் பின்னிரண்டடிகளுக்கு மேற்கோளாகத்தக்கவை. மர்மம் - உயிர்நிலை; வடசொல்: இது, இங்கு மனம் என்ற பொருளில் வந்தது. இனி மருமம் மிஞ்ச என்பதற்கு - மிக்க இரகசியமாக எனினுமாம். மற்று - அசை. வஞ்சி - ஒரு கொடி: இதனை மாதர்கட்கு உவமைகூறுதல், மரபு: மெல்லியதாய் ஒல்கி ஒசியும் வடிவில் உவமம். இங்கு, வஞ்சி - உவமையாகுபெயர். பொருதும் - தன்மைப்பன்மைமுற்று. (339) 187.-சகுனியின்விருப்பத்தின்படியே தருமன் சூதாடுதல். விதுர னொந்து நீதி கூறவிழியி லாமை யன்றியே வெதிரெ னுங்கொ லென்னு மாறுவிழியி லானும் வைகினான் சதிர்பு ரிந்த சகுனி சொல்லையெதிர்பு ரிந்து தருமனும் அதிர வஞ்ச முதிர வந்த வருளிலானொ டாடினான். |
(இ -ள்.) விதுரன்-, நொந்து - மனம் வருந்தி, நீதி கூற - (இவ்வாறு) நீதிமொழிகளை யெடுத்துச்சொல்லவும்,-விழி இலானும் - பிறவிக் குருடனான திருதராட்டிரனும், விழி இலாமை அன்றியே - கண்ணில்லாமையேயன்றி, வெதிர் எனும் கொல் - செவிடும் ஆவேனோ, என்னும் ஆறு - என்று (தன்னைச்) சொல்லும்படி, வைகினான் - (ஒன்றும்பேசாது) இருந்துவிட்டான்; (இங்ஙன மிருக்கையில்), - சதிர் புரிந்த சகுனிசொல்லை - சாதுரியமாகச் சூதாடிவந்த சகுனியினது வார்த்தையை, தருமனும்-, எதிர்புரிந்து - எதிரில் உடன்பட்டு,- அதிர வஞ்சம் முதிர வந்த -(கண்டவரெல்லாம்) நடுங்கும்படி (தன்னிடத்தில்) வஞ்சனை அதிகப்பட வந்துள்ளவனாகிய, அருள் இலானொடு - இரக்கமில்லாதவனான அந்தச் சகுனியோடு, ஆடினான் - (மீண்டும்) சூதாடத் தொடங்கினான்; (எ - று.) விதுரன் இடித்துக் கட்டுரை கூறவும் திருதராட்டிரன் சிறிதும் செவிகொடாதிருந்ததனால், கண்ணில்லாமையோடு செவியுமில்லாதவனென வருணித்துக்கூறுமா றிருந்தது அவன் நிலைமையென்பது முன்னிரண்டடியின் கருத்து, பதிரன்-செவிடன் என்ற பொருளதான இது, பெதிரன், வெதிரன் எனத்திரியும்: வெதிரனது தன்மை, வெதிரெனப்பட்டது. அன்றியும், உறுப்புக்குறையுற்றோரை அஃறிணையாற் கூறலுமுண்டு. 'வெதிரனுங்கொல்' என்ற பாடம் சிறக்கும். உம்மை - இறந்தது தழுவிய எச்சம். 'பெதிரனுங்கொ லென்னுமாறு பெரிய தாதை வைகினான்' என்று பாடமோதுவாருமுளர். சதிர் புரிந்த - சதுரப்பாடாகப் பேசிய எனினுமாம். அருளிலான் - இரக்கமற்ற பெரும்பாவி யென்றபடி. (340) |