பக்கம் எண் :

சூதுபோர்ச் சருக்கம் 324

188.-அவ்வாட்டத்திலும் தருமன்தோற்றல்.

காய முற்றும் வஞ்ச மேக லந்ததன்ன கள்வன்மேல்
நேய முற்று நின்று தானுநிகர்பி டித்த தென்னவே
மாய முற்ற கவறு மந்த மாமன்வல்ல பத்திலே
தாய முற்றி டங்கொ டாது தருமனைச்ச தித்ததே.

     (இ -ள்.) மாயம் உற்ற கவறும் - மாயத்தன்மை பொருந்திய
பாச்சிகையும், தானும் நிகர் பிடித்தது என்ன - தானும் தனக்குச் சமானமான
துணைவனைத் தேடிப்பிடித்த தென்னும்படி, காயம் முற்றும் வஞ்சமே கலந்தது
அன்ன கள்வன்மேல் நேயம் உற்று நின்று - (தனது) உடம்புமுழுதும்
வஞ்சகமே நிறைந்திருந்தாற் போன்ற கள்ளத்தன்மையுடையோனாகிய
சகுனியினிடத்தில் அன்பு நிறைந்து நின்று,- அந்த மாமன் வல்லபத்திலே -
அந்தச் சகுனி மாமனது சாமர்த்தியத்தால், தாயம் உற்று - நல்லபந்தயம்
அமையுமாறு உருண்டு, தருமனை இடம் கொடாது சதித்தது - தருமபுத்திரன்
வெல்லும்படி சிறிதும் இடங்கொடாமல் முற்றிலும் கெடுத்துவிட்டது;  (எ - று.)

    சகுனிசொற்படியே தருமபுத்திரன் திரௌபதியைப் பந்தயம் வைத்துத்
தோற்றானென்பது, கருத்து.  இச்செய்தியை வெளிப்படையாகக் கூறுதற்கு
வாய்கூசிக் கவி இவ்வாறு சூதின்மேலேற்றி மறைபொருளாகக் கூறிப்
பெறவைத்தனர்.  பிறிதினவிற்சியணியின்பாற்படும்.  பாண்டவர்களை
எவ்வழியினால் வெல்லலாமென ஆராய்ந்து விரும்பிச் சகுனி மேற்கொண்ட
சூதானது, தானும் 'எவரைச் சேர்ந்திருந்தாற் பிறர்க்குப் பெருந்தீங்குகளைச்
சிறிதுந்தடையின்றிச் செய்து மகிழ்ச்சிகொண்டாடலாம்?' என்று வெகுகாலம்
தேர்ந்து அச்சகுனியையே தனக்குத் தக்கதுணைவனென்று நிச்சயித்து
அவனோடு உரிமைகொண்ட தென்னுமாறிருந்த தென்பது, 'தானும் நிகர்
பிடித்ததென்ன' என்பதன் கருத்து.  தானும் என்ற உம்மை - சகுனி தனக்குத்
தக்கதென்று நாடித் தன்னை மேற்கொண்டாற்போலவே யென்ற பொருளைத்
தந்ததனால், இறந்தது தழுவிய எச்சமாம்.  காயமுற்றும் வஞ்சமே கலந்ததன்ன
கள்வன் - "துர்ச்சனருக்கு அங்கமுழுதும் விடமேயாம்".            (341)

189.-தருமன்எல்லாப்பொருள்களையும் இழந்தும் சிறிதுங்
கலங்காமை.

இன்ன தாயம் வேண்டு மென்றெ றிந்தபோது மற்றவன்
சொன்ன தாய மேபு ரண்டுசோர்வி லாமல் வருதலின்
தன்ன தாய வரசு வாழ்வு தரணிமன்ன னல்கினான்
அன்ன தாய போது நெஞ்சசைந்தி லான சஞ்சலன்.

     (இ -ள்.) மற்றவன் - பாண்டவர்க்கு எதிரியாகிய சகுனி, இன்ன தாயம்
வேண்டும் என்று எறிந்த போது - '(இப்பொழுது)