பக்கம் எண் :

சூதுபோர்ச் சருக்கம் 325

இந்தப்பந்தயம் விழவேண்டும்' என்று (பாச்சிகையை) உருட்டியாடியபோது,
சொன்ன தாயமே புரண்டு சோர்வு இலாமல் வருதலின் - (அச்சகுனி)
கருதிக்கூறிய பந்தயமாகவே உருண்டு தவறாமல் விழுந்ததனால், தரணி
மன்னன் - நிலவுலகத்துக்கு அரசனாகிய தருமபுத்திரன், தன்னது ஆய அரசு
வாழ்வு நல்கினான் - தனக்கு உரிமையுள்ள அரசாட்சியையும்
செல்வவாழ்க்கையையும் (கீழ்க்கூறி வந்தபடியே தோற்று) இழந்துவிட்டான்;
அன்னது ஆயபோதும் - (எல்லாவற்றையும் இழந்த) அந்நிலைமை (தனக்கு)
நேர்ந்த அக்காலத்திலும், அசஞ்சலன் - உறுதியான மனமுடையனாகிய
தருமபுத்திரன், நெஞ்சு அசைந்திலான் - சிறிதும் மனங்கலங்காதிருந்தான்; 
(எ- று.)

     இதனால், எல்லாம் வினைப்பயனென்றே கருதிச் சுகதுக்கங்களை ஒரு
நிகராகப் பாவிப்பவன் தருமபுத்திரனென்பது போதரும்;  கீழ்ப் பொதுவாகத்
தருமபுத்திரன் தோற்றானென்று கூறி வந்து, அதன் காரணத்தை இச்செய்யுளில்
விவரித்தார்.  அசஞ்சலன் - வடசொல்.                          (342)

வேறு.

190.-தருமன்முழுவதுந்தோற்றதைக் கண்டு சபையிலுள்ளோர்
வருந்துதல்.

முரசினை யுயர்த்த கோமான்மொழிந்தன முழுதுந் தோற்றுப்
பரவுவ தொன்று மில்லாப்பான்மையோ டிருந்த காலை
விரைசெறி யலங்கல் சோரமெய்குலைந் துள்ளம் வெம்பி
அரசவை யிருந்தோர் தம்மிலருளினா லழிந்து நொந்தார்.

     (இ -ள்.) முரசினை உயர்த்த கோமான் - முரசக்கொடியை
உயரவெடுத்தவனான தருமபுத்திரன், மொழிந்தன முழுதும் தோற்று -
(பந்தயமாக) எடுத்துக்கூறிய எல்லாப்பொருள்களையும் (சூதில்) இழந்து,
பரவுவது ஒன்றும் இல்லா பான்மையோடு இருந்த காலை - (மறுபடியும்)
பந்தயமாகக் குறித்தற்கு உரிய பொருள் ஒன்றுமில்லாத தன்மையோடு இருந்த
சமயத்திலே,- அரசு அவை இருந்தோர் - அவ்விராச சபையில்
வந்திருந்தவர்கள்,- தம்மில் - தங்களுக்குள், அருளினால் - (தருமபுத்திரன்
மீதுள்ள) இரக்கத்தினால், விரைசெறி அலங்கல் சோர - (தாம் அணிந்துள்ள)
வாசனை நெருங்கிய மாலைகள் தளர்ந்துவிழும்படி, மெய்குலைந்து - உடல்
நடுங்கி, உள்ளம் வெம்பி - மனம் தவித்து, அழிந்து நொந்தார் - மிகவும்
வருந்தினார்கள்; (எ - று.)

    இரண்டாம் அடி - பந்தயம் வைத்தற்கு ஏதேனுமிருந்தால் தருமபுத்திரன்
இன்னும் சூதாடுவனென்பது தோன்ற நின்றது; கீழ்ச்செய்யுளின் ஈற்றடியும்
இக்கருத்தை விளக்குவ தென்னலாம்.  மெய்குலைதலும், மனம் வெம்புதலும் -
சோகக்குறிகள்.