பரவுதல் - சொல்லுதல். இதுமுதல் இருபத்தொரு கவிகள் - இச்சருக்கத்தின் இரண்டாங்கவிபோன்ற அறுசீராசிரிய விருத்தங்கள். (343) 191.-இதுமுதல் மூன்றுகவிகள் -சபையிலுள்ளவர்கள் இரங்கிக் கூறுவன. குருமர புடைய வேந்தன் கொடியனோகொடிய னென்பார் மருமக னுயிருக் கிந்த மாமனோமறலி யென்பார் தருமனித் தனைநாட் செய்ததருமமும் பொய்யோ வென்பார் உருமினுங் கொடிய வீமனுருத்தினி யெழுமோ வென்பார். |
(இ -ள்.) (சபையிலிருந்த அரசர்களிற் சிலர்),-'குரு மரபு உடைய வேந்தன் - குருவமிசத்திற் பிறந்த துரியோதனராசன், ஓ கொடியன் கொடியன் - மிகவும் கொடியவன்! கொடியவன்!!' என்பார் - என்று சொல்வார்கள்; (சிலர்), மருமகன் உயிருக்கு இந்த மாமன் மறலியோ - 'மருமகனாகிய துரியோதனனது உயிர்க்கு இந்தச் சகுனி யமன்தானோ!' என்பார்-; (சிலர்), தருமன் இத்தனை நாள் செய்த தருமமும் பொய்யோ - 'தருமபுத்திரன் இவ்வளவு காலமாகச் செய்துவந்த தருமமெல்லாம் பொய்த்து விடுமோ!' என்பார்-;(சிலர்), உருமினும் கொடிய வீமன் உருத்து இனி எழுமோ - 'இடியைப்பார்க்கிலுங் கொடுமையுடையவனாகிய வீமசேனன் கோபங்கொண்டு இனிப் (போர்க்குப்) புறப்படுவான் போலும்,' என்பார்-; (எ - று.) 'குருமரபுடையவேந்தன்' என்றதனால், தூய்மையான அக்குலத்திற் பிறந்தவ ரொருவரும் இவ்வாறு கொடுமையுடனிருத்தற்குக் காரணமில்லையே யென்று குறித்தவாறாம். மருமகன் - உடன்பிறந்தவள் மகன். சகுனி இவ்வாறு மாயச்சூதாடித் தருமனைத் தோற்கச் செய்தது துரியோதனனது நாசத்துக்குக் காரணமாகுமென்று கருதி, 'மருமகனுயிருக்கு இந்த மாமன் மறலியோ' என்றார்கள். காலக்கொடுமையினால் இப்பொழுது தருமபுத்திரனது தருமம் பொய்த்ததுபோலத் தோன்றினும், விரைவில் தவறாது பலிக்கு மென்பது, மூன்றாமடியின் கருத்து. இனி, தருமனுக்கு ஒரு நற்பயனும் விளையாது பழுதுபட்டதனால் அத்தருமன் செய்தனவாகக்கூறிய தருமங்களும் பொய்தானோ? உண்மையாகச் செய்திருந்தால் பயனளித்தலில் தவறமாட்டாவன்றோ! எனக் கருத்துக்கூறுவாரு முளர். பொய்யோ - (இங்ஙனம் நன்மை விளையாது தீமைவிளைத்துப்) பொய்யாகக்கடவதோ? எனினுமாம்: அங்ஙனமாகக் கடவதன்றே யென்றவாறு. இதுவரையில் தருமனுடைய சொற்குக் கட்டுப்பட்டு அடங்கியிருந்த வீமன் இப்பேரவமானத்திற்குச் சிறிதும் மனம்பொறாது சினங் கொண்டு போர்க்கு எழக்கூடு மென்பது, நான்காமடியின் கருத்து. பலகூறி வருந்துகிற அரசர்கட்கு ஈற்றடி ஒரு சமாதான மாகுமென்க; இவ்வாறே அடுத்த செய்யுளிலுங்காண்க. 'ஓ கொடியன்' என்னுமிடத்தில், ஓகாரம் - கொடுமையின் மிகுதி விளக்கும். 'கொடியன் கொடியன் |