அவனுக்கு மணஞ்செய்வித்தற்கு ஒருமகளையும் பெற விரும்பியவனாய், யாசன் உபயாசன் என்னும் முனிவர்களைக்கொண்டு புத்திர காமயாகஞ் செய்விக்க, அவ்வேள்விப்பயனால் அவ்வோமத்தீயினின்று ஒரு குமாரனும் ஒரு குமாரியும் தோன்றினர்; அக்குமாரியே, திரௌபதி. 'பூந்தழற்பிறந்த பாவை' என்றது - கருப்பத்திற் பிறவாதவளெனத் திரௌபதியினது உற்பத்திச் சிறப்பை யுணர்த்தும். யாகாக்கினியாதலின், 'பூந்தழல்' என்றார். மாய்ந்த-'அன்' சாரியை பெறாத பலவின்பால் வினைமுற்று. மநு - அவனாற் செய்யப்பட்ட நூலுக்குக் கருத்தாவாகுபெயர். தேவர் கோன்மதலை இருகண் சேந்தனன் - "உயர்திணை தொடர்ந்த பொருள் முதலாறும், அதனோடு சார்த்தினத்திணை முடிபின" என்பது விதி. சேந்தனன் - சிவந்தனன் என்பதன் மரூஉ. (345) | 193. | பழியுடைத் தந்தை யொன்றும்பகர்கலா திருக்குமென்பார், விழியுடை யவரை யன்றோ மேன்மையோர் வெறுப்பதென்பார், அழியுமே யிவனான் மைந்த ரரும்பெருஞ் செல்வமென்பார், வழிவழி யாக நிற்கும் வசையிவன் புரிந்த தென்பார். |
(இ -ள்.) (சிலர்),- பழி உடை தந்தை ஒன்றும் பகர்கலாது இருக்கும் - 'பழியையுடைய தந்தையாகிய திருதராட்டிரன் (இவ்வாறு முறைகேடு நிகழவும் தனதுமகனாகிய துரியோதனனைத் தடுத்து) ஒன்றும் பேசாமல் இருக்கின்றான் (இது என்ன (கொடுமை!)', என்பார்-; (அதுகேட்ட சிலர்), விழி உடையவரை அன்றோ மேன்மையோர் வெறுப்பது - 'கண்களை யுடையவர்களை யல்லவோ மேன்மக்கள் வெறுத்துக் கூறுவது [கண்ணில்லாக் குருடன் மீது குறைகூறுவதிற் பயனில்லையே]' என்பார்-; (சிலர்), இவனால் - '(இக்கொடுமைக்கு இயைந்து நின்ற) இத்திருதராட்டிரனால், மைந்தர் அரும்பெருஞ் செல்வம் - (இவனது) மக்களான துரியோதனாதியரது (பெறுதற்கு) அரிய பெருஞ் செல்வம், அழியுமே - அழிந்தேவிடும்,' என்பார்; (சிலர்), இவன் புரிந்தது - 'இந்தத் திருதராஷ்டிரன் செய்தது, வழி வழி ஆக நிற்கும் வசை - தலைமுறை தலைமுறையாக [என்றும் அழியாது] தொடர்ந்து நிலைநிற்கும் அபகீர்த்தியாகும்,' என்பார்-; (எ - று.) இவை, தனது மக்கள்செய்த முறைகேட்டைத் தடுக்காது நின்ற திருதராட்டிரன்மேல் அவையிலுள்ளோர் குற்றங்கூறியனவாம். 'விழியுடையவர்' என்றது, ஊனக்கண்ணோடு ஞானக்கண்ணையும் பெற்றிருப்பவரென்ற பொருளைக் காட்டுமென்னலாம். மேன்மையோர் வெறுப்பது - தொழிற்பெயர் வினைமுற்றுத் தன்மையை யடைந்து பயனிலையாய் வந்தது. அழியுமே, ஏகாரம் - தேற்றம்; இனி, கெட்டுவிடுமே! எனில், இரக்கப் பொருளது. இவன் புரிந்ததாகிய வசை வழிவழியாக நிற்கும் என இயைத்துப் பொருள் கூறினுமாம்; இவன் (இங்ஙனம்) புரிந்ததனால் வசை வழி வழியாக நிற்கும் என்றலும் ஏற்கும். (346) |