பக்கம் எண் :

சூதுபோர்ச் சருக்கம் 329

194.-துரியோதனன்வீடுமனைநோக்கிக் கூறத்தொடங்குதல்.

இன்னன தரணி வேந்த ரிருந்துழியிருந்து கூற
மன்னனுந் தம்பி தானு மாமனுமாறா வண்மைக்
கன்னனுந் தம்மி னெண்ணிக்கங்கைமா மகனை நோக்கிப்
பன்னக துவசன் கேட்டோர்பலருமெய் பனிக்கச் சொல்வான்

     (இ -ள்.) இன்னன - இவைபோன்ற பல வார்த்தைகளை, தரணி வேந்தர்
- (அச்சபையில் வந்திருந்த) நிலவுலகத்தையாளும் அரசர்கள், இருந்தஉழி
இருந்து கூற - தாம் இருந்தவிடங்களில் இருந்தபடி சொல்லிக்கொண்டிருக்க,-
மன்னனும் - துரியோதன ராசனும், தம்பி தானும் - அவன் தம்பியான
துச்சாதனனும், மர்மனும் - (அவர்கட்கு) மாமனாகிய சகுனியும், மாறா வண்மை
கன்னனும் - நீங்காத ஈகைத்தன்மையை யுடைய கர்ணனும், (ஆகிய துஷ்ட
சதுஷ்டர்கள் ஒருங்கு கூடி), தம்மின் எண்ணி - தமக்குள் ஆலோசித்து,-
(பிறகு), பன்னகதுவசன் - (அவர்களுள் ஒருவனாகிய) பாம்புக்கொடியை
யுடையவனான துரியோதனன், - கேட்டோர் பலரும் மெய் பனிக்க -
கேட்டவர்களெல்லாரும் உடம்பு நடுங்கும்படி, கங்கை மா மகனை நோக்கி -
கங்கையின் குமாரனாகிய வீடுமனைப் பார்த்து, சொல்வான் - (சிலவார்த்தை)
கூறுவானாயினான்;  (எ - று.)- அவற்றை, அடுத்த கவியிற் காண்க.

     இங்ஙனம் அந்தந்த அரசர்கள் தாம்தாம் இருந்த இடத்திலிருந்தபடி
தமக்குட் சொல்லிக்கொண்டிருந்தார்களே யன்றி எவரும் எழுந்து
துரியோதனனுக்கு மாறாக ஒன்றுஞ்செய்ய மாட்டிற்றிலரென்பது, முதலடியில்
விளங்கிற்று.  'எண்ணி' என்னும் வினையெச்சம் துரியோதனன் முதலிய
நால்வரது வினையாயினும், அவர்களுள் ஒருவனான துரியோதனனது
வினையாகிய 'சொல்வான்' என்பதைக் கொண்டு முடிந்தது; இவ்வகை முடிபை
இலக்கியங்களிற் காணலாம்: அன்றி, எண்ணி - எண்ண என எச்சத்திரிபுமாம்.
பந்நகம் என்ற சொல், பத் ந க ம் என்றுபிரிந்து - கால்களினால் நடவாதது
[மார்பினால் ஊர்ந்துசெல்வது] என்றும் பந்நம் கம் என்று பிரிந்து - வளைந்து
செல்வது என்றும் காரணப்பொருள் பெறும்.                       (347)

195.-துரியோதனனதுசெருக்குமொழி.

தண்ணிய தருமன் செய்த பாவமோசகுனி செய்த
புண்ணிய நெறியோ வந்தப்பொதுமகள் யாக சாலை
நண்ணிய தவறோ மற்றைநால்வருந் தகைமை கூர
எண்ணிய மதியோ வெண்ணினிங்ஙனம் விளைந்த தென்றான்.

     (இ -ள்.) 'எண்ணின் - ஆலோசிக்கு மிடத்து,- தண்ணிய தருமன் செய்த
பாவமோ - மிக்க எளிமையையுடைய தருமபுத்திரன் (முற்பிறவியிற்) செய்த
தீவினையோ! (அன்றி), சகுனி செய்த புண்ணியம் நெறியோ - சகுனி (பூர்வ
ஜந்மத்திற்) செய்த நல்