கருத்து. வீடுமனை 'தவத்தினாலுயர்ந்த கோ' என்றது, இளமையிலேயே தான் மணந்து கொள்வதில்லை என்றும், முடிசூடுவதில்லை என்றும் பிரதிஜ்ஞை செய்து ஒழித்தற்கரிய மண்ணாசை பெண்ணாசைகளை யொழித்துத் தனது ஆயுளளவும் பிரமசரியத்தையே மேற்கொண்டிருப்பதனா லென்க. நகா கூறல் என இயையும்; நகா என என்று இயைத்துப் பொருள் கூறலு மொன்று. மூத்தோர் கூறிய சொல்லுக்குச் செவி கொடாததனால், துரியோதனனை 'போதமில்லான்' என்றார். (349) 197.-இதுமுதல் மூன்றுகவிகள் -ஒரு தொடர்: துரியோதனன் விதுரனைநோக்கிக் கூறுவன. இரங்கிநின் றுருகு நெஞ்சினிளையதன் பிதாவை நோக்கி அரங்கடி சமர வேலா னழல் பொழி யுருமிற் சொல்வான் உரங்குடி யிருந்த தோளா னுரிமையி னெமக்குத் தோற்ற துரங்கமுங் களிறுந் தேருந் துறைதுறை கவரச் சொற்றி. |
(இ - ள்.) (பிறகு),-அரம் கடி சமரம் வேலான் - அரத்தினால் அராவிக் கூர்செய்யப்பட்டபோர்க்கு உரியவேலாயுதத்தையுடையவனாகிய துரியோதனன்,- இரங்கி. நின்று உருகும் நெஞ்சின்-(கீழ் நடந்த செயலுக்காக) இரக்கங் கொண்டு உருகுகின்ற மனத்தையுடையவனாகிய, தன் இளைய பிதாவை-தனது சிறிய தந்தையான விதுரனை, நோக்கி-பார்த்து,-அழல்பொழிஉருமின் சொல்வான்- நெருப்பைக் கக்குகின்ற இடிபோல (மிகக்கொடுமையாக)ச் சில வார்த்தை கூறுவானாயினான்:-உரம் குடி இருந்ததோளான் - வலிமைபொருந்திய தோள்களையுடையவனாகிய தருமபுத்திரன், உரிமையின் எமக்கு தோற்ற- (சூதாடி) முறைமையாகவே எமக்குத் தோற்றுவிட்ட, துரங்கமும்- குதிரைகளையும், களிறும்-யானைகளையும், தேரும் - தேர்களையும், துறை துறை-அந்தந்த இடங்களிலிருந்து, கவர-கவர்ந்து கொண்டுவரும்படி, சொற்றி (நமது ஏவலாளர்க்குக்) கட்டளை கூறுவாய்; (எ - று.) துரியோதனன் தருமனுடைய சதுரங்கசேனைகளையும் கவர்ந்து வர ஏவலாளர்களுக்குக் கட்டளையிடும்படி கூறுகிறான். மிக்க கொடுமையுடைமையால், துரியோதனன் வார்த்தைக்கு இடி உவமை கூறப்பட்டது. 'உரிமையின் எமக்குத் தோற்ற' என்பதற்கு - எமக்கு உரியவையாகும்படி தோற்ற என்றுமாம். 'துரங்கமும் களிறும் தேரும்' என்றது - உபலக்ஷணத்தாற் காலாட்படையையுங் குறிக்கும். சொற்றி-ஏவலொருமை வினைமுற்று; சொல்-பகுதி, ற்-எழுத்துப்பேறு, இ - விகுதி: பகுதியீற்றுலகரம் றகரமானது - சந்தி. அரம் கடி வேல் - "அரந்துடைத்தவைவேல்" என்றார் சிந்தாமணியாரும். (350) | 198. | தொல்லைமா நகரு நாடுந்தோரண நாட்டச் சொற்றி எல்லையி ணிதிக ளெல்லா மிம்பரே யெடுக்கச் சொற்றி நல்லெழின் மடவார் தம்மை நம்பதி யெய்தச் சொற்றி சொல்லிய விளைஞர் தாமுந் தொண்டின ராகச் சொற்றி. |
|