பக்கம் எண் :

சூதுபோர்ச் சருக்கம் 333

மொழித்தொகைப் பன்மொழித் தொடர்.  துவர் - பவழமும், செந்நிறமும்.
துவரிதழ்த் தவளமூரல் - முரண்தொடை.  புணரி -(நதிகளோடு) புணர்வது
எனக் கடலுக்குக் காரணக்குறி.  உவர்ப்புணரி - லவணசமுத்திரம்.  புகறி, புகல்
- பகுதி.  கண்ணோட்டத்தால் தோன்றுவதாதலால் தாட்சிணியத்தை
'கண்ணருள்' என்றார்.                                      (352)

200.-இதுமுதல் மூன்றுகவிகள் -ஒரு தொடர்:
விதுரன் மறுத்துக் கூறியன
,

அறந்தரு மைந்தன் றன்னை யறனலா தியற்றி நம்பி
திறந்தரு செல்வம் யாவுந் தீமையிற் கவர்த லுற்றாய்
மறந்தரு வலியு மன்று மணந்தரு வாழ்வு மன்று  
திறந்தரு புகழு மன்று நெறிதரு மதியு மன்றே.

     (இ -ள்.) (அதுகேட்டு விதுரன் துரியோதனனை நோக்கிக் கூறுவான்);-
'நம்பி - சிறந்தவனே! அறம் தரு மைந்தன் தன்னை - அறக்கடவுள் பெற்ற
புதல்வனாகிய தருமபுத்திரனை, அறன் அலாது இயற்றி - தருமவிரோதமாகிய
சூதாடுதலைப் புரியும்படி செய்து, திறம்தரு செல்வம் யாவும் தீமையின் கவர்தல்
உற்றாய் - (அவனது) பலவகைப்பட்ட செல்வங்களையும் தீயவழியாற் கவரத்
தொடங்கினாய்; (இவ்வாறு நீ தொடங்கியது), மறம் தரு வலியும் அன்று -
வீரத்தைத் தருகிற சாமர்த்தியமு மன்று; [இது சுத்த வீரர்க்குச் சிறிதுந்தகாது
என்றபடி]; மணம்தரு வாழ்வும் அன்று-மங்களகரமான வாழ்க்கையுமன்று; நிறம்
தரு - பெருமையைத் தருகிற, புகழும் அன்று-; நெறி தரு மதியும் அன்று -
தருமசாஸ்திரங்களிற் கூறிய புத்தியுமன்று; (எ - று.)

     'நீ மாயச்சூதாட்டத்தில் வென்றதையே மிகவும் பாராட்டுகிறாய்; இது
வீரத்திற்கும் புகழுக்கும் நீதிநெறிக்கும் முற்றும் மாறுபட்டதாய், நினது
நாசத்திற்கே காரணமாயுள்ளது' என்று கூறி விதுரன் துரியோதனனுக்கு
அவனதுசெயல் தகாததென எடுத்துக் காட்டின னென்க. அறம் - அறக்கடவுட்கு
ஆகுபெயர்; யமனுக்கு 'தர்மராஜன்' என்று ஒரு பெயரிருத்தலுங் காண்க. நம்பி
- ஆண்பாற் சிறப்புப்பெயர்; அண்மைவிளியாதலின், இயல்பு. துரியோதனனை
நம்பியென விளித்தது, மூர்க்கனாகிய அவனைத் தன் வசப்படுத்தும்
பொருட்டாகும்: அடுத்த செய்யுளில் "கடவுளர் கற்பம் வாழ்வாய்" என்று
வாழ்த்துவதும் இதுபற்றியே.  துரியோதனனுடைய செயல் மிக்க கொடுமை
யமைந்ததென்பதற்கு, 'அறனலாதியற்றி' என்றதனோடு அமையாமல், 'தீமையிற்
கவர்தலுற்றாய்' என்றுங் கூறினான். திறம் தரு - மேன்மையமைந்த
என்றலுமாம்.                                                 (353)

201.திருத்தக மொழிந்தவெல்லாஞ் செய்தனையெனினுஞ்செவ்வி
மருத்தகு தெரியன் மாலை மாசிலாமன்னர் முன்னர்
உருத்தகு கற்பி னாளை யுரையலாதுரைக்கு மாற்றம்

கருத்தினி னினையல் கண்டாய்கடவுளர் கற்பம் வாழ்வாய்.