பக்கம் எண் :

சூதுபோர்ச் சருக்கம் 334

     (இ -ள்.) திரு தக - (உனக்குச்) சிறப்பு உண்டாம்படி, மொழிந்த
எல்லாம் - (நீ எனக்குக் கட்டளையாகக்) கூறியவற்றை யெல்லாம், செய்தனை
எனினும் - செய்து முடித்தாயானாலும்,-செவ்வி மரு தகு தெரியல் மாலை -
அழகையுடைய நறுமணம் வீசுகிற விளங்குகின்ற மாலையையணிந்த, மாசு இலா
மன்னர் - குற்றமற்ற அரசர்கட்கு, முன்னர்-எதிரில், உரு தகு கற்பினாளை-
அழகிய உருவத்தையும் சிறந்த பதிவிரதா தருமத்தையு முடையவளான
திரௌபதியைக் குறித்து, உரை அலாது உரைக்கும் மாற்றம்-சொல்லத்தகாத
சொற்களைச் சொல்லுதலை மாத்திரம், கருத்தினில் நினையல்-மனத்தில்
எண்ணாதிருப்பாயாக; (அவ்வாறு இருப்பாயாயின்), கடவுளர் கற்பம் வாழ்வாய்-
தேவர்களது ஆயுளளவும் அழியாது [நீடுழிகாலம்] வாழ்ந்திருப்பாய்; (எ-று.)-
கண்டாய்-முன்னிலையசை; தேற்றமுமாம்.

    தருமபுத்திரனது எல்லாப் பொருள்களையும் நீ கைப்பற்றினாலும்,
மகாபதிவிரதையாகிய திரௌபதியைக் குறித்து இழிசொற்கள் கூறுதலை
மாத்திரம் தவிர்ந்திடு; இதனால், உனக்கு மிக்க க்ஷேமமுண்டாகும் என்று
விதுரன் துரியோதனனுக்கு அறிவு கூறின னென்க.  திருத்தக-உனக்குச்
செல்வம் மிகும்படி யெனினுமாம்.  'மொழிந்தவெல்லாம்' என்றது, கீழ் 197 -
ஆங் கவி முதல் கூறியவற்றை.  'செய்தனையெனினும்' என்பதிலுள்ள உம்மை
- அவ்வாறு செய்தலும் தகாததே யென்ற பொருளைக் காட்டும்.  உருத் தகு
கற்பினாள் - (கண்டவர்) அஞ்சத்தக்க [மிக்க] கற்பையுடையவளான திரௌபதி
யெனக் கூறினுமாம்.  கற்பாவது - கணவனைத் தெய்வமாக மதித்து அவனை
வழிபட்டு நடக்குந் தன்மை: கன்னிகையாயிருக்கும்போது தாய் தந்தை
முதலியோராலும் விவாகமான பின்னர்க் கணவன் முதலியோராலும்
கற்பிக்கப்படுவதாதலின், இது இப்பெயரதாயிற்று.  நினையல்-'அல்' ஈற்று
எதிர்மறை யொருமையேவல்.  கற்பம்=கல்பம்; வடசொல்: நெடுங்காலவெல்லை.
தேவர்கள் அமரராதலின், அவர்களது வாழ்ச்சியான கற்பகாலம் ஆயுள்
நெடுமைக்கு எடுத்துக் கூறப்பட்டது.  தெரியல் - தொழிலாகுபெயர்.     (354)

202.விண்ணிலங் கருகித்தோன்று மேதகு வடமீ னன்றி,
மண்ணிலங் குவமை சொல்ல மடந்தையர் யாரு மில்லாப்,
பண்ணலங் கடந்த மென்சொற் பாவையைப் பழிக்க நீ யின்று,
எண்ணின்முன் கேட்ட வார்த்தைக் கேற்றதுன் னெண்ண
                                         மென்றான்.

     (இ -ள்.) விண்ணில் அருகி தோன்றும் மேதகு வடமீன் அன்றி -
வானத்தில் வடக்குத்திக்கில் அருமையாகக் காணப்படுகின்ற மேன்மை
பொருந்திய அருந்ததீ நக்ஷத்திரமல்லாமல், மண்ணில் உவமை சொல்ல
மடந்தையர் யாரும் இல்லா - நிலவுலகத்தில் ஒப்பாக எடுத்துக்கூறுதற்கு
மகளிரொருவரையும் கிடைக்கப் பெறாத [எல்லாமகளிரினுஞ் சிறந்த], பண் நலம்
கடந்த மெல்சொல் பாவையை - இராகத்தின் இனிமையை வென்ற
மென்மையான சொற்களையுடைய சித்திரப்பாவை போன்றவளாகிய