பக்கம் எண் :

சூதுபோர்ச் சருக்கம் 335

திரௌபதியை? நீ பழிக்க - நீ வசை கூறுவதை, இன்று எண்ணின் - இப்போது
ஆலோசித்தால், உன் எண்ணம் - உனது எண்ணமானது, முன்கேட்ட
வார்த்தைக்கு ஏற்றது - (நான்) முன்பு கேள்விப்பட்டுள்ள விஷயத்திற்கு
ஒத்துள்ளது, என்றான்-என்று கூறினான் (விதுரன்); (எ - று.) 'அங்கு' என்பது
இரண்டும் அசை.

     பல ஆடவரை மணஞ் செய்தவிடத்தும் திரௌபதியின் கற்பிற்கு ஒரு
குறைவில்லையென்பது விளங்க, அவளுக்கு அருந்ததியை உவமை கூறினான்.
அருந்ததீ நக்ஷத்திரம் வடக்கில் விளங்குதலால் 'வடமீன்' எனப்பட்டது;
அதனை, இங்ஙனம் அறிக; - வடக்கில் ஸப்தருஷிமண்டல மென்ற நட்சத்திரக்
கூட்டமொன்று இருக்கின்றது; அதில் நான்கு நட்சத்திரங்கள் நீண்ட சதுரமாய்ப்
பெட்டிப் பண்டிபோ லிருக்கின்றன; அவற்றின் முன்புறத்து அடியில்
நடுவளைந்த ஏர்க்கால்போல் மூன்று நட்சத்திரங்கள் உள்ளன; இவற்றில் நடு
நட்சத்திரம்.  வசிஷ்ட நட்சத்திரம்; அதனடியிற் கிட்டினதாய் நுட்பநோக்கினாற்
காணத்தக்கதொரு நட்சத்திர முண்டு; அதுதான் அருந்ததி நட்சத்திரம்.  இந்த
நட்சத்திரம் மிக நுண்ணிதாய்க் காணப்படுதல் மாத்திரமேயன்றி மரணகாலங்
கிட்டியவர்க்குக் கட்புலனாகாதிருத்தலாலும், அதற்கு 'அருகித்தோன்றும்' என்ற
அடைமொழி கொடுக்கப்ட்டது; இதனை "உலக்குநா ளணித்தாயினர்க்கொளிக்கு
மீனொக்கும்" என்பதனாலும் அறிக.  மின்னுவது மீன் எனக் காரணப் பெயர்.
கேட்டவார்த்தை, மேலே விளக்கப்படும்.  பண் நலங்கள் தந்த என்றும்
பிரிக்கலாம்.                                               (355)

203.-துரியோதனன்கேட்டுக்கொண்டபடி விதுரன்
அவனுக்கு ஒருவிஷயம்கூறத்தொடங்குதல்
.

கேட்ட சொல் வினவு நாககேதனன் கேட்ப மீண்டும்
வாட்டமி லன்பி னோடு  மனங்கனிந் துருகி வீழ
நாட்டமு நன்னீர் மல்க நாவமிழ் தூறப் பின்னுங்
கோட்டமில் சிந்தை யானுங் குரிசிலுக் குரைக்க லுற்றான்.

     (இ -ள்.) கேட்ட சொல் வினவும் - '(முன்பு நீ) கேட்ட வார்த்தை
(யாது?') என்று வினாவின, நாககேதனன் - அரவக் கொடியோனாகிய
துரியோதனன், மீண்டும் கேட்ப - மறுபடியும் கேட்டறியும்படி,-கோட்டம் இல்
சிந்தையானும் - கோணுதலில்லாத மனத்தையுடையவனாகிய விதுரனும்,-மனம்
கனிந்து உருகி வீழ - (தனது) நெஞ்சு நெகிழ்ந்து உருகிக் கரையவும்,
நாட்டமும் நல் நீர் மல்க - கண்களும் மிகுதியாக நீரைச் சொரியவும், நா
அமிழ்து ஊற - நாக்கில் இனியநீர் சுரக்கவும்,-குரிசிலுக்கு -
அத்துரியோதனராஜனுக்கு, வாட்டம் இல் அன்பினோடு-குறைதலில்லாத
[நிறைந்த] அன்புடனே, பின்னும் உரைக்கல் உற்றான் - பின்னும் சொல்லத்
தொடங்கினான்; (எ - று.)-அதன் விவரத்தை, அடுத்த நான்கு கவிகளிற்
காண்க.