நாககேதனன் கேட்ப, கோட்டமில் சிந்தையான், வீழ, மல்க, ஊற, குரிசிலுக்கு அன்பினோடு உரைக்கலுற்றான் என இயையும். துரியோதனன் திரௌபதியைப் பழித்துச் சபையிற்கொணரும்படி கூறியது தனது கருத்துக்கு மாறாதலாற் கோபங்கொள்ள வேண்டியவனாயிருந்தும், விதுரன் அவ்வாறு கோபங்கொள்ளாது "இத்தீச் செயலினால் இத்துரியோதனனுக்குத் தீங்கு நேரிடுமே!" என்று இரக்கங்கொண்டு கூறலாயின னென்க. மனங்கனிந்து உருகி வீழ்தலும் நாட்டம் நீர்மல்குதலும் - இரக்கக்குறி; நா அமிழ்து ஊறியது, சொல்லப்போகிற விஷயத்திலுள்ள ஊற்றமிகுதியாலென்க. பாண்டவர் துரியோதனாதியர் என்னும் இரு திறத்தாரிடத்திலும் ஒரு நிகரான அன்பையுடையவனாய்ப் பக்ஷபாத மில்லாதவனாதலின், விதுரனை 'கோட்டமில் சிந்தையான்' என்றார். நாட்டம் - நாடுதற் கருவி: எனவே, கண்: அம் - கருவிப் பொருள் விகுதி. (356) 204.-இதுமுதல் ஐந்துகவிகள் -விதுரன் வார்த்தை. தானவ ராகி யும்மைத் தனித்தனியிறந்தோர் யாரும் மானவ ராகி யிம்மை வந்தன ரிம்ப ரென்றே தானவர் பொறைபொ றாமற்றராதல மென்னுஞ் செங்கண் மானவ ராக வேத மலர்முனிதனக்குச் சொன்னாள். |
(இ -ள்.) 'உம்மை - முற்பிறப்பில், தானவர் ஆகி - அசுரர்களாகப் பிறந்து, தனி தனி இறந்தோர் யாரும்-(திருமாலாற் கொல்லப்பட்டுத்) தனித்தனியே இறந்தவர்களனைவரும், இம்மை - இப்பிறப்பில், மானவர் ஆகி - மனிதர்களாய்ப் பிறந்து, இம்பர் - இவ்வுலகத்தில், வந்தனர்-வந்து நிறைந்தார்கள்,' என்று-,-தராதலம் என்னும் செம் கண் மான்-பூமிதேவியென்கிற செவ்வரி பரந்த கண்களையுடையமான் போன்ற தெய்வமகள், தான் அவர் பொறைபொறாமல்-தான் அவர்களாலுண்டான பாரத்தைச் சுமக்கமாட்டாமல், அவராகம் வேதம் மலர் முனிதனக்கு - ஆசையற்றவனும் வேதத்தை யோதுபவனுமாகிய தாமரை மலரில் தோன்றிய பிரம தேவனிடத்தில், சொன்னாள் - முறையிட்டாள்; (எ - று.) "பூமிதேவி மிகுந்த பாரத்தினால் துன்பமுற்று மகாமேருபர்வதத்திலிருக்கின்ற தேவசபையிற் சேர்ந்து பிரமதேவன் முதலான தேவர்கட்கெல்லாம் வந்தனஞ் செய்து, 'ஓ தேவர்களே! முன்பு மகாசமர்த்தரான ஸ்ரீ விஷ்ணுவினாலே சங்கரிக்கப்பட்ட காலநேமி முதலியபல அசுரர்களும் இப்பொழுது பூலோகத்தில் ராஜவம்சங்களிலே பிறந்து இரவும் பகலும் பிரஜைகளைத் துன்பப்படுத்திக் கொண்டு கொடுமைசெய்து திரிகிறார்கள். அவர்களை நான் எண்ணச் சக்தியற்றிருக்கிறேன். பல பராக்கிரமங்க ளுடையவர்களாயும் மிக்க செருக்குடையவர்களாயு மிருக்கிற அசுரேந்திரருடைய திரளான சேனைகள் என்மே லிருப்பதனாலே நான் வெகுவான பாரத்தைச் சுமக்கும் வருத்தமுடையளாய் என்னையுஞ் சுமக்கச்சக்தியற்றவளா யிருக்கின்றேன். இந்தச் சங்கதியை உங்களுக்கு விண்ணப்பஞ் செய்தேன். ஆதலால், நீங்கள் என்மேல் |