அன்புகூர்ந்து நான் மெலிவடைந்து பாதாளஞ் சேராதபடி என்சுமையை இறக்கியருள வேண்டும்' என்று விஜ்ஞாபனம் செய்தாள்" என இச்செய்யுட்கு விவரங்காண்க. தேவசபையிலே பூமிதேவி பொதுவாக எல்லாத் தேவர்களையும் நோக்கிக் கூறியிருக்கவும், தலைமை பற்றி "மலர்முனி தனக்குச் சொன்னாள்" என்று இந் நூலாசிரியர் கூறினார்; ஆயினும், எல்லாத் தேவர்களையும் நோக்கிப் பூமிதேவி கூறினாளென்பதே இவ்வாசிரியர் கருத்தென்பது, "நான்முகன்றானு மேனை நாகரு நாகர் கோனும்" என வரும் அடுத்த கவியினால் விளங்கும். அசுரர்களில் இன்னார் இன்ன அரசராகப் பிறந்தனரென்ற விவரம், வியாஸபாரதத்தில் அம்சாவதரணபர்வத்திற் பரக்கக் கூறப்பட்டிருக்கின்றது. திருமாலின் நாபீ கமலத்தில் தோன்றித் தனது நான்கு முகங்களினாலும் நான்கு வேதங்களையும் எப்பொழுதும் பாராயணஞ் செய்து கொண்டிருப்பவனாதலால், பிரமதேவனை 'வேதமலர் முனி' என்றார். தாநவர், மாநவர் - (முறையே காசியபமுனிவரது மனைவியராகிய) தநு, மநு என்பவர்களது சந்ததியார் எனப் பொருள்படும் வடமொழித் தந்திதாந்தநாமம். அவராகம் - ஆசையின்மையென்று பொருள். நவராகம் என்று எடுத்து, புதுமையான செந்நிறத்தையுடைய வென்று உரைத்து, மலர்க்கு அடைமொழியாக்கினுமாம். பொறை - பொறுக்கப்படுவது; சுமை; ஐ - செயப்படுபொருள் விகுதி. (357) | 205. | நான்முகன் றானு மேனைநாகரு நாகர் கோனும் பான்முகந் தெறியும் வேலைப்பாம்பணைப் பள்ளி கொள்ளுந் தேன்முகங் களிக்கும் பச்சைச்செவ்விவண் டுளப மாலை மான்முகங் கண்டு கூற வந்தவாமாலுங் கேட்டான். |
(இ -ள்.) நான்முகன் தானும் - நான்கு முகங்களை யுடையவனான பிரமதேவனும், நாகர்கோனும் - தேவேந்திரனும், ஏனை நாகரும்- மற்றைத் தேவர்களும்,-பால் முகந்து எறியும் வேலை பாம்பு அணை பள்ளி கொள்ளும் - (அலைகள்) பாலையெடுத்து எரிகின்ற பாற்படலில் ஆதிசேஷ சயனத்திலே சயனித்து யோகநித்திரை செய்கிறவனும், தேன் முகம் களிக்கும் பச்சை செவ்வி வள் துளபம் மாலை - வண்டுகள் (தேனுண்டு) வாயினால் மகிழ்ந்து ரீங்காரஞ் செய்வதற்கு இடமான பசுநிறமுள்ள அழகிய சிறந்த துளசிமாலையை யணிந்தவனுமான, மால் - திருமாலை, முகம் கண்டு - தங்களுடைய எதிரிலே தரிசிக்கப்பெற்று, வந்த ஆ(று) - தாங்கள் வந்த வரலாற்றை, கூற-எடுத்துச் சொல்ல, மாலும் - அத்திருமாலும், கேட்டான்-; (எ - று.) அப்போது சதுர்முகன் தேவர்களை நோக்கி, 'ஓ தேவர்களே! பூமிதேவி சொன்னதெல்லாம் சத்தியந்தான், வாருங்கள்; திருப்பாற்கடற் கரைக்குப் போவோம்: அங்கே போய் ஸ்ரீய:பதிக்குத் தண்டன் சமர்ப்பித்து இவையெல்லாம் விண்ணப்பஞ் செய்வோம், |