அப்படி நாம் செய்தால் ஸர்வ ஸ்வரூபியான அவ்வெம்பெருமான் பூமியின் நிமித்தம் அவதாரஞ்செய்து தருமத்தை நிலைநாட்டியருளுவன்' என்று இப்படிச்சொல்லி, அத் தேவர்களையுங் கூட்டிக்கொண்டு திருப்பாற்கடலுக்குச் சென்று யோகநிஷ்டையிலுள்ள மனசோடு ஸ்ரீ கருடதுவசனைத் தோத்திரஞ் செய்ய, ஸ்ரீய:பதி, பிரமன் செய்த ஸ்தோத்திரத்தைத் திருவுள்ளம்பற்றி உகப்போடு விசுவரூபங்காட்டி 'ஓ நான்முகனே! நீ தேவர்களோடுகூட என்னிடத்தில் எதைப் பெறக் கருதிவந்தனையோ, அதைச் சொல்லக்கடவாய்; அது கையிற் கிடைத்ததாகவே நினை' என்று அருளிச் செய்ய, பிரமதேவன் அப்போது மீண்டுந் துதித்துப் பூமிதேவியின் குறையை எடுத்துக் கூறினார் என இச்செய்யுட்கு விவரங் காண்க. துளபம் - துளஸீ என்ற வடசொல்லின் சிதைவு. (358) | 206. | மின்னிடை விளங்கு மேகமேனியா னவனி மானை, நின்னிடைவந்து தோன்று நிருபரா னவரை யெல்லாம், முன்னிடை கடையொன்றின்றி முற்றும்வெம்முரண்கொள்காலன், தன்னிடை விடுது மென்றுசாற்றியே தளர்வு தீர்த்தான், |
(இ-ள்.) மின் இடை விளங்கும் மேகம் மேனியான்-மின்னல் தன்னிடத்தே விளங்கப்பெற்ற காளமேகம்போன்ற திருமேனியையுடையவனான அத்திருமால்,- அவனிமானை - பூமிதேவியை நோக்கி,-'நின்னிடை வந்து தோன்றும் நிருபரானவரை எல்லாம்-உன்னிடத்து வந்து பிறந்துள்ள (துஷ்ட) அரசர்களையெல்லாம், முன் இடை கடை ஒன்று இன்றி-முதல் இடை கடை என்ற மூன்று தலைமுறையினும் ஒன்றுமில்லாமலே, முற்றும் - முழுவதும் [எல்லாரையும் ஸமூலமாக], வெம் முரண் கொள் காலன் தன்னிடை விடுதும்- கொடிய மாறுபாடு கொண்ட யமனிடத்தில் அனுப்பி விடுவோம் [சங்கரிப்போம்]:' என்று சாற்றி-என்று சொல்லித் தேற்றி, தளர்வு தீர்த்தான்- (அப்பூமிதேவியின்) வருத்தத்தைப் போக்கினான்; (எ - று.) பிரமதேவன் விண்ணப்பித்ததனாற் பூமிதேவியின் குறையையறிந்த திருமால் தானே பூமியில் வசுதேவனது மனைவியாகிய தேவகியின் கருப்பத்தில் தோன்றித் துஷ்டநிக்கிரகஞ் செய்து பாரத்தைப் போக்குவதாக வாக்களித்து அப்பூமிதேவியின் குறையைப் போக்கின னென்றவாறு; ஸ்ரீ மகாலக்ஷ்மியை மார்பிற் கொண்ட கருநிறமுள்ள திருமாலுக்கு, மின்னலைத் தன்னிடத்தே கொண்ட காளமேகம் உவமை. இனி, மின் - மின்னல்போன்ற பேரொளியையுடைய பீதாம்பரம், இடை விளங்கும் - (தனது) இடையிலே விளங்கப்பெற்ற, மேகமேனியான் எனக் கூறுவர் ஒரு சாரார். மின்னிடை என்பதை உவமைத்தொகைப் புறத்துப்பிறந்த அன்மொழித் தொகை யெனக்கொண்டு, மின்னல்போன்ற இடையையுடையவளான திருமகள் (மார்பிலே) விளங்கப்பெற்ற மேகமேனியனான திருமால் எனினுமாம். அவநி - வடசொல்: (அரசர்களாற்) பாதுகாத்தற்கு உரியது உன உறுப்புப்பொருள் காண்க. மருண்ட பார்வையில், மான் மகளிர்க்கு உவமை கூறப் |