| யணியாகக் கூட்டங்கொண்டு, ஓடி பொருது இறப்பதற்கே - விரைந்து போர்செய்து மடிவதற்காகவே, புரிகின்றீர்-முயல்கின்றவர்களே யாவீர்கள்; (எ -று.) நீங்கள் இருதிறத்தாரும் ஒற்றுமைப்பட்டு வாழாமல் மனம் வேறுபட்டுப் பகைமைகொள்வது, உங்களுடைய கேட்டோடு நில்லாமல் உங்களுக்கு நண்பர்களாயுதவுகின்ற உலகத்தரசர் பலருடைய கேட்டிற்கும் காரணமாம்; இவ்வாறு சற்றும் ஆராய்ச்சியில்லாமற் செய்வது சிறிதுந்தகுதியன்று என்று கருத்து. யானை தன் தலைமீது மண்ணைப் போகட்டுக்கொள்வது போலத் தாமே தங்களுடைய கேட்டிற்கு முயலுதலால், 'சற்றும்புரிவிலீர்' என விளித்தான்; இனி, முன்னிலைப்பன்மையெதிர்மறை முற்றெச்சமாக்கொண்டு, சிறிதும் அன்பற்றவர்களாய் எனினுமாம். மனத்திர் - முன்னிலைப் பன்மைக் குறிப்புவினையாலணையும்பெயர். குழூஉ - இயற்கையளபெடை. (361) 209.-துரியோதனன் விதுரனையெள்ளித் திரௌபதியைக் கொணரப் பிராதிகாமிக்குக் கட்டளையிடுதல். என்றவ னுரைப்பத் தானுமெறிந்துகை நகைகொண் டாடி அன்றிவ னிதயம் வெம்ப வவமதி பலவுங் கூறி நின்றவ னொருவன் றன்னைநீநனி விரைவி னோடிச் சென்றவ ணிருந்த கோலத்தெரிவையைக் கொணர்தியென்றான். |
(இ-ள்.) என்று அவன் உரைப்ப-இவ்வாறு அவ்விதுரன் கூற, தானும்- துரியோதனனும், கையெறிந்து நகை கொண்டாடி-கைகொட்டிப் பரிகசித்துச் சிரித்து, அன்று அவன் இதயம் வெம்ப அவமதி பலவும் கூறி- அப்பொழுது அவ்விதுரனது மனம் கொதிக்கும்படி அவமதிப்பான வார்த்தைகள் பலவற்றையும் எடுத்துச் சொல்லி,-நின்றவன் ஒருவன் தன்னை-அங்கு நின்ற ஒருத்தனை நோக்கி, 'நீ-, நனி விரைவின் ஓடிச்சென்று-மிகவும் விரைந்தோடிப்போய், அவண் இருந்த கோலம் தெரிவையை-அங்கே [காந்தாரியின் வீட்டில்] இருக்கின்ற அழகிய திரௌபதியை, கொணர்தி- கொண்டு வருவாய், 'என்றான்-என்று கட்டளையிட்டான்; 'ஒருவன்' என்றது, தேர்ச்சாரதியாகிய பிராதிகாமியை, விதுரன் வார்த்தைகளை அஸம்பாவிதமான கட்டுக்கதையெனக் கொண்டு துரியோதனன் கை கொட்டிச் சிரித்துப்பரிகசித்தனனென்க. (362) 210.-பிராதிகாமிதிரௌபதியினிடஞ் செல்லாமலே மீண்டுவந்து துரியோதனனிடத்துக் கூறத்தொடங்குதல், பெருந்தகை யேவ லோடும்பிராதிகா மியுமங் கேகி வருந்திய மனத்த னாகி மாசறு மரபின் வல்லி இருந்துழி யெய்து றாம லிடைவழி நின்று மீள விரைந்தன னோடி வந்து வேந்தனுக் கேற்பச் சொன்னான். |
|