பக்கம் எண் :

சூதுபோர்ச் சருக்கம் 342

முறைமை யல்லாமல் (கவர்ந்து கொள்ளுதல் முறையேயன்றி), பின்னை தோற்ற
பொருள் கவர பெறுமோ - (தன்னைத் தோற்றுவிட்ட) பின்பு (பந்தயமாக
வைத்து) இழந்த பொருளைக் கவர்தல் கூடுமோ? நினைக்க பெறாது -
(அப்பொருளைக் கைப்பற்ற வேண்டுமென்று) எண்ணுதலும் தகுதியன்றே!'
என்றாள் - என்று (திரௌபதி) கூறினாள்; (எ - று.)

    தருமபுத்திரன் சூதாடித் தன்னைத்தோற்றபின்பு திரௌபதியைத் தோற்ற
செய்தியை அருகிலிருந்து கண்ட பிராதிகாமி, 'தருமபுத்திரன் தன்னைத் தோற்ற
பிறகு இழந்த திரௌபதியைத் துரியோதனன் கவர்தல் நியாயமன்று' என்று
அறிந்தவனாதலால், 'தருமபுத்திரன் தன்னைத் தோற்பதற்கு முன்னே பந்தயம்
வைத்து இழந்த பொருள்களைத் துரியோதனன் கவர்தல் முறைமையாகுமே
யன்றி, தன்னைத்தோற்ற பிறகு தன்னுரிமையை யிழந்த தருமபுத்திரன்
என்னைத் தோற்றிருந்தால் என்னை வைத்தாடுதற்கே அத்தருமபுத்திரனுக்கு
உரிமையில்லாமையால் அவ்வாறு பந்தயமாக வைத்து ஆடின ஆட்டமே
செல்லாது; அப்பொழுது என்னைத் துரியோதனன் கவர்ந்து செல்லுதற்கும்
நியாயமில்லை: ஆகையால், தருமன் தன்னைத் தோற்று என்னைத்
தோற்றானோ? அன்றி, என்னைத் தோற்றுத் தன்னைத்தோற்றானோ? என்ற
விஷயம் முதன்முதல் தெரியவேண்டும்' எனத் திரௌபதி வினாவியதாகக்
கற்பித்துக் கூறின னென்க.  இவ்வாறு தான் கூறினால், துரியோதனன் தான்
செய்வது முறைமையன்றென்று உணர்ந்து பின்வாங்கித் திரௌபதியை
ராஜசபையில் அழைத்து மானபங்கஞ் செய்யாது விட்டிடக்கூடுமென்பது,
பிராதிகாமியின் உட்கோள்.

     இதுமுதல் முப்பது கவிகள் - மூன்றாஞ்சீரும் ஆறாஞ்சீரும்
காய்ச்சீர்களும், மற்றைநான்கும் மாச்சீர்களுமாகி வந்த கழிநடிலடி
நான்குகொண்ட அறுசீராசிரியவிருத்தங்கள்.                 (364)

212.-அதுகேட்ட துரியோதனன்திரௌபதியைக்
கொணரும்படி துச்சாதனனுக்குக் கட்டளையிடுதல்
.

செல்வப் பாவை திருவுள்ளமிதுவென் றந்தத் தேர்ப்பாகன்
சொல்லப் பாவி தரியாமற் றுச்சா தனனை  முகநோக்கி
அல்லற் பான்மை பெற்றழிந்த வைவர்க் கொருத்தி யாகியவம்
மல்லற் பானல் விழியாளை மன்பே ரவையி னழையென்றான்
.

     (இ-ள்.) செல்வம் பாவை திருவுள்ளம் இது என்று-'சிறப்புப் பொருந்திய
சித்திரப்பாவைபோலழகிய திரௌபதியின் மனக்கருத்து இதுவாகும்' என்று
அந்த தேர்ப்பாகன் சொல்ல-(பிராதிகாமியென்னும்) தேர்ப்பாகன் (தன்
கற்பனையைத் திரௌபதியின் வார்த்தையாகக்) கூற,-(அதுகேட்டு), பாவி -
கொடும்பாதகனான துரியோதனன், தரியாமல்-மனம் பொறாமல், துச்சாதனனை
முகம் நோக்கி - துச்சாதனனது முகத்தைப் பார்த்து, 'அல்லல்பான்மை பெற்று
- துன்பப்படும் விதியை யடைந்து, அழிந்த-அழிவடைந்த,