பக்கம் எண் :

சூதுபோர்ச் சருக்கம் 345

விட்டான்; வழக்கால் வென்றோம் - முறைமையாகவே (நாங்கள் சூதாட்டத்திற்)
சயித்துவிட்டோம்; (ஆதலால்), வருவாய் - (எங்கட்கு அடிமைப்பட்ட நீ எம்
விருப்பின்படி இராசசபைக்கு) வரக்கடவாய்; (எ - று.)

    'தானாகவே சூதாடி எல்லாப் பொருள்களையும் இழந்து பின்னர்த்
தருமபுத்திரன் பிராயத்தில் மூத்தவனான தன்னை முதலிலும், பிறகு வயசின்
கிரமப்படியே வீமன் முதலிய தம்பிமாரையும், அதன் பின்பு யாவரினும்
இளையவளான உன்னையும் பந்தயமாக வைத்து முறைப்படியாகவே
தோற்றனனாதலால், உன் பர்த்தாக்களான பாண்டவர்கள் போலவே நீயும்
எங்கட்கு அடிமையாகியே விட்டாய்; ஆதலால், எங்களுடைய கட்டளைக்குக்
கீழ்ப்படிந்து வர வேண்டியதே' எனத் துச்சாதனன், திரௌபதி கூறியதாகப்
பிராதிகாமி கூறிய ஆட்சேபத்திற்குப் போலிச் சமாதானங் கூறித்
திரௌபதியைத் தன்னுடன் ராஜசபைக்கு வருமாறு அழைத்தனனென்க.
தம்பிமாரை முதலில் வைத்திழந்த பின்பே தருமன் தன்னையும்,
திரௌபதியையும் பந்தயம் வைத்திழந்ததாக முதனூலாகிய வியாசபாரதத்திற்
கூறியிருக்கவும் இவ்வாசிரியர் இவ்வாறு கூறியது, 'பின்னோன் வேண்டும்
விகற்பங்கூறி' என்ற வழி நூலிலக்கணம் பற்றி என்க.

     தானே, ஏகாரம் - பிரிநிலை: பிறர் தூண்டுதலில்லாமலென்றபடி, மற்றை
ஏகாரங்கட்கும் ஏற்றபெற்றி கண்டுகொள்க.  வென்றோம் - உளப்பாட்டுத்
தன்மைப்பன்மை.                                          (367)

215.
 

பொன்னைச்சிரிக்கும் பூங்கோயில் புனல்வா வியிலென்
                                    றெங்கள்குல,
மன்னைச் சிரித்த செங்கனிவாய் மாறா திரங்கியமுதரற்ற
மின்னைச் சிரிக்கு நுண்ணிடையாய் வேந்தர்க் கெதிருன்
                                 மெய்க்கணவன்,
றன்னைச் சிரிக்க விருக்கின்ற சலநீ காணிற்றரியாயே.

     (இ -ள்.) மின்னைச் சிரிக்கும் நுண் இடையாய் - மின்னலைப்
பரிகசிக்கின்ற நுண்ணிய இடையையுடையவளே! பொன்னை சிரிக்கும் பூ
கோயில் - பொன்னின் நிறத்தைச் சிரிக்கின்ற [பொன்னைக் காட்டிலும் மிக்க
பேரொளியைக் கொண்ட] அழகிய (இந்திரப் பிரத்தத்துச்) சபாமண்டபத்தில்,
(பளிங்கினால் தொழில் செய்யப்பட்ட ஓரிடத்தைத் தடாகமெனப் பிரமித்துத்
துரியோதனன் தனது துகிலைத் தூக்கிக் கொண்டு சென்றபோது), புனல்வாவி
இல் என்று-'நீரையுடைய வாவியானது (இங்கு) இல்லையே!' என்று சொல்லி,
எங்கள் குலம் மன்னை சிரித்த-எங்கள் குலத்திற் பிறந்த அரசனான
துரியோதனனைச் சிரித்து இகழ்ந்த, செம் கனிவாய் - கோவைப்பழம் போலச்
சிவந்த உனது வாயே, மாறாது இரங்கி அழுது அரற்ற - (இப்பொழுது) ஓயாமல்
வருந்திக் கதறியழும்படி, வேந்தர்க்கு எதிர் - பல அரசர்கள் முன்னிலையில்,
உன்மெய் கணவன் தன்னை சிரிக்க இருக்கின்ற - உனக்கு உரிய கணவனாகிய
தருமபுத்திரனை (நாங்கள்) சிரித்து இகழும்படியிருக்கின்ற,