சலம் - (அவனது) இழிந்த நிலைமையை, நீ காணில் - நீ பார்த்தால், தரியாயே - பொறுக்கமாட்டாயே! (எ - று.) இந்திரப்பிரத்தத்தில் எங்கள் தலைவனான துரியோதனனைச் சிரித்த உன்னுடைய வாயானது இப்போது உனது தலைவனைக் கண்டு அழுது அரற்றுமாறு நாங்கள் அவனைப்பரிகசித்துச் சிரித்தால் நீ மனம் பொறுக்கமாட்டாயே? அப்பொழுது செய்த வினையின் விளைவை இப்பொழுது நீ அனுபவித்தே தீரவேண்டும் என்பது கருத்து. திரௌபதியின் வாயில் முதலிற் சிரிப்பும் பின்பு அழுகையுங் கூறியிருப்பது, ஒன்றிற் பல நிகழ்வனவாகக் கூறும் முறையிற்படர்ச்சியணியாம்;முதலடியிலும் மூன்றாமடியிலும் 'சிரிக்கும்' என்பது - உவமவாசகமாய் நின்றது. திரௌபதி துரியோதனனைச் சிரித்த வரலாறு, கீழ் 13 - ஆங் கவியின் உரையில் விரித்துக் கூறப்பட்டது. இல் - இல்லை என்ற எதிர்மறைக் குறிப்பு வினைமுற்றின் விகாரம். சலம்-வஞ்சனை; இங்கு, வஞ்சனையால் நேர்ந்த இழிந்த நிலைமைக்கு இலக்கணை. தரியாயே-'தரியாய்' என்ற உதிர்மறை முற்றோடு எதிர்மறைப் பொருளதான ஏகாரஞ் சேர்ந்து தரித்தே தீரவேண்டு மென்ற ஓருடன்பாட்டுப்பொருளை வற்புறுத்திற்று. (368) | 216. | தலத்துக் கியையா தைவரையுந்தழுவித் தழுவித் தனித்தனியே, நலத்துப் பொய்யே மெய்போல நடிக்குஞ் செவ்வி நலனுடையாய், குலத்துப் பிறந்தா யாமாகிற் கூசா தென்பின் போதுகெனப், பெலத்திற் செங்கை மலர்தீண்டிப் பிடித்தான் சூழ்ச்சி முடித்தானே. |
(இ -ள்.) தலத்துக்கு இயையாது-உலகவழக்கத்திற்கு மாறாக, ஐவரையும் தனி தனியே தழுவி தழுவி-பாண்டவரைவரையும் ஒவ்வொருவராக ஆலிங்கனஞ் செய்துகொண்டு, பொய் நலத்து மெய்போல நடிக்கும்- பொய்ம்மையாகிய அன்பை மெய்யன்புபோலக் காட்டுகிற, செவ்வி நலன் உடையாய்-மிக்க அழகையுடையவளே! (இவ்வாறு நடிப்பதனால், நீ), குலம் துப்பு இறந்தாய் ஆம் - நல்ல குலத்திற்கு உரிய ஒழுக்கம் தவறினவளாயினாய்; ஆகில்-ஆகவே, கூசாது-பின்வாங்காமல், என்பின் போதுக-என்பின்னே வரக்கடவாய், என-என்று சொல்லி, (துச்சாதனன்), பெலத்தின்-பலாத்காரமாக, செம் கை மலர் தீண்டி பிடித்தான்-(திரௌபதியினது) செந்தாமரை மலர்போன்ற கையைத் தொட்டுப் பிடித்திழுக்கலாயினான்; (அதனால்), சூழ்ச்சி முடித்தானே- (தாங்கள்) எண்ணிய ஆலோசனையை முடித்தவனாயினான்;(எ - று.) ஒருத்தியே ஐவரை ஒருசேர மணம்புணர்தல் உலகவழக்கத்திற்கு மாறான தென்பான் 'தலத்துக்கு இயையாது' என்றும், 'எனக்கு உன்னிடத்தில் தான் மிக்க அன்பு' 'எனக்கு உன்னிடத்தில்தான் மிக்க அன்பு' என்று ஒவ்வொருவரிடத்தும் இரகசியத்திற் கூறி மயக்கும் இயல்புடைய பொதுமகளென்பான் 'ஐவரையும் தழுவித்தழுவித் தனித்தனியே நலத்துப் பொய்யே மெய்போல நடிக்கும்' என்றும், அதற்கேற்ப அழகுடையாளென்பான் |