| 'செவ்வி நலனுடையாய்' என்றும் கூறினான். செவ்வி நலன்- ஒருபொருட்பன்மொழி. ஒருத்தியே ஐவரையும் மணம்புணர்ந்து பதிவிரதா தருமங் குலைந்து நாணமற்றிருக்கிற நீ என்பின்னே வருதற்குப் பின்வாங்கக் காரணமில்லையே யென்பது, 'குலத்துப்பு இறந்தாய் ஆம், ஆகிற் கூசாது என்பின்போதுக' என்பதன் கருத்து; இனி 'குலத்துப் பிறந்தாயாம் ஆகில்' என்று பிரித்து-நல்ல குலத்திற் பிறந்தவளா யிருந்தால் என்று கூறுவது, 'என் பின் போதுக' என்பதனோடுமுரணுமாறு அறிக. இகழ்ச்சிக்குறிப்பாய் அங்ஙனங் கூறினனென்றலுமொன்று. 'சூழ்ச்சி' என்றது, முதலில் துஷ்டசதுட்டர்கள் ஒருங்கேகூடிச்செய்த சதியாலோசனையை. பாண்டவர்கட்குப் பேரவமானஞ்செய்தலே துரியோதனாதியரது சூழ்ச்சியின் முடிவாதலின், அதற்குக் கடையெல்லையாக அவர்கள் மனைவியைச் சபையிலிழுத்துக் கொண்டு வரவே சூழ்ச்சி முடிந்ததாமென்ப. பிடித்தான் சூழ்ச்சி முடித்தான்-ப்ராசம். பெலம் = பலம்: வடசொல். 'குலத்துப்பிறந்தாயாம்' என்ற விடத்தில், 'ஆம்' என்பது-தேற்ற முணர்த்தும்; அன்றி, செய்யுமென்முற்று முன்னிலைக்குச் செல்லாமையுணர்க. (369) 217.-துச்சாதனனாற் கைபிடித்துஇழுக்கப்பட்ட திரௌபதி காந்தாரியினருகிற்சார்தல். சிலைவா யங்கை யவன் றீண்டச்செல்லா ளாகி யல்லலுழந்து, உலைவா யழல்போ னெடுதுயிரா வுள்ளந் தளரா வுடனடுங்காக், கொலைவா யெயினர் கொல்லுநிலங் குறித்துச் செறுத்த கொடியநெடு, வலைவா யொருதா னகப்பட்ட மான்போன் மாமி மருங்குற்றாள். |
(இ -ள்.) சிலை வாய் அம் கை அவன்தீண்ட-வில் பொருந்திய அழகிய கையையுடையவனான அத்துச்சாதனன் இழுக்கவும்,-(திரௌபதியானவள்),- செல்லாள் ஆகி-(அவன் பின்னே) போகாதவளாய், அல்லல் உழந்து- துன்பத்தால் வருந்தி, உலைவாய் அழல் போல் நெடிது உயிரா-(கொல்லனது) உலைக்களத்து நெருப்புப்போல் (உஷ்ணமாகப்) பெருமூச்சுவிட்டு, உள்ளம் தளரா-மனஞ் சோர்ந்து, உடல் நடுங்கா-உடம்பு நடுங்கி,-கொலைவாய் எயினர்- கொல்லுதலைத் தமது சாதித் தொழிலாகக் கொண்ட வேடர்கள், கொல்லும் நிலம் குறித்து-(மிருகங்களை அகப்படுத்திக்) கொல்லுதற்கு வாய்ப்பான இடத்தை ஆராய்ந்தறிந்து, செறுத்த-(அங்குக்) கட்டிய, கொடிய நெடு வலையாய்-கொடுமையான நெடிய வலையிலே, ஒருதான் அகப்பட்ட- தன்னந்தனியே அகப்பட்டுக்கொண்ட, மான்போல்-, (துச்சாதனன் கையில் அகப்பட்டவளாய்), மாமிமருங்கு உற்றாள் (தனக்கு) மாமியார் முறைமையான காந்தாரியின் பக்கத்திற் சென்று சேர்ந்தாள்; (எ-று.) வேடருடைய வலையிற் சிக்கிய மான் வெருண்டு தப்பும் வழியின்றிப் பதைபதைப்பதுபோல, துச்சாதனன் கையிற் சிக்கிய |