திரௌபதியும் தப்பியோடும் வகையின்றி மனம்மருகி மிக வருந்தி உழன்று பின்னர்க் காந்தாரியைச் சார்ந்தன ளென்றவாறு. உவமையணி. அங்கை- அகம் கை என்று பிரிந்து, உள்ளங்கை யென்றும் பொருள் படும்; "அகமுனர்ச் செவிகைவரின் இடையன கெடும்" என்பது, நன்னூல். உயிரா, தளரா, நடுங்கா-'செய்யா' என்னும் வாய்பாட்டு உடன்பாட்டு இறந்தகால வினையெச்சங்கள். எயினர்-குறிஞ்சி நிலமாக்கள்; (அந்நிலத்துமகளிர், 'எயிற்றியர்' எனப்படுவர்.) 'சிலைவா யணங்கை' என்ற பாடத்துக்கு, வில்லிலக்கை யெய்ததனால் பாண்டவர் மனைவியாகப் பெற்ற திரௌபதியை யென்பது பொருள். (370) 218.-துச்சாதனன் பின்னேபோமாறு காந்தாரி திரௌபதிக்குக்கூறல். பூவார் குழலி தளர்வொடுதன்புறஞ்சேர் பொழுதுஞ் சிறிதிரங் காள், நீவா வென்றே யருகிருத்தி நெடுங்கண் பொழியு நீர் துடை யாள், மேவா ரல்லர் தமரழைத்தான் மேலுன் கருத்து விளம்பிவரப், பாவா யஞ்சா தேகென்றாள் பலபா தகரைப் பயந்தாளே. |
(இ -ள்.) பூ வார் குழலி - மலர்களையணிந்த நீண்ட கூந்தலையுடைய வளாகிய திரௌபதி, தளர்வொடு - வருத்தத்துடனே, தன் புறம் சேர்பொழுதும் - தன்புறத்தில் வந்து சார்ந்தபொழுதிலும், சிறிது இரங்காள் - சிறிதும் மனமிரங்காதவளாகியும், நீ வா என்றே அருகு இருத்தி நெடும் கண் பொழியும் நீர் துடையாள் - 'நீ (இங்கே) வருவாயாக' என்று (அன்புகொண்டழைத்துத் திரௌபதியைத்) தன்னருகிலிருக்கச்செய்து (அவளது) நீண்ட கண்களிலிருந்து சொரிகிற துன்பக் கண்ணீரைத் துடைத்துத்தேற்றாதவளாகியுமிருந்துகொண்டு, 'பாவாய்-திரௌபதியே! மேவார் அல்லர்-(உன்னை அழைப்பவர்) பகைவரல்லர்: தமர் - சுற்றத்தவரேயாவர்; அழைத்தால் - (இவ்வாறு சுற்றத்தவர்) அழைக்கும்போது, மேல் உன்கருத்து விளம்பி வர அஞ்சாது ஏகு - இனிமேல் உனது எண்ணத்தைச் சொல்லி வருமாறு சிறிதும் அச்சங்கொள்ளாது செல்வாயாக', என்றாள்-; (யாவளெனில்),- பல பாதகரை பயந்தாள்-பல(நூறு) பெரும்பாவிகளைப் பெற்றவளாகிய காந்தாரி: (எ - று.) துச்சாதனன் வலியப் பிடித்திழுத்தபோதே அவனைத் தடுத்துத் திரௌபதியைப் பாதுகாத்தற்குஉரிய முறையில் நிற்பவளான காந்தாரி, அப்போது அவ்வாறு செய்யாதிருந்ததுமன்றி, அவள் தன்னிடம் வந்தபிறகும் அன்புகாட்டி அவளைத் தேற்றாமல் விட்டிட்டதோடு, 'அவன் பின்னேபோ' என்றுஞ்சொன்ன கொடுமையை நினைந்து, அக்காந்தாரியை 'பலபாதகரைப் பயந்தாள்' என்றார்; மக்கட்கு ஏற்ற தாய் என்க. பல புதல்வரைப் பெற்றோர்க்கு இரக்கமென்பது இயல்பாயிருக்கவும், நூறு பிள்ளைகளைப் பெற்ற இவட்கு இவ்வாறு கொடுமை யமைந்திருப்பதற்குக் காரணம், நற்புதல்வரைப்பெறாது பல கொடும்பாவிகளைப் பெற்றதேயா மென்றவாறு. இத்தொடர், கருத்துடையடைகொளியணி, காந்தாரி தான் மிக்க |