பதிவிரதையாயிருந்தும் தன் மருமகளாகிய திரௌபதியினிடத்து இரக்கங் கொள்ளாமலும் அவளது கண்ணீரைத் துடையாமலுமிருந்து 'தமரழைத்தால் உன்கருத்தைவிளம்பிவர ஏகு' என்று கூறி அறத்திற்கு மாறாக நடந்தது, அவள் தன் மக்களிடத்துக் கொண்ட மிக்க அன்பினாலென்க. பூ ஆர் குழலி என்று பிரித்து-பூக்களை மிகுதியாக அணிந்துள்ள கூந்தலை யுடையவளென்றும் பொருள் கொள்ளலாம். பொழுதும், உம்மை - இழிவுசிறப்பு. 'சிறிதும்' என்ற இழிவுசிறப்பும்மை, விகாரத்தால் தொக்கது. மேவார் - சேராதவர்: எனவே பகைவராயிற்று; எதிர்மறைப் பலர்பால் வினையாலணையும் பெயர். (371) 219.-துச்சாதனன் திரௌபதியைஇழுத்துக் கொண்டு போதல். தண்டார் விடலை தாயுரைப்பத்தாய்முன் னணுகித் தாமரைக்கைச், செண்டா லவள்பைங் குழற்பற்றித் தீண்டா னாகிச் செல்கின்றான், வண்டார் குழலு முடன்குலைய மானங் குலையமனங்குலையக், கொண்டா ரிருப்ப ரென்றுநெறிக் கொண்டா ளந்தோகொடியாளே. |
(இ -ள்.) தாய் உரைப்ப-தனது தாயாகிய காந்தாரி (அவ்வாறு) சொல்லிவிடவே,-தண் தார் விடலை-குளிர்ந்த மாலையை அணிந்த துச்சாதனன், தாய்-தாவிச்சென்று, முன் அணுகி-(திரௌபதியின்) எதிரில்போய், தாமரை கைசெண்டால் - தாமரை மலர்போன்ற (தனது) கையிற்கொண்ட - செண்டினாலே, அவள் பைங் குழல் பற்றி-அந்தத்திரௌபதியினது கரியகூந்தலைப் பிடித்துக்கொண்டு, தீண்டான் ஆகி செல்கிறான் - (அவளுடம்பைத்) தொடாதவனாகவேபோகின்றவனானான்:(அப்பொழுது), கொடியாள்-பூங்கொடி போன்றவளான திரௌபதி, வண்டு ஆர் குழல் உடன் குலையஉம்-வண்டுகள் மொய்க்கப்பெற்ற தனது கூந்தல் ஒருசேர அவிழ்ந்து புரளவும், மானம் குலைய-(தனது) மானம் அழிந்திடவும், மனம் குலைய- மனமும் நிலைகலங்கவும், கொண்டார் இருப்பர் என்று - '(தன்னை) மணந்துகொண்ட கணவர்கள் (அச்சபையில்) இருப்பார்கள்' என்று எண்ணி, நெறிகொண்டாள்-(அத்துச்சாதனன் செல்கின்ற) வழியே (தானும்) செல்லலானாள்; அந்தோ-ஐயோ! (எ - று.)-'அந்தோ' என்பது, இரக்கக்குறிப்பிடைச்சொல்; கவி இரங்கிக் கூறியது. காந்தாரி தனக்கு அநுகூலமாகச் சொல்லவே, துச்சாதனன் தனது தாயின்புறத்தி லொதுங்கியிருந்த திரௌபதியினருகிற் போய்த் தனது கைகளினால் அவள் கூந்தலைப் பற்றியிழுத்துக் கொண்டு செல்ல, அத்திரௌபதியும், தனது கணவர்கள் அச்சபையிலிருப்பதனால் அவர்கள் தன்னைக் காக்கக்கூடு மென்று ஓரெண்ணங்கொண்டு அத்துச்சாதனனுடன்சென்றனளென்பதாம். விடலை - ஆண்மகன், இளமகன், திண்ணியன்; ஆண்பாற் சிறப்புப் பெயர். 'தாய்' என்ற சொல் இரண்டனுள், பின்னது-இறந்தகால வினையெச்சம். செண்டு - ஒருவகையாயுதம்: மாட்டி யிழுத்தற்கு |