உரிய தென்ப. இனி, பூச்செண்டு என்று கொண்டு துச்சாதனன் தனது கையைப் பூஞ்செண்டினுருவமமையுமாறு குவித்துத் திரௌபதியின்குழலைப் பற்றின னென்பாருமுளர். 'பைங்குழல்பற்றத் தீண்டாளாகிச் செல்கின்றாள்' என்ற பாடம்-'தனது கூந்தலைப் பற்றி யிழுத்துக்கொண்டு செல்ல (த்திரௌபதி தான் தீட்டுடைமையால்) தீண்டக்கூடாதவளாயிருந்தும் [ரஜஸ்வலையாயிருந்தும்] (அத்துச்சாதனனுடன்) செல்பவளாய்' என்று பொருள்படும். 'கொடியாள்' என்பதற்கு-கொடுமைக்கு இலக்கானவளென்றும் பொருள்கொள்ளலாம். 'குழலும்' என்ற உம்மையைப் பிரித்து 'குலைய' என்பதனோடு கூட்டுக. முன் நணுகி என்று பிரித்தும் உரைக்கலாம். (372) 220.-இதுவும் அது. சூழுங் கனல்வா யுருமன்றித் துளிவாய் முகிலுமகிதலத்து, வீழுங் கொல்லோ வுற்பாதம் விரவிற் றென்றே வெரூஉக் கொள்ளத், தாழும் பெரிய கரியகுழ றாரோ டலையத் தழீஇக்கொண்டு, வாழுஞ் சுரும்பு சுழன்றரற்ற மண்மே லிழுத்து வருகின்றான். |
(இ -ள்.) 'சூழும் கனல் வாய் உரும் அன்றி - பரவுந்தன்மையுள்ள நெருப்புப் பொருந்திய இடி வீழ்வதே யல்லாமல், துளிவாய் முகிலும் மகிதலத்து வீழும்கொல்ஓ - மழைத்துளிகள் பொருந்திய மேகமும் பூமியில் விழக் கடவதோ! உற்பாதம் விரவிற்று - துர் நிமித்தம் உண்டாயிற்று: என்று-, வெரூஉக் கொள்ள - (கண்டவர் யாவரும்) அச்சங்கொள்ளும்படி, தாழும் பெரிய கரிய குழல் - நீண்டு தொங்குகின்ற பெரிய கருநிறமுடைய (திரௌபதியின்) கூந்தல், தாரோடு அலைய - மாலையுடனே அவிழ்ந்து கீழ்விழுந்து புரளவும், தழீஇக்கொண்டு வாழும் சுரும்பு சுழன்று அரற்ற - (அக்கூந்தலி லணிந்துள்ள மாலையைச்) சார்ந்து வாழ்கின்ற வண்டுகள் சுழன்று கொண்டு ஒலிக்கவும், மண்மேல் இழுத்து வருகின்றான் - நிலத்திலே (அத்திரௌபதியை) இழுத்துக்கொண்டு வருவானாயினான்; (எ - று.) துச்சாதனன் திரௌபதியை இழுத்துச் சென்றபோது அவள் கூந்தல் கீழ்விழுந்து புரண்ட தன்மை, மேகம் கீழ்விழுந்து புரள்வதாகிய உற்பாதமாகக் கருதுமாறிருந்த தெனக் குறித்தார். வானத்து மேகங்களினின்று நிலத்தில் இடிவீழ்வது, இயற்கையே; மேகம் வீழ்வதோ உற்பாதமாகக் கொள்ளப்படும். உற்பாதமாவன - உலகத்திற்குப் பின்வருந் தீங்கைத் தமது நிகழ்ச்சியால் முன்னமே விளக்குவன: அவை - மேகம் வீழ்தல், தூமகேதுவென்னும் வால்நட்சத்திரம் தோன்றுதல், வானத்தினின்று கொள்ளிக்கட்டை வீழ்தல், இரத்தமழை பொழிதல் போல்வன. பூமாலையுடனே கூடிய கருங்கூந்தல் குலைந்து வீழ்ந்ததை மின்னலோடு கூடிய மேகம் விழுந்ததென மயங்கியதாகக் கூறியது - மயக்கவணியாம். பூமாலைக்கு மின்னலும், கருங்கூந்தலுக்குக் கார் |