பக்கம் எண் :

சூதுபோர்ச் சருக்கம் 351

மேகமும் உவமை.  "தாருங் குழலும் மின்னுடனே தலஞ்சேர் கொண்ட
லெனவீழ" என்பர் மேலும்.

     மகிதலம் - பூமியினது இடம் என உடைமையும் உடையதும் வேறாகாத
ஒற்றுமைக்கிழமைப் பொருள்பட விரியும் ஆறனுருபுத்தொகை.
வீழுங்கொல்லோ, கொல்-அசை; ஓ - இரக்கம்.  வெரூஉக் கொள்ள,
தழீஇக்கொண்டு - வெருவுகொள்ள, தழுவிக்கொண்டு: சொல் விகாரப்பட்டு
அளபெடுத்ததனால், சொல்லிசையளபெடைகள்.                   (373)
 

221.-இதுமுதல்ஐந்து கவிகள் - திரௌபதியின்
நிலையைக்கண்ட அந்நகரத்துச் சனங்கள்
வருந்துதலைக்கூறும்.

தழலோ வென்னுங் கற்புடைய தனிநாயகிதன் றாமநறுங்,
குழலோ வுரகக் கொடிவேந்தன் குலமோ குலைந்த திவணென்பார்,
நிழலோ புவிக்கு நெருப்பன்றோ நெறியொன் றில்லா நீடுபொலங்,
கழலோன் மதிவெண் குடையென்பார் கையாற் கண்ட
                                        கண்புடைப்பார்.

     (இ -ள்.) (சிலர்), 'தழலோ என்னும் கற்பு உடைய - நெருப்புத்தானோ
என்று சொல்லத்தக்க [மிகப் பரிசுத்தமான] பதிவிரதா தருமத்தையுடைய, தனி
நாயகிதன்- (வேறு துணையின்றித்) தனிப்பட்டவளாகிய (பாண்டவர்களின்)
மனைவியான திரௌபதியினது, தாமம் நறுங்குழலோ - மலர்மாலையைச் சூடிய
நறுமணம் வீசுகின்ற கூந்தல்தானோ (குலைந்தது!) உரகம் கொடி வேந்தன்
குலமோ இவண் குலைந்தது - பாம்புக்கொடியையுடையவனாகிய
துரியோதனராசனது வமிசமன்றோ இப்பொழுது குலைந்து விட்டது!', என்பார் -
என்று சொல்லுவார்; (சிலர்), 'நெறி ஒன்று இல்லா நீடுபொலம் கழலோன் -
சிறிதும் நன்னெறியிற் செல்லுதலில்லாத நீண்ட பொன்னாற் செய்த வீரக்கழலை
யணிந்தவனாகிய துரியோதனனது, மதிவெள் குடை - பூர்ண சந்திரன் போன்ற
வெண்கொற்றக் குடையானது, புவிக்கு - பூமியிலுள்ளார்க்கு, நிழலோ -
நிழலைத் தருவதாகுமோ? நெருப்பு அன்றோ - நெருப்பாய்
வாட்டுகின்றதன்றோ?' என்பார்-; (சிலர்), கண்ட கண் கையால் புடைப்பார் -
(திரௌபதிக்கு நேர்ந்த அந்தக் கொடுமையைக்) கண்ட (தங்கள்) கண்களைக்
கைகளினால் மோதிக்கொள்வார்கள்;

    திரௌபதி இப்பொழுது கூந்தலை விரித்தது, துரியோதனாதியர்கள்
விரைவில் வேரோடழிதற்குக் காரணமா மென்பது முதலிரண்டடிகளின் கருத்து.
உலகுக்கு இனிய நிழலைத்தந்து தாபத்தைத் தணிக்கவேண்டிய துரியோதனனது
வெண்கொற்றக்குடை அவ்வாறின்றி அதற்குமாறாகக் கொடுமையை விளைத்துத்
தபிப்பதனால், 'நிழலோ புவிக்கு நெருப்பன்றோ. . . . . . . கழலோன்
மதிவெண்குடை' என்றார்.  இப்படிப்பட்ட மகாசோகத்துக்குக் காரணமான
செயலைத் தங்கள் கண்களாற் பார்க்க நேர்ந்த கொடுமைபற்றி,