இவ்வருத்தத்தை ஏன் கண்டீர்கள்?' என்று தண்டித்தல்போல, அக்கண்களைத் தமது கைகளால் மோதுவாராயின ரென்க. கூந்தலின் குலைவை மறுத்து வேந்தன்குலம் குலைந்ததாகக் கூறியது, அபநுதியலங்காரம். நீதிநெறி தவறாத அரசாட்சியைக் குடையென்றல் மரபு. குடைக்குச் சந்திரனுவமை, வட்டவடிவத்தோடு வெண்ணிறமாய் விளங்குதற்கு. குடை - அதுபோலத் தாபந் தணிக்கிற அதிகாரத்திற்கு உவமையாகுபெயர். மிக்க தூய்மையினாலும், நினைத்த மாத்திரத்தில் எரித்தழிக்குந் திறத்தினாலும், மாதர்களின் கற்பிற்கு அக்கினியை உவமை கூறுதல் மரபு. தனி நாயகி என்பது - ஒப்பற்ற தலைவியென்றும் பொருள்படும். 'புவிக்கு' என்பது முன்னுள்ள 'நிழலோ' என்றதனோடும், பின்னுள்ள 'நெருப்பன்றோ' என்பதனோடும் சென்றியைவது - இடை நிலைத் தீவகம். தழலோ, ஓகாரம் - சிறப்பு. குழலோ, நிழலோ - ஓகாரங்கள் - எதிர்மறைப்பொருளன. குலமோ, ஓகாரம் - தெரிநிலை. நெருப்பன்றோ - இதில் அன்று ஓ என்ற இரண்டு எதிர்மறைகள் ஒருங்குசேர்ந்து ஓர் உடன்பாட்டுப் பொருளை வற்புறுத்தித் தேற்றக்கருத்தை விளக்கும். குலம் குலைந்தது - தெளிவினால் எதிர்காலம் இறந்தகாலமாகச் சொல்லப்பட்ட காலவழுவமைதி. (374) | 222. | காட்டுந் திறல்வெஞ்சிலைவிசயன் கையால் வகிர்ந்து கடிகொண்மலர், சூட்டும் பனிச்சை யிவண்புழுதித் துகளே றியதென்றழுதுநைவார், மீட்டுந் தடாம லேகென்று விட்டான் மைந்தரிட்ட வினை, கேட்டுங் கொடியள் காந்தாரி கிளையோ டின்றே கெடுமென்பார். |
(இ - ள்.) (சிலர்), 'திறல் காட்டும் வெம் சிலை விசயன்-(தனது) பராக்கிரமத்தை(ப் பலசமயங்களிற்) காட்டியுள்ள கொடிய வில்லையேந்தியவனான அருச்சுனன்,கையால் வகிர்ந்து கடிகொள்மலர் சூட்டும் - (தனது) கையினாற்கோதிநறுமணமுள்ள மலர் மாலையைச் சூட்டப் பெற்ற, பனிச்சை - (திரௌபதியினது)கூந்தல், இவண் புழுதி துகள் ஏறியது - இப்பொழுது மண்புழுதி படியப்பெற்றதே!' என்று அழுது நைவார் - என்று சொல்லிப் புலம்பிவருந்துவார்கள்; (சிலர்), 'காந்தாரி-, மைந்தர் இட்ட வினை கேட்டும் - (தனது)புதல்வர் செய்த தீச்செய்கையைக் கேட்டறிந்தும், மீட்டும் - பின்பும், தடாமல் -(துச்சாதனன் கொடுமையைத்) தடுக்காமல், ஏகு என்று விட்டாள் - (திரௌபதியை நோக்கி) 'நீ போ' என்று சொல்லி அனுப்பிவிட்டாள்; கொடியள்- (ஆதலாற்) கொடியவள்; கிளையோடு இன்றே கெடும் - (இவ்வாறுபெருந்தீங்கைச் செய்ததனால் இவள்) சுற்றத்தாரோடும் இப்பொழுதேஅழிந்துவிடுவாள்', என்பார்-; (எ - று.) துரோணாசாரியர்க்குக் குருதட்சிணை செலுத்துதற்பொருட்டுத் துருபதன் விஷயத்திலும், சித்திரரதனென்ற வித்தியாதரவேந்தன் திறத்திலும், திரௌபதியின் சுயம்வர காலத்திலும், காண்டவமென்னும் வனத்தை எரிக்குமாறு அக்கினிதேவனுக்கு |