பக்கம் எண் :

சூதுபோர்ச் சருக்கம் 353

அளிக்கையில் வந்தெதிர்ந்த தேவர் திறத்திலும், தருமபுத்திரன் இராசசூயயாகஞ்
செய்தற்பொருட்டுத் திறைப்பொருள் கொணருமாறு திசைகளை வென்ற
போதும், மற்றும் பலவேளைகளிலும் அருச்சுனன் வில் திறமையைக் காட்டியது
காண்க.  இவ்வாறு மகா வீரனான அர்ச்சுனன் கோதி முடித்த கூந்தற்கும்
புழுதிபடியுமாறு நேர்ந்த விபரீதத்தை நினைந்து அழுது நைவாராயினர்.
இங்ஙனம் திரௌபதியின் துன்பத்திற்குக் காரணமாயிருந்த துரியோதனாதியர்கள்
அருச்சுனனது வில்வீரத்தினால் விரைவிலழிவுறுவ ரென்பது, 'காட்டுந்திறல்
வெஞ்சிலை' என்ற அடைமொழியினாற் குறிப்பிக்கப்பட்டவாறு.  'அருச்சுனனாற்
கோதி முடிக்கப்பட்ட திரௌபதியின் கூந்தலில் இப்பொழுது
புழுதிபடிந்துள்ளது' என ஒரு பொருளிற் பல தன்மை நிகழ்ந்தனவாகக்
கூறியது, முறையிற்படர்ச்சியணியின் பாற்படும்.  தன் மைந்தர் செய்த
கொடுமையை அறிந்திருந்தும் திரௌபதியைச் சபைக்குப் போகுமாறு கூறிய
காந்தாரி அக்கொடுமைக்கு உடன்பட்டவளேயாவளாதலால் 'கொடியள்'
என்றும், 'அளவு கடந்து செய்த புண்ணிய பாவங்கள் மறுபிறப்பிலன்றி
இப்பிறப்பிலேயே பயனை விளைக்கும்' என்பது நூல் துணிபாதலால், அளவு
கடந்து செய்த பொல்லாங்குடைமைபற்றி, அதன் பயனாக 'காந்தாரி
கிளையோடு இன்றே கெடும்' என்றும் கூறினார்.  'வீறார் கற்பின்
மின்னனையாளை விறன்மைந்தர், ஏறாமன்றிலேற்றவு மாமன் றென்னாதாள்,
ஊறாவன்பிற் கண்ணறை மன்னனொருதேவி, யாறாவெள்ளத்துன்புற வன்றே
வடியிட்டாள்' என மேல் நான்காம்போர்ச் சருக்கத்தில் (செ:41) வருவது, இங்கு
நோக்கத்தக்கது.

     கடி - உரிச்சொல்.  பனிச்சை - மகளிர் கூந்தலின் வகை ஐந்திலொன்று;
கூந்தலின் வகை ஐந்தாவன - மயிரை உச்சியில் முடித்தலாகிய முடியும்,
சுருட்டி முடித்தலாகிய குழலும், மயிரை முடிந்து விடுதலாகிய தொங்கலும்,
பின்னி விடுதலாகிய பனிச்சையும், பின்னே செருகுதலாகிய சுருளுமாம்.
பனிச்சை - இங்குச் சிறப்புப்பொருளைத் தராமல், பொதுவாகக் கூந்தலென்ற
மாத்திரமாய் நின்றது.  புழுதித்துகள் - ஒருபொருட்பன்மொழி.  இன்றே,
ஏகாரம் - தேற்றத் தோடு விரைவு.  கெடும் - செய்யுமென்முற்று,
பெண்பாலுக்கு வந்தது.                                    (375)

223.இரும்போ நெஞ்சிம் மாமனிதற்கிசைந்தா னொக்க
                                 விருந்தென்பார்,
பெரும்போ ரரசர் பெண்ணுடனே பிறந்துஞ்சீறப்
                                 பெறாரென்பார்,
பொரும்போர் வீமன் பொறுத்தாலும் பொற்றேர்
                        விசயன் பொறா னென்பார்,
அரும்போ ரரசர் தகாதென்றால் வருமோவிந்த
                                   வழிவென்பார்.

     (இ -ள்.) (சிலர்), 'இ மாமன் - (திரௌபதியினது) மாமனாராகிய இந்தத்
திருதராஷ்டிரன், ஒக்க இருந்து - உடனிருந்து, இதற்கு - (துரியோதனாதியர்
செய்த) இந்தத்துராலோசனைக் கெல்லாம், இசைந்தான் - உடன்பட்டான்:
(ஆதலால்), நெஞ்சு இரும்போ -