களாயிருந்தும் ஒரு பெண்ணை [திரௌபதியை] இவ்வாறு சினந்து வருத்துதற்குத் தகாதவராவரென்பார் என்று பொருள் கூறுதலும் ஒன்று; துரியோதனாதியர் நூற்றுவரோடு துச்சளையென்ற ஒருத்தி பிறந்தன ளாதலால், அவர்கள் பெண்ணுடனே பிறந்தவராவர். இப்பொருளில் துரியோதனாதியரை 'பெரும்போரரசர்' என்றது, தமக்குச் சரியான ஆடவரிடத்தில் வீரங்காட்டிப் போர் செய்யாமல் அபலையான ஒரு பெண்திறத்திற் பகைமை பாராட்டிக் கொடுமை செய்கின்றார்களே! இவர்களது வீரம் எற்றுக்கு? என்ற பழிப்பை விளக்கும். பிறந்தும், உம்மை - சிறப்பு. பாண்டவரைவருள் உடல்வலிமையில் வீமசேனனும் விற்போர்த்திறத்தில் அருச்சுனனும் சிறந்தவர்க ளாதலால், இவ்விருவருள் ஒருத்தராவது மனம் பொறாது புழுங்கிச்சீறி உக்கிரங்கொண்டு பகையழிக்கக்கூடு மென்று, சிலர் தமது மனத்திற்சிறிது தேறியவாறு. 'வீமன் பொறுத்தாலும்' என்ற விடத்து, உம்மை-அவன் சிறிதும் பொறுக்க மாட்டானென்பதை விளக்கும். காண்டவ தகனகாலத்தில் அக்கினிதேவன் கொடுத்த வாநரத்துவசமமைந்து வெண்குதிரைகள் பூட்டியதேரையுடையவ னாதலால், அருச்சுனனை 'பொற்றேர்விசயன்' என்றான்; இத்தொடரில், காண்டவவனத்தை இனிதாகப் புசிக்குமாறு அக்கினிதேவனுக்கு அளித்தபோது தேவர்களையெல்லாம் புறங்கண்டு ஓடச்செய்த அருச்சுனனுக்கு நராதமரான துரியோதனாதியரை யழித்தல் ஒரு பெரிதன்று என்ற கருத்துந் தொனிக்கும். சபையிலுள்ள அரசர்களெல்லாரும் துரியோதனனுக்கு உடந்தையாயிராமல் ஒன்று சேர்ந்து ஆதியிலேயே 'இவ்வாறு அக்கிரமச் செயலைச் செய்தல் தகாது' என்று ஒரே குரலாகச் சூதாடுதலையே தடுத்திருந்தால், தனிப்பட்ட துரியோதனனால் இத்தகைய கொடுஞ்செயல் நேர்ந்திராதென்பது ஈற்றடியின் கருத்து; இனி, போர்செய்யும் பாண்டவர் சூதாடுதல் எமக்குத்தகாதென்று மறுத்திருந்தால், இத்தகைய அழிவு நேருமோ? என்ற கருத்துப்படப் பொருள் கூறுவாருமுளர். (376) | 224. | என்னே குடியிற்பிறந்தாருக் கிருப்பன் றிவ்வூ ரினியென்பார், முன்னே யோடி முறையிட்டான் முனியுங் கொல்லோவெமை யென்பார், பின்னே யிரங்கி யழுதழுது பேதுற் றின்னல்பெரிதுழப்பார், அன்னே துன்பங் களைந்தின்ப மாவா யென்றேயருள்புரிவார். |
(இ -ள்.) (சிலர்), 'என்னே-இது என்ன விபரீதம்! குடியில் பிறந்தார்க்கு - நல்லகுடியிற் பிறந்துள்ளவர்கட்கு, இனி-இனிமேல், இ ஊர் இருப்பு அன்று - இந்தஅத்தினாபுரம் வசித்தற்குத் தக்க இட மன்று,' என்பார்-; (சிலர்), 'ஓடி- விரைந்துசென்று, முன்னே முறையிட்டால்-(யாம் துச்சாதனனது) எதிரில் ('திரௌபதியைநீ இவ்வாறாகச் செய்வது தகுதியன்று' என்று) முறையிடுவோமாயின், எமைமுனியும்கொல் ஓ - (அத்துச்சாதனன்) எங்களைக் கோபித்துக் கொள்வானோ?'என்பார்-; (சிலர்), பின்னே |