பக்கம் எண் :

சூதுபோர்ச் சருக்கம் 356

இரங்கி அழுது அழுது பேதுற்று இன்னல் பெரிது உழப்பார் - திரௌபதியின்
பின்னே சென்று இரக்கங்கொண்டு கதறியழுது மனங்கலங்கி மிகவுந்
துன்பப்படுவார்கள்; (சிலர்), 'அன்னே-தாயே! துன்பம் களைந்து இன்பம்
ஆவாய்-(விரைவில்) இத்துன்பம் ஒழிந்து இன்பமடைவாய்,' என்று-, அருள்
புரிவார்-கருணைகொண்டு கூறுவார்கள்;  (எ - று.)

    "கொடுங்கோன்மன்னர் வாழுநாட்டிற், கடும்புலிவாழுங்காடு நன்றே"
என்பவாதலால், கொடுங்கோல்மன்னனான துரியோதனனது அத்தினாபுரியில்
வாழ்ந்தால் குலமகளிரைப் பிறர் தீண்டுதல் முதலிய பலவகை முறைகேடுகள்
நிகழக்கூடுமென்று அஞ்சி அவ்வூரார், 'குடியிற் பிறந்தாருக்கு இருப்பன்று
இவ்வூர்' என்பாராயினர்.  என்னே-இரக்கக்குறிப்பு.  காந்தாரியின்
அந்தப்புரத்திலிருந்து துரியோதனன் புதிதாகக் கட்டிய மண்டபத்திற்குத்
துச்சாதனன் திரௌபதியை இழுத்துக்கொண்டு செல்லும்போது கண்ட
ஜனங்களின்செய்தி கூறுவன இப்பாடல்களெல்லா மென அறிக.  அப்பொழுது
திரௌபதிக்கு நேர்ந்த துன்பங்கள் யாவும் இன்பமாய் மாறவேண்டுமென்று
தமது வேண்டுகையைச் சனங்கள் ஈற்றடியால் தெரிவித்தனர்.  அன்னே -
அன்னையென்பதன் ஈறுதிரிந்த விளி.  முன்னே - (துரியோதனனது) எதிரிலே
யென்றலுமாம்.                                                (377)

225.பறைவன் களிற்றுப் பலபுரவிப் பைம்பொற்
                         றடந்தேர்ப்பாஞ்சாலர்க்கு,
இறைவன் பாவை யாங்காண விவையோ படுவ தென்
                         றுரைப்பார்,
பொறைவண் சிந்தைத் தருமனுக்குப் பொய்ச் சூதறிந்தும்
                         பொரவென்ன,
குறைவந் ததுதன் விதிவலியாற் குறைந்தான் யாவுங்
                         கொடுத்தென்பார்.

     (இ -ள்.) (சிலர்), 'பறை வல் களிறு - பிளிறுகின்ற வலிய யானைகளையும்,
பல புரவி - பல குதிரைகளையும், பைம் பொன் தட தேர் - பசிய
பொன்மயமான பெரியதேர்களையு முடையவனான, பாஞ்சாலர்க்கு இறைவன் -
பாஞ்சால தேசத்தார்க்கு அரசனாகிய துருபதனுடைய, பாவை - அழகிய
மகளாகிய திரௌபதி, யாம் காண-நாங்கள் கண்ணாற்காணும்படி, இவையோ
படுவது-இத்துன்பங்கள் படுதலாகுமோ? (படுதல் தகாதென்றபடி);' என்று
உரைப்பார்-; (சிலர்) 'பொறை வள் சிந்தை தருமனுக்கு-பொறுமையும் உதார
எண்ணத்தையுமுடைய தருமபுத்திரனுக்கு,-'சூது-சூதானது, பொய் - பொய்க்கு
இடமானது' (என்று), அறிந்தும் - தெரிந்திருந்தும், பொர - (அப்பொய்ச்சூதை)
ஆடும்படி, என்ன குறை வந்தது-(புத்திக்குக் குறைவு நேரிட்டதே! இது)
எவ்வளவு குறைவாய் விட்டது! [மிகவும் அறிவு குறைந்து விட்டது என்றபடி]:
தன் விதிவலியால்-தன்னுடைய ஊழ்வினையின் வலிமையால், யாவும் கொடுத்து -
[தனது] எல்லாப் பொருள்களையும் (சூதில் பந்தயம் வைத்துத்) தோற்றிழந்து,
குறைந்தான்-மிக்க 'தாழ்வை அடைந்து விட்டான்' என்பார்-; (எ - று.)