களிறு, புரவி, தேர் என்பன - காலாட்படைக்கும் உபலக்ஷணம். சதுரங்கசேனைகளையுமுடைய பாஞ்சாலதேசத்தரசனது புத்திரி இத்துன்பங்களைப் படத்தக்கவளல்லள் என்ற இவ்வாக்கியத்தில் ராஜபுத்திரியாயிருத்தலும் பெருந்துன்பத்தை யனுபவித்தலுமென்ற தகாதவற்றிற்குச் சேர்க்கையைக் கூறுதலாகிற தகுதியின்மையணி தோன்றும்: இது, வடமொழியில் விஷமாலங்கார மெனப்படும். எல்லா நீதிகளையு முணர்ந்த தருமபுத்திரன் 'சூதாடுதல் தவறு' என்பதை உணர்ந்திருந்தும் சூதாட இசைந்தது ஊழ்வினைப்பயனே யென்பது, பின்னிரண்டடியின் கருத்து. பறை வன்களிறு என்பதற்கு - பறைகளை (முதுகிலேற்றப்பட்ட) வலிய யானைகள் என்று கூறுவாரு முளர். இவையோ, ஓகாரம்-இரக்கம். குறை - மதிக்குறை, அறிவுகேடு. தருமனுக்கு என்ன குறை வந்தது என இயையும். (378) 226.-திரௌபதி ராஜசபையைச்சேர்தல். நெடுமா நகரிற் சனமனைத்து நேயம் பெறக்கண் டிவைகூற வடுமா மரபிற் குறத்தேடு மன்பே ரவையின் முன்புக்காள் கொடுமா மலர்க்கண் புனல்சோரக் குலைந்தே கிடந்த குழல்சோரத் தடுமா றுள்ளந் தனிசோரத் தலைநா ளளித்த தழல்போல்வாள். |
(இ -ள்.) நெடு மா நகரில் - மிகப்பெரிய அத்தினாபுரியிலுள்ள, சனம் அனைத்தும் - மனிதர்களெல்லாரும், கண்டு - (திரௌபதியின் நிலைமையைப்) பார்த்து, நேயம் பெற இவை கூற - (அவளிடத்து) அன்புமிகுவதனால் இவ்வாறான வார்த்தைகளைச் சொல்ல, தலைநாள் அளித்த தழல்போல்வாள் - முற்காலத்தில் (தன்னைப்) பெற்ற யாகாக்கினியைப் போல்பவளாகிய திரௌபதி,-மா மலர் கண் கொடு புனல் சோர - பெரிய தாமரை மலர்போன்ற (தனது) கண்களிலே பொருந்தி நீர் பெருகவும், குலைந்தேகிடந்தகுழல் சோர - (துச்சாதனன் பிடித்திழுக்கையில்) அவிழ்ந்துவிட்ட கூந்தல் விழுந்து புரளவும், தடுமாறு உள்ளம் தனி சோர - கலக்கங் கொண்ட மனம் தனியே [துணையின்றிச்] சோர்வடையவும், மா மரபிற்கு வடு உற தேடும் மன் பேர் அவையின் முன் - (தனது) பெரிய வமிசத்துக்குப் பழிமொழியை மிகுதியாக உண்டாக்குகின்ற துரியோதனராசனது பெரிய சபைக்கு முன்னாக, புக்காள் - போய்ச் சேர்ந்தாள்; (எ - று.) மகாபதிவிரதையாகிய திரௌபதியைத் தீண்டக்கூடாத காலத்தில் அநியாயமாய்ப் பலர் முன்னிலையில் மானபங்கமுண்டாகுமாறு சபைக்குப் பிடித்திழுத்துக் கொண்டு வரும்படி கட்டளையிட்டன னாதலால், துரியோதனனை, 'வடு மாமரபிற்கு உறத்தேடும் மன்' என்றார்; மகாபாதகனைப் பெறுவது குலத்திற்கே வசைக்கிடனா மென்க. வடு - புண்பட்டதனாலான தழும்பு: இங்கு நெடுநாள் நிற்கும் பழிக்கு இலக்கணை. 'இவை' என்றது - கீழ் ஐந்து கவிகளிற் கூறியவற்றைக் குறிக்கும். கொடும்புன லெனப் பண்புத்தொகையாக இயைத்து, (நூற்றுவருடைய குடியைக் கெடுத்தற்குக் காரணமாகுமாறு) கொடிய துயர்க்கண்ணீர் |