பக்கம் எண் :

சூதுபோர்ச் சருக்கம் 358

என்றும்பொருள் கூறலாம்:  எளியாரைக் காணரமின்றி வலியார் வருத்த
அவ்வெளியார் அதற்குமாறுசெய்ய வலியற்றவராய் அழுத கண்ணீர், முறைமை
தவறிய அவ்வலியாரை வருத்துமென்க.  "ஏழை யழுதகண்ணீர் கூரிய
வாளொக்கும் ", "துணையிலர். . . . . ., மாற்றத்தாற் செற்றாரென வலியார் -
ஆட்டியக்கால், ஆற்றாதவரழுத கண்ணீரவை யவர்க்குக், கூற்றமாய்
வீழ்ந்துவிடும்", "மனு நெறி முறையின் வழக்கிழந்தவர்தாம், மனமுற மறுகிநின்
றழுத கண்ணீர், முறையுறத் தேவர் மூவர் காக்கினும், வழிவழியீர்வதோர்
வாளாகும்மே", "அல்லற்பட்டாற்றா தழுத கண்ணீரன்றோ செல்வத்தைத்
தேய்க்கும் படை" என்பன இங்குக் காணத்தக்கவை.  'சோர' என்ற சொல்
ஒருபொருளிலேயே பலமுறை வந்தது - சொற்பொருட்பின்வருநிலையணி.
திரௌபதி கற்பு நெறியில் மிகத்தூய ளாதலால் அவட்கு வேள்வித்தீயை
உவமை கூறினார்;  காரியமாகிய திரௌபதிக்கு அவள் தோற்றத்திற்குக்
காரணமான தழலை உவமைகூறியது ஏற்கும்.  கொடு=கொண்டு.  மலர் -
கருங்குவளையுமாம்.                                          (379)

227.-அச்சமயத்தில்எல்லாவரசரும் இரங்கித்தலை கவிழ,
திருதராட்டிரன் வாளாவிருத்தல்.

நாணே முதலா நாற்குணனு நண்ணுங் கற்புநயந்த ணிந்த,
பூணே யணையா ளழுதரற்றிப் புன்பே ரவையிற் புகுஞ்சோகங்,
காணேமென்று நிலநோக்கிக் கதிர்வே னிருப ரிருந்திரங்கக்,
கோணேநேர்பா டாயிருந்தான் குருடென் றுரைக்குங் கொடியோனே.

     (இ -ள்.) '(மகளிர்க்குஉரிய), நாணே முதல்ஆம் நால்குணனும் - நாணம்
முதலாகிய நான்கு குணங்களையும், நண்ணும் கற்பும் - உறுதியாகப் பொருந்திய
கற்புநிலையையும், நயந்து  அணிந்த - விரும்பி (ஆபரணங்களைப்போல)
மேற்கொண்ட, பூணே அனையாள் - (உலகத்திற்கே) ஆபரணம்போலச்
சிறந்தவளாகிய திரௌபதி, அழுது அரற்றி - கதறியழுது கொண்டு, புல்பேர்
அவையில் புகும் - இழிவான அந்தப் பெரிய ராசசபையிலே புகும்போது
உண்டான, சோகம் - வருத்தத்தை, காணேம் - (கண்ணினாற்) காண மாட்டோம்,'
என்று - என்றுசொல்லி, கதிர் வேல் நிருபர் - ஒளியையுடைய
வேற்படையையேந்திய அரசர்கள், நிலம் நோக்கி இருந்து இரங்க -
(தலைகவிழ்ந்து) பூமியைப் பார்த்துக் கொண்டேயிருந்து வருந்த,- குருடு என்று
உரைக்கும் கொடியோன் - குருடனென்று சொல்லப்படுகின்ற கொடும்பாவியான
திருதராஷ்டிரன், கோணே நேர்பாடு ஆய் இருந்தான் - கோணலையே
நேராகக்கருதிச் சும்மா இருந்தான்; (எ - று.)

    திரௌபதி மிக்க அலங்கோலமாகப் பெருந்துக்கத்துடன் வருங்காட்சியைப்
பார்த்துச் சகிக்க முடியாதிருத்தலால், அவையிலுள்ள நிருபர் அவளைக் காணாது
தலைகவிழ்ந்து நிலம்நோக்குபவராயிருக்க, தனது புதல்வன் செய்த
பொல்லாங்குகளெல்லாம் மிகச் சரியானவையென்று அவற்றை அங்கீகரித்துக்
குருடான திருத