| ராட்டிரன் கோணேநேர்பாடா யிருந்தானென்பதாம். 'மற்றையரசர்கள் நேர்மையை வளைவாகக் கொண்டனர் [நேராயிருப்பதை விட்டுத் தலை குனிந்தனர்]; திருதராட்டிரனோ கோணலை நேராகக் கொண்டான் [முறைகேடானதை நியாயமென எண்ணியிருந்தான்] எனச்சொற்போக்கில் ஒருநயந்தொனித்தல் காண்க. நாணம் மடம் அச்சம் பயிர்ப்பு என மகடூஉக்குணம் நான்காம்; அவற்றுள் நாணமாவது - செய்யத்தகாதவற்றில் உள்ளமொடுங்குதல்; மடமாவது - எல்லாம் அறிந்தும் ஒன்றும் அறியாது போலிருத்தல்; கொளுத்தக்கொண்டு கொண்டது விடாமையெனவும் படும்; அச்சமாவது - புதியதைக் கண்டவிடத்து அஞ்சுதல்; பயிர்ப்பாவது - தன் கணவனல்லாத ஆடவரது ஆடை முதலியன தன்மேற்பட்டால் அருவருத்தல். உலகத்து மகளிர்க்கெல்லாம் ஆபரணம்போலச் சிறந்து நிற்றலால் திரௌபதி, 'பூணேயனையாள்' எனப்பட்டாள். துஷ்டசதுஷ்டர் கூடியிருத்தலாலும், இவ்வாறு முறைகேடான செய்கையைத் தமது பெருவலியால் நிகழவொட்டாது தடுக்காத அரசர்கள் பலரும் நிறைந்திருத்தலாலும், அச் சபை 'புன்பேரவை' எனப்பட்டது. குருடு - இழிப்பினால், உயர்திணையை அஃறிணையாகக்கூறிய திணைவழுவமைதி. (380) 228.-துஷ்டசதுஷ்டர்கள் தவிரயாவரும் துயருறுதல். மேகங் குருதி பொழிந்தகல்வான்மீனும் பகலே மிகவிளங்கிப் பூகம் பமுமுற் றுற்பாதம் போதியாவும் புரிந்தனவால் நாகம் புனைபொற் றுவசனுடனவிலா நின்ற நால்வருமே சோகம் பிறவா திருந்தார்மற்றொழிந்தார் யாருஞ் சோகித்தார். |
(இ -ள்.) மேகம் குருதி பொழிந்து - மேகங்கள் இரத்த மழையைப் பெய்தும், அகல் வான் மீனும் பகலே மிக விளங்கி - பரந்த ஆகாயத்திலே நட்சத்திரங்களும் பகற்காலத்திலேயே மிகுதியாக ஒளிவிட்டும், பூ கம்பமும் உற்று - பூமி நடுங்குதலுண்டாகியும், (இவ்வாறு), உற்பாதம் யாவும் - பலவகை உற்பாதங்களும், போது - அப்பொழுது, புரிந்தன - நிகழ்ந்தன; நாகம்புனை பொன் துவசனுடன் நவிலாநின்ற நால்வரும் - பாம்பினுருவத்தை யெழுதிய அழகிய துவசத்தையுடையவனான துரியோதனனோடு சேர்த்துக் கூறப்படுகிற (துச்சாதனன் கர்ணன் சகுனி ஆகிய) நான்கு பேரும், சோகம் பிறவாது இருந்தார் - சிறிதும் துக்கங்கொள்ளாதிருந்தார்கள்; மற்று ஒழிந்தார் யாரும் - இவர்களை யொழிந்த (அச்சபையிலிருந்த) மற்றையோர் யாவரும், சோகித்தார் - துயருற்று வருந்தினார்கள்; (எ - று.)-ஆல் - ஈற்றசை. மேகங்கள் இரத்தமழை பொழிதலும், இரவில் விளங்கவேண்டிய நட்சத்திரங்கள் பகலிலே விளங்குதலும், பூகம்பமுண்டாதலும் முதலியன - இனி விரைவில் நேரக்கூடிய பெரும் பொல்லாங்குகளை முன்னரே அறிவிக்குந் தீ நிமித்தங்களாம். துரியோதனனுடன் சேர்த்து நால்வர் என்பது 'நாகம் புனை பொற்றுவச |