| னுடன் நவிலா நின்ற நால்வரும்' என்பதன் கருத்து. போதியாவும் - குற்றியலிகரம். மேகம், பூகம்பம், உத்பாதம், நாகம், த்வஜம், சோகம் - வடசொற்கள். நால்வருமே, ஏகாரம் - பிரிநிலை. மற்றொழிந்தார், மற்று - அசை. 'பகலே விளங்கி'என வந்ததனால், 'உற்பாதம் போதியாவும் புரிந்தன' என்பதற்கு - (இவ்வாறு) தீ நிமித்தங்கள் பகற்காலமெல்லாம் நிகழ்ந்தன வென்னலாகாது. (381) 229.-வீமன் முதலிய தம்பிமார்மிக்கசினங்கொள்ள, தருமபுத்திரன் அவர்களைச் சாந்தப்படுத்தத் தொடங்குதல். வீமன் கதைமேற் கைவைக்க விசயன்சிலைமேல் விழிவைக்கத் தாமம் புனைதோ ளிளையோருந்தத்தங் கருத்திற் சினமூட்டத் தூமம் படுசெந் தழலவியச் சோனைமேகஞ் சொரிவதுபோல் நாமம் தரும னெனத்தக்கோனிளையோ ராற நவிலுற்றான். |
(இ -ள்.) (திரௌபதியைத் துச்சாதனன் அலங்கோலமாக இழுத்து வருவதைக் கண்டபோது),- வீமன் - வீமசேனன், கதைமேல் கை வைக்க - (தனது சத்துருக்காதினி யென்னுங்) கதாயுதத்தின்மேற் கையை வைக்கவும்,- விசயன் - அருச்சுனன், சிலைமேல் விழி வைக்க-(தனது காண்டீவமென்னும்) வில்லின்மேல் நோக்கம் வைக்கவும்,- தாமம் புனை தோள் இளையோரும் - மலர் மாலையணிந்த தோள்களையுடைய மற்றைத்தம்பியராகிய நகுல சகதேவர்களிருவரும், தம் தம் கருத்தில் சினம் மூட்ட - தம் தம் மனத்திலே கோபத்தை மிகுதியாகக் கொள்ளவும்,- தூமம் படு செம் தழல் அவிய சோனை மேகம் சொரிவதுபோல்-புகையமைந்த சிவந்த அக்கிணி தணியுமாறு விடாப் பெருமழையை மேகங்கள் பொழிவதுபோல, நாமம் தருமன் என தக்கோன் - தருமனென்று பெயர் கூறத்தக்க தகுதியையுடையவனாகிய (அவர்களது மூத்தோனான) யுதிஷ்டிரன், இளையோர் ஆற - அந்தத் (தனது) தம்பியர் நால்வரும் (மனத்திற்) சினந்தணியும்படி, நவில் உற்றான் - சொல்லத் தொடங்கினான்: (எ - று,)- அதனை, அடுத்த கவியிற் காண்க. வீமன் கதைமேற் கைவைத்ததும், விசயன் சிலைமேற் கை வைத்ததும் - திரௌபதிக்குப் பெருந்தீங்கிழைத்த பகைவரை அவற்றால் அழிப்போமென்று குறிப்பித்தவாறாம். மற்றை நால்வரைப் போலவே தானும் சினங்கொள்ள வேண்டிய இச்சமயத்திலும் தருமபுத்திரன் தான் பொறுத்ததோடு நில்லாமல், மற்றையோரையும் பொறுப்பித்து இவ்வாறு தரும குணத்தை மேற் கொண்டிருத்தலால், 'நாமம் தருமனெனத்தக்கோன்' என்றார்; இதுவும், கீழ் 95- ஆஞ் செய்யுளிற் கூறியதுபோன்ற பிரிநிலைநவிற்சியணியாம். தழலைச் சோனைமாரி சொரிந்து தணிப்பது போலத் தம்பிமாரது சினத்தைத் தருமனது சாந்தமொழிகள் தணித்து அடக்குமென்க. உவமையணி. சோனை - விடாப்பெருமழை. பீமன், கதா, விஜயன், தாமம், தூமம், நாமம், தாமன் - வடசொற்கள். (382) |