230.- தருமபுத்திரன் தனதுதம்பிமாரைச் சாந்தப்படுத்துதல். தேம்போ தனைத்து மெய்சாயுஞ்சிலபோ தலருஞ் சிலபோது, வேம்போ தங்கு வாழ்வவெலாம்வெங்கா னுடனே வேவாவோ, ஆம்போ தாகு மதுவன்றி யாயபொருள்க ளம்முறையே, போம்போ தனைத்தும் போமுன்னம்பொறுத்தீ ரின்னம் பொறுமென்றான். |
(இ -ள்.) (தருமன் தனது தம்பியரை நோக்கி),- 'தேம்போது அனைத்தும் - தேன்பொருந்திய (மற்றை) மலர்களெல்லாம், மெய்சாயும் - வாடிக்கிடக்கின்ற, சிலபோது - சில சமயங்களிலே, சிலபோது-சில சாதி மலர்கள், அலரும்- மலர்வனவாயிருக்கும்; [அது போலவே நாமெல்லோரும் வருந்தும் இச்சமயத்தில் துரியோதனாதியர்கள் மகிழ்கின்றார்கள்]; (ஆயினும்),- ஆம் போது ஆகும் - நல்வினை பலிக்கும்பொழுது (பொருள்கள் தாமே) வந்து சேரும்; வெம் கான் வேம் போது-கொடிய காடு தீப்பற்றி எரியும் பொழுது, அங்கு வாழ்வ எலாம் - அவ்வனத்தில் வாழ்கின்ற பிராணிகளெல்லாம், உடனே வேவாவோ-அக்காட்டோடு ஒரு சேர அழிந்து விடுமன்றோ! அ முறையே- அம்முறையிலே, அது அன்றி-உண்டாகும் போது உண்டாவதல்லாமல், ஆய பொருள்கள் போம் போது - அங்ஙனம் உண்டாகிய பொருள்கள் (தீவினைப்பயனால்) அழியவேண்டிய காலத்தில், அனைத்தும் போம்-எல்லாம் போய் விடும்; (ஆகையால்), முன்னம் பொறுத்தீர் - முன்பு பல சமயங்களிற் பொறுத்திருந்தீர்கள்: இன்னம் பொறும்-இன்னும் சிறிது காலம் (நமக்கு நல்லகாலம் வரும்வரையில்) பொறுத்திருங்கள், என்றான்-என்று கூறித் தேற்றினான்; (எ - று.) நாமும் நமக்காக உலகத்தார் பலரும் வருந்துகிற இச் சமயத்தில் பகைவர்களாகிய துரியோதனாதியர் முகமலர்ந்து மனங்களிப்பது இயல்பே யென்ற கருத்தை விளக்குதலால், முதலடி - பிறிதுமொழிதலணியாம். பின் மூன்றடிகளில்-சிறப்புப் பொருளைச் சமர்த்திக்கப் பொதுப்பொருள் கொண்டு வந்த வேற்றுப்பொருள்வைப்பணியும், பிறிதுமொழிதலும், கலந்துவந்தன. ஆகூழினால் வளருந் தன்மையுடைய பொருள்களெல்லாம் போகூழ் வருங்காலத்தில் இருந்த இடந் தெரியாது அழிந்தொழிந்துவிடுதல் திண்ணமே; ஆகவே, துரியோதனாதியர் இப்பொழுது நல்லகாலமிருந்து மேன் மேல் வளர்வாரானாலும் விரைவிலேயே போங்காலம் நேர்ந்து பொன்றி விடுவார்கள்: அங்ஙனம் அவர்கட்கு அழிவு காலம் நேர்கிற வரையில் நாம் பொறுத்திருக்க வேண்டு மென்றவாறாம். "நல்லாள், உடன்படின் தானேபெருகும் கெடும்பொழுதிற், கண்டனவுங் காணாக் கெடும்", "ஆம்பொருள்க ளாகுமது யார்க்குமழிக்கொண்ணா, போம்பொருள்கள் போகுமது பொறியின்வகை வண்ணம்", "ஆகுவ தாகுங் காலத் தழிவது மழிந்து சிந்திப், போகுவ தயலே நின்று போற்றினும் போதல் செய்யும்" என்றவை இங்கு நோக்கத்தக்கன. இனி இரண்டாமடியிற் கூறிய |