உபமானத்தால், யான் துன்பமனுபவிக்கின்றபோது என்னைச் சேர்ந்தவர்களாகிய நீங்களும் துன்பமனுபவிக்கின்றீர் என உபமேயம் அழைத்து, அதனையும் பிறிதுமொழிதலணியென்பாருமுளர். கங்கையிற் கழுமரம் நாட்டியும் விஷமூட்டியும் வீமனைக் கொல்லத் துணிந்த காலத்திலும், அரக்குமாளிகையி லிட்டுப்பாண்டவர்களையெல்லாம் கொல்லத் துணிந்த காலத்திலும், மற்றும் பல சமயங்களிலும் பொறுத்தார்களாதலால் 'முன்னம் பொறுத்தீர்' என்றும் "காலங்கருதியிருப்பர் கலங்காது, ஞாலங்கருதுபவர்" என்றபடி தாம் வெல்லுதற்கு ஏற்ற காலம் வாய்க்குமளவும், அதனை எதிர்பார்த்துப் பொறுத்திருக்க வேண்டுமென்பது அரசநீதியாதலால், 'இன்னம்பொறும்' என்றும் தருமன் கூறினான். பொறுத்தீர்-பொறுத்திருந்தவர்களே! என விளியாகக் கொள்ளுதலும் ஒன்று. போது - மலரும்பருவத்து அரும்பு. தேன்+போது = தேம்போது; (நன்- மெய்-11). மெய்சாயும்-அலரும்; முன்னம், இன்னம் என மாறுபட்ட சொற்கள் வந்தவை-தொடைமுரண். வேவா-'வே' என்ற வினைப்பகுதியினடியாப்பிறந்த எதிர்மறைப் பலவின்பால் வினைமுற்று. வேவாவோ - இரண்டு எதிர்மறைகள் ஒருங்குசேர்ந்து ஓருடன்பாட்டுப்பொருளை வற்புறுத்தின. ஆம், போம் - செய்யுமென்னும் வாய்பாட்டுச்சொற்கள் ஈற்றுயிர்மெய் சென்றன; (நன்:வினை - 22) (383) 231.- திரௌபதியின் மிக்கதுயரம். வாருங் கண்ணீர் வளர்கொங்கைவரைமே லருவி யெனவீழத், தாருங் குழலு மின்னுடனே தலஞ்சேர்கொண்ட லெனவீழக், கூருந்துயரி னுடன்வீழ்ந்து கோகோ வென்று கோச்சபையிற், சோருங்கொடியை முகநோக்கித் துச்சா தனன்மெய் சுடச்சொன்னான். |
(இ -ள்.) வாரும் கண் நீர்-வழிகிற கண்ணீரானது, வளர் கொங்கை வரைமேல் - மேன்மேல் வளர்கின்ற தனங்களாகிய மலையின் மீது, அருவி என-நீர் அருவி போல,வீழ-பெருகவும்,-தாரும் குழலும்-(சூடிய) மலர் மாலையும் கூந்தலும், மின்னுடனே தலம் சேர் கொண்டல் என வீழ - மின்னலோடு தரையில்படிகின்ற மேகம் போலக் கீழே விழவும்,- கோ சபையில்-அரச சபையில், கூரும் துயரினுடன் வீழ்ந்து-மிகுகின்ற துன்பத்துடனே (பூமியில்)விழுந்து புரண்டு, கோ கோ என்று சோரும் - கோவென்று கதறியழுதுவருந்துகிற, கொடியை-பூங்கொடி போன்றவளான திரௌபதியினது, முகன்-முகத்தை, நோக்கி-பார்த்து,-துச்சாதனன்-, மெய்சுட - (அவளது) உடம்பு கொதிக்குமாறு, சொன்னான்-(மிக்க கொடுமையாகக்) கூறுபவனானான்; (எ - று.)-அதனை, அடுத்த கவியிற் காண்க. திரௌபதியின் கொங்கைகட்கு வரையும், அவற்றின் மேல் வழியுங் கண்ணீர்ப்பெருக்குக்கு மலைமீது பெருகும் நீரருவியும், |